Aran Sei

ஐஐடியில் இடஒதுக்கீடு மறுப்பு `மநு’வை நடைமுறைப்படுத்தும் திட்டம் – திருமுருகன் காந்தி

“சென்னை ஐஐடியில் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மீறப்படும் இடஒதுக்கீடு நடைமுறை, சூத்திரர்கள் கல்வி பெறுவதைத் தடுக்கும் மநு சாஸ்திரத்தின் அடிப்படையிலான இந்துத்துவ ஆட்சிமுறையை நடைமுறைப்படுத்தும் செயலாகவே பார்க்கப்பட வேண்டும்” என்று மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை ஐஐடி (Indian Institute of Technology, Chennai [IIT]) கல்வி நிறுவனத்தில், பேராசிரியர், இணைப் பேராசிரியர் மற்றும் துணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் இடஒதுக்கீட்டுமுறை முறையாகப் பின்பற்றாதது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தரவுகளில் தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

பட்டியலினத்தவர்கள் (SC), பழங்குடியினர் (ST), இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஆகியோரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை முறையாக நிரப்பாமல், அவர்களுக்கான பணியிடங்களைப் பொதுப்பிரிவினரைக்கொண்டே முழுமையாக நிரப்பப்பட்டுள்ளதாக திரு முருகன் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பொதுப்பிரிவினரின் பேராசிரியர் பணிக்கான 154 பணியிடங்களை 273 பேரைக் கொண்டும், இணைப் பேராசிரியர் பணிக்கான 90 பணியிடங்களை 156 பேரைக் கொண்டும், துணைப் பேராசிரியர் பணிக்கான 98 பணியிடங்களை 170 பேரைக் கொண்டும் நிரப்பியுள்ளதாகவும், இது சராசரியாக 175% ஆகும் என்றும் திருமுருகன் காந்தி கூறியுள்ளார்.

“பொதுப்பிரிவினருக்கான இடங்களை முழுமையாக நிரப்பியதோடு, SC/ST, BC, MBC பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட வேண்டிய இடங்களை மிகக் குறைந்த அளவிலேயே இடஒதுக்கீடு முறையில் நிரப்பிவிட்டு, நிரப்பாமல் விட்ட இடங்களை உயர்சாதி பார்ப்பனர்களைக் கொண்டு பொதுப்பிரிவிலேயே நிரப்பியுள்ளனர். இது இடஒதுக்கீட்டு நடைமுறையை அப்பட்டமாக மீறிய செயலாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் பணியிடங்களுக்கான இடஒதுக்கீட்டு நடைமுறை முறையாகப் பின்பற்றப்படுவதில்லை என்பது நீண்ட காலக் குற்றச்சாட்டாக இருக்கிறதென்றும் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுகிறது என்றும் தெரிவித்துள்ள அவர், கடந்த வருடம் பாகுபாட்டின் காரணமாகப் பாத்திமா லத்தீப் என்னும் மாணவி மரணித்ததையும் நினைவு கூர்ந்துள்ளார்.

“இடஒதுக்கீட்டைப் பின்பற்றிப் பணியிடங்களை நிரப்புவது மோடியின் 6 ஆண்டுக் கால ஆட்சியில் மோசமடைந்துள்ளது என்றும் உயர்சாதி பார்ப்பனர்கள் பயனடையும் வகையில் பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீட்டைக் கேட்காமலே கொண்டுவந்து உடனடியாக நடைமுறைப்படுத்தியதும், தமிழ்நாட்டின் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடுவதும் சான்றாக உள்ளது. வங்கிகள் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் இதே நிலையைத்தான் மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இடஒதுக்கீட்டின் நோக்கத்தைச் சிதைக்கும் வகையில் கல்வியை வணிகமயமாக்குவதையும், இடஒதுக்கீட்டைத் தடுக்கும் வகையில் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்குவதிலும் மோடி அரசு முழு வேகத்தில் செயல்படுகிறது” என்று திருமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக அரசின் சமூகநீதிக்கு எதிரான போக்கை மே பதினேழு இயக்கம் வன்மையாகக் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.

சென்னை ஐஐடி உட்பட மத்திய அரசின் அனைத்துக் கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டு முறை முழுமையாக முறையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்