Aran Sei

“இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்களுக்கு எதிரான கட்சி பாஜக”- எம்.எச் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

Credits The Hindu

ஓபிசி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு கிடையாது என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து எம் எச் ஜவாஹிருல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய இடஒதுக்கீட்டில் தமிழகத்தின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதலே 50% இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

இதில் தீர்ப்பளித்துள்ள உச்ச நீதிமன்றம், “நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு உத்தரவிட முடியாது. 27% இடஒதுக்கீடையும் வழங்க உத்தரவிட முடியாது.” என்று தெரிவித்துள்ளது.

இது குறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், “பரதிய ஜனதா கட்சி பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரானது என்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதுடன் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் வழங்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு பெரும் மனவேதனையை அளிக்கின்றது.

சமூக நீதிக்கு எதிரான கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாஜகவின் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரமே இந்த தீர்ப்பிற்கு வழிவகுத்துள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமல்ல 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் கூட கொள்கை முடிவு எடுக்கும் வரை அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய அரசின் இந்த அக்கிரமமான நிலைப்பாட்டின் காரணமாகவே உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

மத்திய அரசின் இந்த சமூக நீதிக்கு எதிரான நிலைப்பாட்டின் காரணமாகத் தமிழகத்தில் உள்ள 50 விழுக்காடு இட ஒதுக்கீடும் மத்திய அரசின் 27 விழுக்காடு இட ஒதுக்கீடும்  மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்கும் வரையில் காலவரம்பின்றி பறிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிரான சமூக நீதிக்கு விரோதமான கட்சியே பாரதீய ஜனதா கட்சி என்பது இந்த விவகாரத்தில் மீண்டும் அம்பலமாகின்றது.

இட ஒதுக்கீட்டை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்ற பாஜக  திட்டத்தின் முன்னோட்டமாகவே இந்த தீர்ப்பு அமைந்துள்ளது.

உடனடியாக தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி சமூக நீதியின் தொட்டிலான தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் முடிவுகளை எடுத்துப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளைக் காக்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.”

இவ்வாறு ஜவாஹிருல்லா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்