Aran Sei

ஐஐஎம் கொல்கத்தா – கல்வி நிலையத்தில் அரசியல் தலையீடு – அதிருப்தியில் ஆசிரியர்கள்

வைர விழாவை கொண்டாட வேண்டிய தருணத்தில் உள்ள கொல்கத்தா, இந்திய மேலாண்மை நிறுவனத்தின் (IIM-C) ஆசிரியர் சங்கம், மத்திய கல்வி அமைச்சகத்திற்கு டிசம்பர் 2 ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்திற்கு பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறது. நிர்வாகத்திற்கும் ஆசிரியர்களுக்குமிடையிலான பதற்றம் நீடிக்கிறது.

இந்த பதற்றநிலை, டிசம்பர் 11 ஆம் தேதி, இயக்குநர் அறிவிப்பின்படி, நடைபெறவிருந்த அனைத்து முழுநேர ஆசிரியர்களையும் உள்ளடக்கிய கல்விக்குழுக் கூட்டம், ஆசிரியர்கள் யாரும் கலந்து கொள்ள ஒப்புக் கொள்ளாததால் ரத்து செய்யப்பட வேண்டிய நிலை வரை சென்றுள்ளது.

கல்வி அமைச்சக செயலாளர் அமித் காரேவுக்கு எழுதியுள்ள கடிதம், கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுவன இயக்குநர் அஞ்சு சேத் உடனான ஆசிரியர்களின் நெருக்கடியான உறவின் உச்சத்தை சுட்டிக்காட்டி உள்ளது. அது ” தற்போதைய இயக்குநரின் பதவிக்காலத்தில், தன்னிச்சையான, பாகுபாடான, மிக குறுகிய கண்ணோட்டம் கொண்ட அவரது செயல்முறையின் விளைவாக, நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

75% ஆசிரியர்களின் சார்பாக ஐஐஎம்-சி, ஆசிரியர் சங்கச் செயலாளர் அசோக் பானர்ஜி கையொப்பம் இட்டு அனுப்பி உள்ள அந்தக் கடிதம், “கடுமையான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையும், ஆராய்ச்சிகளுக்கான செலவினங்களைக் குறைத்து வருவதும், ஆராய்ச்சி மற்றும் கல்விச் சூழலில் சரிவை ஏற்படுத்தி உள்ளது என்றும், பிந்தைய முதுகலை ஆராய்ச்சி உதவித் தொகை முற்றிலும் நிறுத்தப் பட்டுள்ளது என்றும் புகார்களை கூறியுள்ளது. மிகைப் படுத்தப்படாத சொற்களில் அது, ‘அதீத மையமாக்கலில்’ நம்பிக்கை கொண்டுள்ள தற்போதைய இயக்குநர், இந்த நிறுவனம் பின்பற்றி வரும் நடைமுறைகளையும் விதிகளையும், செயல்முறைகளையும் முற்றிலும் புறக்கணித்து, அதன் மரபுகளை அழிக்க முயற்சிக்கிறார்” எனக் கூறியுள்ளது.

மேலும் அந்தக் கடிதம் இயக்குநர் ஒட்டு மொத்தமாக விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், கல்விக்குழுவை நாசமாக்கும் வகையில் திட்டமிட்டு செயல்படுவதாகவும் கூறுகிறது. கல்விக் குழுவின் தலைவர் என்கிற ரீதியில் இயக்குநர், ஒருதலைபட்சமாக, நிகழ்ச்சிநிரல்களை தயாரிப்பது, முடிவுகளை அறிவிப்பது, கூட்டக் குறிப்புகளை கட்டுப்படுத்துவது, கல்விக் குழுவின் பெரும்பான்மையானவர்களின் கருத்துக்களைப் புறக்கணிப்பது ஆகியவற்றைச் செய்வதாகக் கூறுகிறது.

ஆசிரியர்களை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வருவதாகவும், அவர்களை “சட்டத்தை மீறி செயல்பட கட்டாயப்படுத்துவதாகவும்” இயக்குநர் மீது குற்றம் சாட்டி உள்ளது.

டிசம்பர் 11,12 ஆகிய தேதிகளில் பல மூத்த ஆசிரியர்களை சந்தித்த பேசிய போது, இந்தக் கடிதம் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிர்வாகத்தின் மீதிருந்த விரக்தியின் உச்சம் என்பதை உணர்த்தியது. இதில் சேத் மட்டுமல்ல ஆளுநர் குழுவின் (Board of Governors) தலைவர் ஸ்ரீ கிருஷ்ண குல்கர்னியும் அடங்குவார். பலரும், தற்போதைய நிர்வாகம், நிறுவனத்தின் ஜனநாயக, தாராளமயப் போக்கை அழிக்க முயல்வதாகத் தெரிவிக்கின்றனர்.

