Aran Sei

ராஜஸ்தான் – சாதிய பயங்களால் கல்வியை இழக்கும் பெண் குழந்தைகள்

Image Credit : thewire.in

கைராபாத்தின் (ராஜஸ்தான்) எழுதப்படாதச் சட்டம் மிகத் தெளிவாக உள்ளது. பெண்கள் பருவம் அடைந்து விட்டால் கல்வியைத் தொடரலாம் ஆனால் பெண்கள் பள்ளியில் மட்டும்.

மக்கள் தொகை அடிப்படையில் ‘கீழ்சாதியினர்’ பெரும்பான்மையாக உள்ள ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தின் கைராபாத்தில்தான் இந்த தாழ்ப்பாள் போடப்பட்டுள்ளது. சவர்ணர்கள் (தலித்துகளை தவிர பிற இந்துக்கள்) எண்ணிக்கையில் சிறுபான்மையினராக இருந்தாலும் அவர்களால் தங்கள் விருப்பத்தை நிலைநாட்ட முடிகிறது. அங்கு முஸ்லீம்களும் சிறு எண்ணிக்கையில் உள்ளனர்.

பல பத்தாண்டுகளுக்குமுன் கைராபாத்தைச் சேர்ந்த சவர்னர்கள் ஒரு அனைத்து பெண்கள் பள்ளியைத் திறப்பதற்காக சிறு நிலத்தைக் கொடுத்தார்கள். இதன் நோக்கம் மிக எளிமையானது- இருபாலர் பள்ளி வருவதை நிரந்தரமாக தடுப்பது என்பதே.

தற்போது அரசு நடத்தும் இந்த அனைத்து பெண்கள் நடுநிலைப் பள்ளியில் 300 பெண்கள் படிக்கிறார்கள். இதில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. ஆறாம் வகுப்பிற்குக் கீழ் படிக்கும் பெண்கள் பருவம் அடைந்திருக்க மாட்டார்கள் என்பதாலேயே அவர்கள் இருபாலர் பள்ளியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆலியா, கைராபாத்தில் உள்ள ஒரு இருபாலர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கிறாள். “அவள் சிறு பெண்ணாக இருப்பதால் விவரம் தெரியாது. ஆறாம் வகுப்பு படிக்கும் போது பூப்பெய்திவிடுவாள் என்பதால் நாங்கள் அவளை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டி வரும்.” என்கிறார் ஆலியாவின் தந்தை.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

“பெண்கள் பள்ளி, பருவம் அடைந்த பெண்களுக்கு பாதுகாப்பைத் தருகிறது” என்கிறார் ஹிமேந்திர சர்மா. இவரது மனைவி சுசீலா சர்மாதான் கிராமத்தின் முன்னாள் தலைவர். ஆனால் அவருடைய கணவர்தான் இவருடைய பெயரில் கிராமத் தலைவராக செயல்பட்டார். சர்மாவைப் பொறுத்தவரை,” ஒரு ‘ பாதுகாப்பான சூழல்’ இருந்தால்தான் பையன்களும் பெண்களும் – குறிப்பாக வேறுபட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் – தொடர்பு கொள்ள முடியாது.” என்று கருதுகிறார்.

கைராபாத் மக்கள் இருபாலர் பள்ளிகள்தான் சாதி மற்றும் மத கலப்புத் திருமணங்களுக்கு பிறப்பிடம். அது நீண்டகாலமாக பின்பற்றி வரும், தாங்கள் பாதுகாத்து வரும் சாதிப் படிநிலையை தகர்த்துவிடும் என நம்புகின்றனர். இதை தவிர்ப்பதற்கான அவர்களது கட்டளை பெரும்பாலும் இயல்பாக்கப்பட்டுவிட்டது… இதுவரை.

மாநில அரசு வட்டார அளவில் ஆங்கில வழிப் பள்ளிகளை அமைக்கும் திட்டத்தின்படி இந்த பெண்கள் பள்ளியைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த பள்ளி ஆங்கில வழிக் கல்வி தரும் பள்ளியாக மாறினால் அனைத்து பெண்கள் பள்ளியாக இருக்க முடியாது. அரசின் திட்டப்படி பாலின வேறுபாடு இருக்கக் கூடாது.

கைராபாத், இந்த மாற்றத்தை, இருக்கும் நிலையின் மீதான தாக்குதலாக பார்ப்பதுடன், ‘மேலும் நல்லதிற்காக’ தங்கள் பெண்களை பள்ளியிலிருந்து விலகுமாறு கூற வேண்டியிருக்கும் என்றும் கருதுகிறார்கள்.

