Aran Sei

“தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் இருக்கிறார்கள், பொறியாளர்கள் இல்லையே!” – உயர் நீதிமன்றம் வேதனை

Credits Interesting Engineering

​தமிழகத்தில் பொறியியல் பட்டதாரிகள் மட்டுமே உருவாகிறார்கள், பொறியாளர்கள் உருவாவதில்லை என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு ​வருத்தம் ​தெரிவித்துள்ளது.

 

​திருச்சியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர், கொரோனா பொதுமுடக்கத்தின் போது,​ தனியார் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்குப் பல மாதங்களாகவே​​​ ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இதனால் அவர்கள் பெரும் அவதிக்கும் உள்ளாகி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மனுவில், “கடந்த 17.07.20 அன்று உயர் நீதிமன்ற உத்தரவின்படி அரசு, தனியார் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் 40 சதவீத கல்விக் கட்டணத்தை வசூலிக்கலாம். ஆனால், மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூல் செய்த போதிலும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை.” என்று கூறப்பட்டுள்ளதாக தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து புகார் தெரிவிக்க அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ள இணையதள முகவரியில் அளிக்கப்படும் புகார்களுக்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படும் வரையில் இந்தாண்டு​​​​​​​ பொறியியல் படிப்புகளுக்​கு​ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடத்துவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரியுள்ளார்.

நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த மனுவை விசாரித்துள்ளது.

விசாரணையின் போது, “தமிழகத்தில் தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதற்கு யாரைக் காரணம் சொல்வது? கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கிய அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலையா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்​​​​​​.​​​

“மாணவர்கள், ஆசிரியர்கள் சிரமப்படுவதற்கு அனுமதி வழங்கியவர்கள்தான் காரணம்.” என நீதிபதிகள் அமர்வு குற்றம் சாட்டியுள்ளதாகவும் தி இந்து குறிப்பிட்டுள்ளது.

“தற்போது தமிழகத்தில்​ திறமை வாய்ந்த​ பொறியாளர்கள் உருவாவதில்லை.​ வெறும்​ பொறியியல் பட்டதாரிகள் ​மட்டுமே உருவாகி​ வருகிறார்கள்.​ ​இது போன்ற பிரச்சினைகளைக் களைய வேண்டும். தே​வையைப் பொறுத்தே கல்லூரிகளை தொடங்க வேண்டும்” என​வும் நீதிபதிகள்​ ​வலியுறுத்தியுள்ளார்கள்​.

​மனு தொடர்பாக தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகிகள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிபதிகள் அமர்வு ஒத்தி வைத்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்