Aran Sei

`பல்கலைக்கழகம் பவ்விப் பணிந்து செயல்படுவது, மகா வெட்கம்’ – கி.வீரமணி காட்டம்

“அருந்ததி ராயின் புத்தகத்தை, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்தால், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், 2017-ம் ஆண்டு முதல் முதுகலைப் படிப்புக்கான சமூகவியல் பாடத்தில் இடம்பெற்றிருந்த எழுத்தாளர் அருந்ததி ராயின் ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ (Walking With The Comrades) என்ற ஆங்கிலப் புத்தகம் நீக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராயின் நூலை பல்கலைக்கழகம் நீக்கியதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, கி.வீரமணி இன்று (நவ. 12) வெளியிட்ட அறிக்கையில் “கருத்துச் சுதந்திரம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உரிமைகளில் பறிக்கப்பட முடியாத அடிப்படை மனித உரிமை. அதிலும் பல்கலைக்கழகப் பாடத் திட்டங்கள் வாயிலாகப் பல்வேறு வகை கருத்தாக்கங்களை மாணவர்கள் அறிந்து கொள்வது அவசியம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“அம்முறையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத் திட்டத்தில் பாடப் புத்தகமாக இருந்த பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய ‘வாக்கிங் வித் தி காம்ரேட்ஸ்’ (Walking with the Comrades) எனும் துணைப் பாட நூலை, ஆர்எஸ்எஸ் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பு எதிர்ப்புத் தெரிவித்த ஒரே காரணத்தால், பல்கலைக்கழகப் பாடத் திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!” எனத் தெரிவித்துள்ளார்.

“முன்பு தந்தை பெரியாரின் ‘உண்மை இராமாயணம்’ நூலின் இந்தி மொழிபெயர்ப்பான ‘சச்சி இராமாயண்’ உ.பி. அரசால் தடை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த போது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என்ற முறையில் நெருக்கடி நிலை காலத்தில்கூட தடை நீக்கப்பட்டது. ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்; ஆயிரம் எண்ணங்கள் பரவட்டும்’ என்று உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படி நடைபெறுகிறது என்றால் தமிழ்நாட்டில் பாஜக அரசு நடக்கிறதா? அல்லது அதிமுக அரசா? இரண்டும் ஒன்றுதானே. அவர்கள் எஜமானர்கள், இவர்கள் அரசு அடிமை அரசா? பல்கலைக்கழகங்கள் பவ்விப் பணிந்து செயல்படுவது, மகா வெட்கம்!” எனக் கூறியுள்ளார்.

“உடனடியாக இத்தடையை நீக்கி மீண்டும் பாடமாக்க வேண்டும். பல்கலைக்கழகப் பட்டதாரிகள் பல்வகை சிந்தனைகளைத் தெரிந்துகொள்வது எப்படித் தவறு ஆகும்? வைக்கும்போதே அது தெரிந்துதானே பாட நூலாக வைக்கப்பட்டது? இப்படி மிரட்டினால் அது எங்கு போய் நிற்கும்?”. இவ்வாறு கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்