“ஐஐஎம்-சி(IIM-C) யில் நாம் காணும் பிரச்சனை இரண்டு தன்மைகளைக் கொண்டுள்ளது. ஒன்று, நிதி- நிர்வாகம்- கல்வி தன்மை. மற்றொன்று அரசியல் தன்மை. இரண்டும் இரண்டும் ஒன்றையொன்று நிறைவு செய்து கொள்கின்றன. இந்த பிரச்சனை ஆளுநர் குழு தலைவரிடமிருந்து ஆரம்பிக்கிறது. புதிய ஐஐஎம் சட்டம் ஏராளமான அதிகாரங்களை அவருக்கு அளித்துள்ளது. நாங்கள் இதன்மூலம் நிறுவனம் அதிக சுதந்திரத்துடன் செயல்படும் என நம்பினோம். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கு ஆளுநர் குழு தலைவருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இது தெளிவாக, ஒரு நோக்கத்துடன் செய்யப்பட்ட அரசியல் நியமனம்.” என்கிறார் 15 ஆண்டுகளுக்கு மேல் இங்கு பணியாற்றிய பேராசிரியர் ஒருவர்.

எல்லா வழிகளும் தோற்றுப் போனதால் நாங்கள் இந்தப் பிரச்சினைகளை வெளியில் கொண்டு செல்ல வேண்டியதாயிற்று என்கின்றனர் துறை ஆசிரியர்கள். அவர்கள், “தலைவருக்கும், இயக்குநர் குழுவுக்கும், முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கும் கடிதம் எழுதினோம். தலைவர் எந்த பதிலும் தரவில்லை. டிசம்பர் 2019-ல் ஆளுநர் குழு பிரச்சனைகளைப் பரிசீலனைச் செய்ய இருவர் குழு ஒன்றை அமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் குழு ஒரு வழியாக ஆகஸ்ட் 2020-ல் தனது அறிக்கையைக் கொடுத்தது. அதில், ஆசிரியர்கள் கூறிய அத்தனை புகார்களையும் புறந்தள்ளி விட்டு, இயக்குநரின் நல்ல மாற்றங்களுக்குத் தடையாக துறை ஆசிரியர்கள் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அந்த அறிக்கையும் கூட அக்டோபர் மாதம்தான் துறைகளுக்கும் தரப்பட்டது.” என்கின்றனர்.

இதற்கிடையில், ‘ஐஐஎம் -சி யைக் காப்பாற்றுவோம்- மன்றம்’ என்ற ஒரு அமைப்பின் கையெழுத்திடப்படாதக் கடிதம் கடந்த ஜுன், 2019 ல் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பப்பட்டது. அதில் இயக்குநரின் புகை பிடிக்கும் பழக்கம் முதற்கொண்டு ஐஐஎம்-ன் நிரந்தர நிதிக் கையிருப்பை (corpus) தவறாக பயன்படுத்தி நூலகச் செலவுகளை குறைக்கச் செய்தது வரை பல புகார்கள் எழுப்பப்பட்டு இருந்தன. அந்த கடிதம் சேத் மீது மட்டுமல்ல, துறை முதல்வர் (கல்வி) (Dean) போதிப்ரதா நாக் மீதும், துறை ஆசிரியர்களுக்கு பரவலாக கடும் அதிருப்தி இருப்பதாகத் தெரிவித்தது. இவர் டிசம்பர் 2-ம் தேதி கடிதத்தில் கையெழுத்திடவே இல்லை.

