Aran Sei

7.5% இடஒதுக்கீடு : தமிழக அரசு ஆணையைத் தொடர்ந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்

credits : the newindian express

ருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்குவது  தொடர்பாக சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில் இன்று அம்மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருக்கிறார்.இதன் மூலம் இந்த ஆண்டு நீட் தேர்வில் வெற்றிபெற்ற 303 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவப் படிப்பில் சேரும்  அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. இது குறித்து விசாரித்து அரசுக்குப் பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு சாத்தியமா? – சீ.நவநீத கண்ணன்

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால், நீட் தேர்வு முடிந்து மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கவிருக்கும் வரையில் மசோதாவுக்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காமல் தாமதப்படுத்தப்பட்டது.

மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு – ஆளுநரின் தாமதத்தால் நிகழவிருக்கும் ஆபத்து

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் 7.5% இடஒதுக்கீடு சட்ட்த்திற்கு ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அனுப்பிய கடிதத்திற்கு “இதுகுறித்து முடிவெடுக்க எனக்கு 3 முதல் 4 வாரங்கள் தேவை” என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதிலளித்திருந்தார்.

தமிழகத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் ”ஆளுநர் அலட்சியமாக” செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வந்தனர்.

சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 45 நாட்கள் கடந்த நிலையில் ஆளுநர் ஒப்புதல் வழங்காததால் , நேற்றைய தினம் மருத்துவ படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க அரசாணையை பிறப்பித்தது.

மாநில அதிகாரத்தை பயன்படுத்திய தமிழக அரசு – 7.5% இடஒதுக்கீடு உறுதியானது

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி தமிழக அரசு 7.5% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ”7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று (அக். 30) ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளது.

மேலும் “இந்த மசோதா குறித்து கருத்து கேட்க, கடந்த செப்டம்பர் 26-ம் தேதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு, ஆளுநரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நேற்று (அக். 29) பதில் கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், 7.5% உள் இட ஒதுக்கீடு மசோதா, அரசியலமைப்புச் சட்டத்திற்கு இணங்க உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்துள்ளார்” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, துஷார் மேத்தாவின் கருத்து ஆளுநருக்குக் கிடைத்த நிலையில், இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்