Aran Sei

அருந்ததிராய் நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம் – பன்முகத்தன்மையை அழிக்கும் செயல் – கனிமொழி

கில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் (ஏபிவிபி) எதிர்ப்பின் பேரில், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், எழுத்தாளர் அருந்ததி ராயின் புத்தகத்தை முதுகலை ஆங்கிலத்திற்குப் பாடமாக இருந்த ‘தோழர்களோடு நடைபயணம்'(, Walking with the Comrades) என்கிற புத்தகத்தைத் திரும்ப பெற்றுள்ளது. இப்புத்தகம் மாவோயிஸ்டுகளைப் பற்றியது.

“இந்த நூல் 2017 ஆம் ஆண்டில் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்புதான் எழுத்தாளர் ராய் மாவோயிஸ்டுகளைப் புகழ்ந்துரைத்திருப்பது எங்கள் கவனத்திற்கு வந்தது. எனவே இந்த விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் ஒரு குழுவை அமைத்தோம், அந்தக் குழு நூலைத் திரும்பப் பெற பரிந்துரைத்தது, ”என்று கடந்த ஆண்டு துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திரு. பிச்சுமணி தி இந்துவிடம் தெரிவித்தார்.

இந்த நூல் மாவோயிஸ்டுகளால் செய்யப்படும் கொலைகளை வெளிப்படையாக ஆதரிக்கிறதென்று ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்கின்(RSS)  மாணவர் அமைப்பான  ஏபிவிபி குற்றம் சாட்டியுள்ளது.

புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டதற்கு குறித்துப் பல்வேறு தரப்பில் கண்டங்கள் எழுந்துள்ளன. மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் “பல்கலைக்கழகங்களில் பாடத்திட்டக்குழு, கல்விக்கான நிலைக்குழு , ஆட்சிக்குழு ஆகிய மூன்று கூட்டங்களிலும் விவாதித்து ஒப்புதல் பெற்ற பிறகு தான் எந்த ஒரு பாடத்திட்டத்தையும் சேர்க்கவோ அல்லது நீக்கவோ முடியும் . ஆனால் ABVP கோரிக்கையின் விளைவாக துணைவேந்தர் அவசர அவசரமாக தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பது ஏற்புடையது அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழியும், இது சமூதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்துவிடும் செயல் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்வீட்டர் பக்கத்தில் “ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும்” என்று கூறியுள்ளார்.

 

பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜெ. பாலசுப்ரமணியமிடம் அரண்செய் கருத்து கேட்டபோது “அரசால் தடை செய்யப்பட்ட நூலைப் பாட திட்டத்தில் வைத்தால் கூட குற்றம் என்று சொல்லலாம். புக்கர் பரிசு பெற்று உலக அளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும் ஒருவரின் நூலைப் பாடத்திட்டத்தில் நீக்கி இருப்பது மோசமான விஷயமாகப் பார்க்கிறேன். பல்வேறு முரண்களைப் பேசி உரையாடித்தான் மாற்றங்களை உருவாக்க வழிவகை செய்யமுடியும்” என்று கூறினார்.

காலனிய காலத்தில் பகத்சிங், பாரதியின் கருத்துக்களை ஆங்கிலேய அரசு தண்டிக்கப் படவேண்டிய தேசதுரோக எழுத்துக்களாகப் பார்த்தது, இன்று அது தேச பக்தியாகக் கொண்டாடப் படுகிறது. எழுத்து காலம், இடம், சூழல் எல்லாவற்றையும் கடந்து வரலாற்றில் நிற்பது, எழுத்தை ஒரு நேர்கோட்டுத் தன்மையில் புரிந்துகொள்ள முடியாது.

எல்லோரையும்விட பகத்சிங்தான் தேசபக்தன். நாட்டின் மீதுள்ள தீவிர பற்றால்தான் நிகழும் முறைக்கேடுகளையும் அநீதிகளையும் நாம் கேள்வி எழுப்பி போராடவேண்டி இருக்கிறது. தங்களைத் தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொள்பவர்களைவிட நாட்டின் மீது அக்கறையும் அன்பும் கொண்டவர்கள் நாம்தான் என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.

” மாணவர்களுக்கு ஜனநாயகம் என்பது ஓட்டளிப்பது மட்டும்தான் என்று சொல்லிக் கொடுக்க போகிறோமா? ஆளும் வர்க்கத்தின் கருத்துக்களை மட்டும் படிப்பிப்பது கல்வியே ஆகாது. மாற்றுக் கருத்துக்களைப் பேச, படிக்க பிள்ளைகளுக்கு வழிவகை செய்து கொடுப்பதே ஜனநாயகம், அது எல்லோருடைய கூட்டுப் பொறுப்பும் கூட ” என்று மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர்  ஜெ. பாலசுப்ரமணியம் கருத்துத் தெரிவித்தார்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்