நவம்பர் 28-ல் ஹுஸ்டன், இல்லினாய்ஸ், வர்ஜீனியா ஆகிய இடங்களில் பணியாற்றிய, ஐஐஎம்- சி யின் முன்னாள் மாணவரான, அஞ்சு சேத் என்பவர் இயக்குனராக நியமிக்கப்பட்டார். “ஐஐஎம்-சி யை விட்டு விலகி இருந்த அவர், கடந்த 40 ஆண்டுகளில் நிறுவனம் அதிக வளர்ச்சி பெற்றிருப்பதை உணரவே இல்லை. நாங்கள் 2013 ல் ஏஎம்பிஏ (AMBA), 2014 ல் ஏஏசிஎஸ்பி(AACSB), 2015 ல் இக்யூஐஎஸ்(EQUIS) ஆகிய உயர் மரியாதைக்குரிய பன்னாட்டு அங்கீகாரங்களைப் பெற்றுள்ளோம். 2013 ம் ஆண்டிலிருந்து, வணிகப் பள்ளிகளின் மதிப்புமிக்க உலக, சிஇஎம்எஸ் (CEMS) ல் உறுப்பினராக உள்ளோம். அவருக்கு இந்தியாவில் பணி புரிந்த அனுபவம் இல்லாததால், ஒரு இயக்குநாராக அவரது பங்கை புரிந்துக் கொள்ளத் தவறிவிட்டார்.” என்கிறார் 87 வயதான முன்னாள் ஆசிரியர்.

அவர் எல்லாவற்றையும், எல்லோரையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கிறார். அவர் நியமனங்களை நிறுத்தினார், பணிநியமன விதிகளை மாற்றினார், ஏறத்தாழ எல்லா இந்திய ஆய்வு பட்டம்(பி.எச்டி) பெற்றவர்களையும் நிராகரித்தார். மூத்த பேராசிரியர்களின் தற்செயல் விடுப்புகளைக் கூட சீரற்ற முறையில் ரத்து செய்தார். பல பத்தாண்டுகளாக பணியாற்றி வரும் பேராசிரியர்களின் ஆர்வத்தைக் கூட எடை போட ஆரம்பித்தார். ஒரு ஆசிரியர் ஏதாவது ஒரு மாநாட்டிற்குச் செல்ல விரும்பினால், அவரது கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளில் மாநாடுகளில் வைத்த ஆய்வுக் கட்டுரைகளைக் கேட்டார். இது எங்களுக்குப் புரியவில்லை. ஆரம்பத்தில் இருந்தே உறவு மோசமடையத் துவங்கியது.” என்கிறார் பெயர் கூற விரும்பாத ஒரு மூத்தப் பேராசிரியர்.

தலைவரின் (Chair person) ஆதரவு இருப்பதாலேயே தனது விருப்பப்படி செயல்படுகிறார் என்பதே பெரும்பாலான பேராசிரியர்களின் கருத்து.
“நாங்கள் அளித்த புகார் கடிதங்களின் மீது தலைவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே இதை வெளிப்படுத்துகிறது.” என்கிறார்கள் அவர்கள்.

தலைவரும் அவரது நியமனமும்

ஐஐஎம்-சி ஆளுநர் குழு ( IIM-C ,BoG) தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீ கிருஷ்ண குல்கர்னியின் கல்வித் தகுதி மின்பொறியாளர் ஆகும். 2017, அக்டோபர் மாதம் அவர் தலைவராக நியமிக்கப்படும் முன் பேனாசானிக் இந்தியா(Panasonic India) நிறுவனத்தில் பல உயரிய பதவிகளை வகித்தவர். இந்த நியமனம் பலரது புருவங்களை உயர்த்த செய்தது. ஏனெனில் இதுவரை பிரபல தொழில் தலைவர்கள்தான் இந்தத் தலைவர் பதவியில் நியமனம் செய்யப்பட்டனர்.

எடுத்துக்காட்டாக, ஐஐஎம்- சி, குழுவிற்கு முனைவர். தேவி ஷெட்டியும், ஐஐஎம்- ஏ குழுவிற்கு குமார் மங்கலம் பிர்லாவும் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐஐஎம்-சி யின் கடைசி இரு தலைவர்களாக அஜித் பாலகிருஷ்ணன் (Reddiff.com நிறுவனர்), ஒய்.சி. தேவேஷ்வர் (ஐடிசியின்தலைவர்) ஆகியோர் இருந்தனர்.

குல்கர்னி கண்டிப்பாக இந்த வளையத்தில் இல்லை. மகாத்மா காந்தியின் பேரனான உள்ள குல்கர்னி ராகுல்காந்தி, காந்தியின் படுகொலைக்கும், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறியதை கடுமையாகத் தாக்கி மார்ச் 2014ல், அவருக்கு வெளிப்படையான கடிதம் எழுதியதால் திடீரென ஊடக கவனத்தை ஈர்த்தவர். ராகுலை, “சுயநல காரணங்களுக்காக வெறுப்பு அரசியல்” என்று குற்றம் சாட்டிய அவர், “காந்தியின் பெயரை சந்தர்ப்பவாதத்திற்குப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். நீங்கள் காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. நீங்கள் இந்தியாவில் நீண்ட காலமாக ஏராளமானவர்களை முட்டாளாக்கி உள்ளீர்கள். இப்போது அதை நிறுத்துங்கள்.” என்று எழுதியிருந்தார்.