ஆலிஷாவால் தொலைக்காட்சி விளம்பரத்தில் வரும் அத்தனை ஆங்கிலச் சொற்களையும் படிக்க முடிகிறது. கடந்த கல்வி ஆண்டில் முழு பள்ளியிலும், ஆங்கிலப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களை எடுத்த ஒரே பெண் இவர். இத்தகைய சிறப்பான செயல்திறன் இருந்த போதும் அவளுடைய பெற்றோர் அவளைப் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டனர்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

“ஒரு ‘பிரச்சினை’ எங்கள் குடும்பத்திலேயே ஏற்பட்டு விட்டது. அதிலிருந்து அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்று அழுத்தம் தரப்படுகிறது.” என்கிறார் தயக்கத்துடன் ஆலிஷாவின் தந்தை அம்ஜத் நூர்.

நூரின் மருமகள் இருபாலர் பள்ளியில் படித்த போது ஒரு இந்து மதத்தை சேர்ந்தவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி விட்டார். இதைத்தான் ஒரு “பிரச்சினை” என்று அவர் கூறினார். ஆலிஷா இருபாலர் பள்ளிக்குச் செல்வது அவர் மனதை தொந்தரவு செய்ததைப் போல வேறு எதுவும் தொந்தரவு செய்யவில்லை.

ஐந்தாம் வகுப்பு வரை, ஆலிஷா ஒரு சிறிய தனியார். பள்ளியில் படித்தார். இந்த ஆண்டு, கைராபாத்தின் விதிமுறைப்படி, அவள் அனைத்துப் பெண்கள் பள்ளியில்தான் பயில வேண்டும். ஆனால் அது இருபாலர் பள்ளியாக மாறிவிட்டதால், அவளது பெற்றோர்கள் அவளை அங்கே சேர்க்க விரும்பவில்லை. ஆலிஷா இது மாற வேண்டும் என இந்த ஆண்டு முழுவதும் கடவுளை வேண்டிக் கொண்டிருக்கிறாள்.

எப்பொழுதெல்லாம் தன் தந்தை நூர் நல்ல மனநிலையில் இருக்கிறாரோ அப்போதெல்லாம் பக்கத்து கிராமத்தில் உள்ள பெண்கள் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஆனால் அதனை உடனடியாக மறுத்து விடுகிறார் நூர். ஏனெனில் அது தினமும் அவளை பள்ளிக்கு கொண்டு போய் விடுவது பிறகு அழைத்து வருவது என்ற தேவையற்ற கூடுதல் பொறுப்பைத் தரும் என்று நினைக்கிறார்.

“கைராபாத் பள்ளி அவர்கள் இருக்கும் தெருவிற்கு அருகிலேயே உள்ளது. ஆலிஷா கூறும் பள்ளி அரைமணி நேர நடைபயண தூரத்தில் உள்ளது. ” யாருக்கு அவ்வளவு நேரம் இருக்கிறது? பின்னர் நாள் முழுவதும் அவள் பாதுகாப்பு பற்றியே பதற்றம் இருக்கும்.” என்கிறார் நூர்.

ஆலிஷாவை பள்ளிக்குத் தொடர்ந்து அனுப்புவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. அவரது மனைவி அண்மையில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளாள். இப்போது அவன்தான் முன்னுரிமை பெற்றவன் ஆகிவிட்டான்.

“இந்த நோய்த் தொற்று நெருக்கடியால் நான் எனது வருமானத்தை இழந்து விட்டேன். இப்போது மேலும் ஒரு பொறுப்பும் (எனது மகன்) கூடிவிட்டது. அவளது படிப்புக்காக அவள் பின்னால் ஓடுவதை விட, நான் என் பொருளாதார நிலையை முன்னேற்றிக் கொள்ள வேண்டி உள்ளது” என்கிறார் நூர்.

இப்போதைக்கு அவள் தந்தையிடம் ஆலிஷா அவகாசம் பெற்றிருக்கிறாள். அவர் மனதை இடைப்பட்ட காலத்தில் மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில், அவள் படித்து வந்த பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழை வாங்க வேண்டாம் என்கிற அளவிற்கு அவள் தந்தையை ஒப்புக் கொள்ள செய்துள்ளாள்.

