Aran Sei

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் 7.5% ஒதுக்கீடு வழங்க வேண்டும் – கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் இடம் கிடைப்பதில் சிக்கல் உருவாகி இருப்பதால் அவர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கல்வியாளர் பிரபா கல்விமணி தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனடிப்படையில் 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

அரசு பள்ளிகள் மட்டுமல்லாது அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளையும் இதில் சேர்க்க வேண்டும் என்று கல்வியாளர் பிரபா கல்விமணி கோரிக்கை விடுத்துள்ளார் .

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் `தாய்த் தமிழ் பள்ளியில்’ கா.சந்திரலேகா என்ற மாணவர் எட்டாம் வகுப்புவரை படித்து வந்தார். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வரிசையில், விழுப்புரம் மாவட்ட அளவில் 10 ஆம் இடத்தில் உள்ளார். அவர் 8 ஆம் வகுப்புவரை அரசு பள்ளியில் படிக்கவில்லை என்பதால் அரசு வழங்கும் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் நீட்டிக்கவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

“ஏழை எளிய, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில ஆதரவளிக்க வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்