இதேபோல், 2019-ல் நாதுராம் கோட்சேவை “முதல் இந்து பயங்கரவாதி” என விவரித்ததற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் ஒரு கடுமையான விமர்சன கடிதத்தை எழுதினார். அதில், “வாக்குகளுக்கான உங்கள் கடுமையான தேவையை நான் புரிந்து கொள்கிறேன்; ஊடக கவனத்திற்காக; தேசிய கவனத்தை உங்கள் மீது திருப்புவதற்காக ஒரு சர்ச்சைக்கு…. எங்கள் ஆன்மீக பாரம்பரியத்திற்கு- சனாதன தர்மம்- பாரதமாதாவின் உயிர்மூச்சு பற்றி உங்களுக்கு சிறிதும் அல்லது அறவே உணர்வுதிறன் இல்லை என்பதற்கு உங்கள் அறிக்கை எனக்குச் சான்றாகும்.” என்று எழுதிவிட்டு அந்த கடிதத்தில் கோட்சே ஒரு கொலையாளி, பயங்கரவாதி அல்ல என்று மேலும் கூறியிருக்கிறார்.

மேலும், 2020 பிப்ரவரியில், இந்தியன் எக்ஸ்பிரஸில் சிஏஏ-என்ஆர்சி யை ஆதரித்து ஒரு கருத்துருவை எழுதினார். அந்தச் சட்டம் காந்திஜியின் கருத்துக்களுடன் ஒத்துப் போகின்றன மற்றும் அதை எதிர்ப்பது ஆசிரியரை வேதனைப்படுத்துகிறது என எழுதினார்.

அவருக்கு முன்பிருந்தவர்களைத் போல் இல்லாமல் குல்கர்னி வளாகத்திலேயே தனது அலுவலகத்தை வைத்துள்ளார்.

நிறுவனத்தின் நிரந்தர நிதிக் கையிருப்பை (Corpus Fund) ஓய்வூதியத்திற்கு பயன்படுத்தும் வகையில் ஓய்வூதிய திட்ட மாற்றத்தைக் கொண்டு வந்ததே, முதல் மோதலாக வெடித்தது. ஆசிரியர்களின் எதிர்ப்பால் தலைவர் பின்வாங்க நேரிட்டது. 2020, அக்டோபர் 8-ம் நாள் தங்களுக்கும் இயக்குநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு குறித்து தலைவருக்கும், ஆளுநர் குழுவிற்கும் ஆசிரியர்கள் கடிதம் எழுதினர். ஆனால் குல்கர்னி எந்த பதிலும் தரவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டார்.

தலைவரால் முன்மொழியப்பட்ட, ஐஐஎம் சட்டங்களில் விளைவுகளை ஏற்படுத்தும் குறிப்பிட்ட மூன்று புதிய விதிமுறைகள் குறித்த எதிர்ப்புத்தான் தற்போது நிறுவனத்தின் சமீபத்திய சர்ச்சை. சட்டங்கள் எல்லா ஐஐஎம்களுக்கும் பொருந்தும் வேளையில் இந்த விதிமுறைகள் குறிப்பிட்ட தனிப்பட்ட நிறுவனங்களுக்கானவையாக இருந்தன. இதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான விதிமுறை ஆளுநர் குழுவில் ஆசிரியர்களின் பிரதிநிதித்துவம் குறித்ததாகும்‌.

1974 விருந்து ஆசிரியர் குழுவைச் சேர்ந்த இருவர் ஆளுநர் குழுவிற்குப் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். (சௌகதா ராயும், லீனா சட்டர்ஜியும் 2020, டிசம்பர் மாதம் 3-ம் நாள் வரை ஆளுநர் குழுவில் ஆசிரியர்கள் பிரதிநிதிகளாக இருந்தனர்.) தற்போது கொண்டு வந்துள்ள புதிய விதி முறைப்படி இருவரில் ஒருவர் மட்டுமே ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் மற்றொருவர் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் திருத்தப்பட்டது. இது, ஆசிரியர்களை மேலும் ஒடுக்க எடுக்கப்படும் ஒருங்கிணைந்த முயற்சி என பெரும்பாலான ஆசிரியர் குழு உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

இரண்டாவது விதிமுறை, நிறுவனத்தின் அனைத்து கல்வி மற்றும் நிர்வாக விடயங்களில் இயக்குநருக்கு அளவற்ற அதிகாரத்தை எந்தவித இடையீடும் இன்றி அளிப்பதாகும். இது ஐஐஎம்-சி போன்ற மிகப் பெரிய நிறுவனங்களுக்கு கேடு விளைவிக்கும் என ஆசிரியர்கள் எண்ணுகின்றனர்.