ஹர்ஷிதா தனது ஆங்கில பாடபுத்தகத்திலிருந்து ஒரு வாக்கியத்தை எடுத்து தனது ஏட்டில் எழுதிக் கொண்டு, தனது குட்டி ஆங்கில- இந்தி அகராதியில் அந்த வாக்கியத்திற்கான பொருளை ஒவ்வொரு வார்த்தையாகக் கூர்ந்துத் தேடிப் பார்க்கிறாள். இந்தப் பயிற்சியை சுலபமாக்கிக் கொள்ள ஆங்கில எழுத்துக்களை வரிசையாகத் தன் ஏட்டில் முதல் பக்கத்தில், விரைவாகத் தேடுவதற்கு ஏதுவாக எழுதி வைத்துள்ளாள். வாக்கியத்தில் உள்ள எல்லா சொற்களுக்கும் பொருள் கிடைத்தவுடன் அவற்றை ஒன்று சேர்த்து ஓரளவு சரியாக மொழிபெயர்த்த இந்தி வாக்கியத்தை உருவாக்கிக் கொள்கிறாள்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

“இது எனக்கு நன்றாக வேலைக்கு ஆகிறது” என்று, ஒரு புதிய மொழியுடன் பழகத் தானே கண்டுபிடித்த ஒரு முறை மீதான திருப்தியுடன் கூறுகிறாள். ஹர்ஷிதா கைராபாத்தின் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி. இதுவரை அவளது பயிற்று மொழி இந்தியாக இருந்தது. பிற பாடங்களை ஆங்கிலத்தில் படிப்பது இதுவே முதல்முறை.

இந்தத் திடீர் மாற்றத்திற்கு அவள் தயாராக இல்லை. அவளை கருத்து கேட்டிருந்தாலும் ஒரு போதும் அவள் ஆங்கிலத்தை தேர்வு செய்திருக்க மாட்டாள். ஆனால் இப்போது வேறு வழியில்லை. அனைத்து பெண்கள் பள்ளியாக இருந்ததால் இதுவரை எப்படியோ தாக்குப் பிடித்து தனது படிப்பைத் தொடர்ந்து வந்தாள். அதுவும் இப்போது ஆங்கில வழி பள்ளியாக மாறிவிட்டது.

அடுத்த ஆண்டு படிப்பைத் தொடர முடியுமா என்பதை ஹர்ஷிதாவால் உறுதியாகக் கூற முடியவில்லை. “நாங்கள் அவள் படிப்பை பாதியில் நிறுத்த விரும்பவில்லை. மற்ற பெற்றோர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்து விட்டு நாங்கள் முடிவு செய்வோம்,” என்கிறார் அவளது தாய் கிரிஜா.

“ஆங்கில பயிற்று மொழி நல்லதுதான். ஆனால் பையன்களும் படிக்கும் பள்ளியாக மாறாமல் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.” என்கிறார் அவர்.

இந்த ஆண்டு, பாடங்கள் நிகழ்நிலையில் நடத்தப்படுவதால் சில பெண்களைத் தொடர்ந்து இருபாலர் பள்ளியில் படிக்க அனுமதித்துள்ளார்கள். ஆனால் வழக்கமான பள்ளியில் ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதிப்பதற்கான வாய்ப்புக் குறைவுதான்.

இது ஒரு முக்கிய பிரச்சினை: ஏற்கனவே கைராபாத்தின் கல்வியறிவு மிக மோசமான போக்கிலேயே உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இங்கு ஆண்கள் கல்வி அறிவு விழுக்காடு 81.53, அதேசமயம் பெண்களின் கல்வியறிவு விழுக்காடு 53.46 தான். இந்த விகிதம் மாநிலம் முழுவதும் உள்ள விகிதத்தை ஒத்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஒரு சமீபத்திய ஆய்வு அறிக்கை ராஜஸ்தான் மாநிலம் பெண்கள் கல்வியறிவில் மிக மோசமாக இருப்பதாகத் தெரிவிக்கின்றது. நாட்டிலேயே மிகக் குறைந்த பெண்கள் கல்வியறிவு விகிதத்தைக் (57.6%) கொண்டுள்ளது. ராஜஸ்தானில், ஐந்து வயதிற்கு மேற்பட்ட 43.7% பெண்கள் எந்தவித முறையான கல்வியும் பெறாதவர்கள் என்று அந்த அறிக்கை குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.

இந்த நிலையில், பள்ளிகள் இருபாலருக்குமானதாக மாறுவதால் பெற்றோர்கள் தங்கள் பெண்களை பள்ளியிலிருந்து எடுத்து விட்டால் பிரச்சினை மேலும் கணிசமாக அதிகரிக்கும்.

வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்றாலும் அதைச் சமாளிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. கைராபாத் அனைத்து பெண்கள் பள்ளியை இருபாலர் பள்ளியாக மாற்றும் பேச்சு மும்முரமான போது, சவர்னா இன பெற்றோர்களே அதிகமாக உள்ள பள்ளி நிர்வாகக் குழு அதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

தனது அதிகார எல்லைக்குட்பட்ட பகுதியில் இருந்து ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து அரசுக்கு அனுப்பும் அதிகாரம் கொண்ட வட்டார முதன்மை கல்வி அலுவலருக்கு எழுதிய கடிதத்தில் தங்கள் அனைத்து பெண்கள் பள்ளியை பரிந்துரைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தனர். மாணவர்கள் சேர்க்கப்படுவது பெண்கள் இடைநிற்றலை ஏற்படுத்தும் எனத் தெளிவாக அதில் எழுதி இருந்தனர்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

மேலும் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே ஆங்கில வழி பள்ளியாக மாற்றுவதற்கு பதில் பத்தாம் வகுப்பு வரை உள்ளதை பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அனைத்து பெண்கள் பள்ளியாக தரம் உயர்த்தித் தருமாறும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

“2019-ம் ஆண்டிலேயே பள்ளி முறையாக பன்னிரண்டாம் வகுப்பு வரை உயர்த்தப்படும் நிலையில் இருந்தது. அதற்குள் இந்த ஆங்கில பயிற்று மொழி முன்மொழிவு வந்து எங்கள் ஒப்புதல் இல்லாமலே அது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது” என்கிறார் சர்மா.

முதன்மையாக, அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் பரிந்துரையின் பேரில் தான் இந்த ஆங்கில வழி பள்ளிகளுக்கான தேர்வு பட்டியல் தயாரிக்கப் பட வேண்டும் என வழிகாட்டுதல் உள்ளதால் இந்த பிரச்சினை இப்போது அரசியல் சாயம் பெற்றுள்ளது.

இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், கிராம பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும், அதிலும் குறிப்பாக இருவரும் வேறு வேறு கட்சியையோ, சாதியையோ சார்ந்தவராக இருந்தால், போட்டியை ஏற்படுத்தி விடுகிறது. இருவரும் கிராமப்பகுதிகளில் ஆங்கில வழி பள்ளியைத் கொண்டு வந்து, தங்கள் வாக்கு வங்கியை உறுதிப் படுத்திக் கொள்ள முயல்கிறார்கள்.

கைராபாத்தில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தலித் இனத்தவராக இருக்கும் வேளையில் கிராம பஞ்சாயத்து பிரதிநிதிகள் பார்ப்பனர்களாக உள்ளனர். பார்ப்பனர்கள் ஆங்கில வழிக் கல்வியை ஏற்றுக் கொண்டாலும் இருபாலர் பள்ளிக்கு ஆதரவாக இல்லை.

கைராபாத்தில் உள்ள ஒரே அனைத்து பெண்கள் பள்ளியை ‘நீக்குவதற்கு’ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம் பைர்வாவை அவர்கள் பொறுப்பாக சொல்கிறார்கள். சாதிகளுக்கிடையே திருமணம் நடந்தால் அது “‘கீழ்சாதியினருக்கு சாதகமாக” இருக்கும் என அவர்கள் நம்புகிறார்கள். பைர்வா சமூகத்தைத் திருப்தி படுத்தவே இதைச் செய்கிறார்கள் என எங்களுக்குத் தெரியாதா?” என்கிறார் சர்மா.

மறுபுறம் பைர்வா,” ஆங்கில வழிப் பள்ளி வேண்டும் என்ற கோரிக்கை கிராமத்திலிருந்தே வந்தது என்கிறார். “இந்த வட்டாரத்தில் தங்கள் பகுதியில் ஆங்கில வழி பள்ளியைக் கொண்டு வர வேண்டும் என்று பல கிராமங்களுக்கு இடையே பலத்த போட்டி நிலவியது. அது எங்களுக்குக் கிடைத்தது ஒரு நல்வாய்ப்பு.” என்கிறார்.

ஒரு வட்டாரத்தில் ஒரு அரசுப் பள்ளியாவது பயிற்று மொழியாக ஆங்கிலத்தைக் கொண்ட பள்ளியாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் மகாத்மா காந்தி அரசு (ஆங்கில வழி) பள்ளித் திட்டம் 2019-ம் ஆண்டு ஆளும் காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்டது. இதுவரை ராஜஸ்தான் மாநில கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்ட அரசு பள்ளிகள் யாவும் இந்தியில் மட்டுமே கற்பித்து வந்தன.

எனினும், ஆங்கில வழி அரசுப் பள்ளிகளை உருவாக்க அல்லது அதற்கான நடைமுறைகளை துவக்கும் சிந்தனை மாநில அரசுக்கு வந்தது இது முதல் முறை அல்ல. 2016-ல் இதே போன்று சுவாமி விவேகானந்தர் மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற திட்டத்தை முந்தைய பாஜக அரசு துவக்கியது.

இரண்டு திட்டங்களின் நோக்கமும் பெரும்பாலும் ஒன்றாக இருந்தாலும், இரண்டு முக்கிய வேறுபாடுகள் உள்ளன. முதலாவது, காங்கிரஸ் திட்டத்தில் பள்ளிகள் மாநில கல்வி வாரியத்துடன் இணைக்கப்பட்டன. ஆனால் பாஜக திட்டத்தில் சிபிஎஸ்சியுடன் இணைக்கப்பட்டன. மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு மகாத்மா காந்தி திட்டத்தில் தனி நிதி ஒதுக்கீடு இல்லை. அதே சமயம் சுவாமி விவேகானந்தர் திட்டத்தில் இருந்தது.

வழிகாட்டுதல் விதிகளின் படி மகாத்மா காந்தி பள்ளிகள் தங்கள் முன்னேற்றத்திற்கு ‘பாமாஷா’ (அரசு பெண்கள் நலத்திட்டம்) திட்டம் அல்லது பன்னாட்டு நிறுவனங்களின் கார்பரேட் சமூக பொறுப்பு பங்களிப்பு ஆகியவை தரும் நன்கொடைகளை சார்ந்தே இருக்க வேண்டும். (ராஜஸ்தானில் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி அளிப்பவர்களை உள்ளூரில் பாமாஷா என்று அழைப்பர். உண்மையில் பாமாஷா, மகாராஜா ராணா பிரதாப் சிங் ஆட்சியில் மந்திரியாக இருந்தவர். வசுந்தரா ராஜே சிந்தியா முதல்வராக இருந்த போது 2014-ல் முற்றிலும் பெண்கள் முன்னேற்றத்திற்காக அவர் பெயரில் இந்த பாமாஷா திட்டத்தை கொண்டு வந்தார்)

வளர்ச்சி தொடர்பான அனைத்து செலவுகளையும் வழக்கமாக கொடுக்கும் பள்ளிக் குழுக்கள் இப்போது அதனை அவமானமாக கருதுகிறார்கள். நன்கொடைகளை தவறாக பயன்படுத்துவதாக உணர்வதாக கைராபாத் பள்ளிக் குழு கூறுகிறது. ”

“நாங்கள் ஏராளமான பணத்தை பெண்கள் பாதுகாப்பாக படிக்க வேண்டும் என்பதற்காக போட்டிருக்கிறோம். இப்போது மாணவர்கள் வந்தால் அது எதற்கு பயன்படப் போகிறது?” என்கிறார் குழு உறுப்பினர் நவீன் சர்மா.

அனைத்து பெண்கள் பள்ளிகளை மட்டுமே ஆங்கில வழி பள்ளிகளாக மாற்ற வேண்டும் என்ற குறிப்பான ஏற்பாடு திட்டத்தில் இல்லை. இருந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப்பள்ளிகளும் பெண்கள் பள்ளிகளே. மாணவர்கள் மட்டுமே படிக்கும் பள்ளிகளிலும், இரு பாலர் பள்ளிகளிலும் இருப்பதை விட சேர்க்கை விகிதம் அனைத்துப் பெண்கள் பள்ளிகளில் குறைவாக இருந்தாலேயே அவை தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிறது கல்வித் துறை.

“மாணவர்களின் எண்ணிக்கையும், வகுப்புகளின் எண்ணிக்கையும் அளவாக இருந்தாலே தரத்தை பராமரிக்க முடியும்” என்கிறார் ஜெய்பூரின் திட்ட பொறுப்பாளர் விகாஸ் மீனா.

பெண்கள் பருவம் அடைந்தவுடன் பள்ளியை விட்டு நிற்பது, பொதுவாக, நல்ல (செயல்படும்) கழிவறைகள் இல்லாததால் மோசமான மாதவிடாய் சுகாதாரம் இல்லாததுடன் இணைக்கப்படுகிறது. ஆனால் கைராபாத் கதையில் அது பிரச்சினையின் ஒரு பகுதிதான், உண்மையான நோக்கம் பெண் பாலுணர்வைக் கட்டுப்படுத்துவதும், பாகுபாடான சமூக எல்லைகளை அழிக்கவோ அல்லது மறு வரையறை செய்யவோ அவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதுமே ஆகும்.

– ஸ்ருதி ஜெயின்

thewire.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்