மூன்றாவதாக, புதிய விதிமுறைகள் பணி நியமனக் கொள்கையில் அடிப்படை மாற்றங்களை செய்ய முற்படுகிறது. இதுவரை, பணியாளர் தேர்வு குழுதான் (Inter -personnel Committee-IPC) பணி நியமன நடைமுறைகளை செயல்படுத்தி வந்தது. அந்தக் குழு, இயக்குநரைத் தலைவராகவும், அனைத்து பிரிவு அல்லது துறை பிரதிநிதிகளையும் கொண்டிருந்தது. புதிய விதிமுறைப்படி அமைக்கப்படும் குழுவில் புதிய டீன் (ஆசிரியர்) ஒருவர் தலைவராகவும், நான்கு பேர் இயக்குநராகவும், மேலும் நான்கு பேர் ஆசிரியர் குழுவாலும் நியமிக்கப் படுவார்கள். இந்தக் குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்து இயக்குநருக்கு பரிந்துரை செய்வர். எனினும், இயக்குநர் இந்த பரிந்துரைகளை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டவர் அல்ல.

இந்த விதிமுறை, குழுவின் பரிந்துரைகளை இயக்குநர் மாற்றவும், நிராகரிக்கவும் அதிகாரம் அளிக்கிறது. ஆசிரியர் பணி நியமனத்தில் இது இயக்குநருக்கு மீண்டும் வரம்பற்ற அதிகாரம் தருவதால் இதனையும் ஆசிரியர்கள் எதிர்க்கின்றனர்.

“நாங்கள் ஒவ்வொரு போராக நடத்த முடிவு செய்துள்ளோம். நாங்கள் நாள்தோறும் இயக்குநருடன் தொடர்பு கொள்ள வேண்டி இருப்பதால், நாங்கள் எங்கள் கருத்து வேறுபாடுகளை மேற்கூறிய கடிதம் மூலம் அவருக்குத் தெரிவித்துள்ளோம். ஆனால் தலைவரின் தெளிவான ஆதரவின்றி இயக்குநர் இவ்வாறு செயல்பட முடியாது என்பதில் சந்தேகமில்லை. தலைவரின் தொழில்முறை பிண்ணனியை வைத்துப் பார்க்கும்போது இந்த அளவு பெரிய, மதிப்புமிக்க நிறுவனத்தை நடத்தக் கூறினால் அவர் குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார். நிறுவனத்தின் கல்விச் சூழலின் திடீர் வீழ்ச்சிக்கு இவர்கள் இருவர் மீதும்தான் குற்றம் சாட்ட வேண்டும்.” என்று கூறுகிறார் இன்னொரு ஆசிரியர்.

“ஐஐஎம்-சி எப்போதும் அனைத்து எண்ணங்கள் மற்றும் கலாச்சாரங்களை ஏற்றுக் கொள்ளும், அரசியல் சார்பற்ற, தாராளமய, ஜனநாயகத்தின் இருப்பிடமாக இருந்து வந்துள்ளது. உரமிக்க இடதுசாரி தலைவர்கள் கற்பித்திருக்கிறார்கள். வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா இங்கு படித்தவர். அப்போது அமித்தவா போஸ் எங்கள் இயக்குநராக இருந்தார். அவர் இடதுசாரி அல்ல. ஆனால் எப்போதும் மோதலே நிகழ்ந்ததில்லை. ஆனால் இப்போது நாடு முழுவதும், ஜனநாயக கல்வி இடங்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றன. ஐஐஎம்-சி நிகழ்வுகளும் இதற்கு விதிவிலக்கல்ல.” என்று அவர் மேலும் கூறினார்.
தி வயர், இயக்குநரையும், துறைத் தலைவரையும், தலைவரையும் தொடர்பு கொள்ள 11/12, 12/12 ஆகிய இரு நாட்கள் முழுவதும் எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தன. அவர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் களுக்கு அவர்கள் பதிலளித்தால் இந்த செய்தி புதுப்பிக்கப்படும்.

(www.thewire.in இணையதளத்தில், இந்திரதீப் பட்டாச்சார்யா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்