Aran Sei

இந்தியாவில் கல்வியை மறு வார்ப்பு செய்தல் – வீதிகளின் யதார்த்தங்களை வகுப்பறைகளுடன் இணைத்தல்

Image Credit : thewire.in

2020-ம் ஆண்டின் துவக்கத்தில் நான் குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக போராட்டங்கள் நடந்த பகுதிகளில் ஒன்றான ஹவுஸ் ராணி காந்தி பார்க் பகுதியில் வாழ்ந்து வந்தேன். ஒருநாள் இரவு, நான் அன்றாட மளிகை பொருட்கள் வாங்க வெளியே வந்த போது, அண்ணல் அம்பேத்கரின் உருவப் படத்தை கையில் வைத்துக் கொண்டு, “ஆசாதி/விடுதலை” முழக்கங்களை முழங்கியபடி, ஒரு குழந்தைகளின் கூட்டம் ஹவுஸ் ராணி வீதியில் ஓடிவந்து கொண்டிருந்தது. விரைவில் இந்தக் காட்சியை பொதுவாக எங்கும் காணமுடிந்தது.

வழக்கமாக நான் பாலும் ரொட்டியும் வாங்கிக் கொண்டு வரும் வழியில், குழந்தைகள், வயதுவந்த போராட்டக்காரகளுடன் சேர்ந்து கையில் மூவர்ண தேசியக் கொடியை வீசியபடி “ஆசாதி” முழக்கத்தை எழுப்பிக் கொண்டிருப்பதை காண்பேன்.

சில சமயங்களில் அவர்கள் போராட்டத்தில் பங்கெடுக்க வந்தவர்களாக இல்லை.  தங்கள் தாய்மார்களுடன் போராட்டக்களத்திற்கு வந்து, அந்த ராக்குளிருக்கு இதமாக தங்கள் தாய்மார்களின் மடியின் சூட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். எந்த வகையில் பார்த்தாலும் அந்தப் போராட்டம் அவர்கள் வாழ்வின் முக்கியமான ஒரு பகுதியாக மாறிவிட்டதாக எனக்குத் தோன்றியது.

இந்தக் காலத்தில், சமூகவியல் கல்வி பயின்ற ஒரு மாணவன் என்பதால், அந்தப் பகுதியில் இருந்த ஒரு பள்ளிக்கு வாரந்தோறும் சென்று வந்தேன். அப்போது அங்கு வகுப்பறைகளில் கடைபிடிக்கப்பட்டு வந்த பழக்கவழக்கங்களைக் கவனித்தேன். அங்கிருந்த மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் பாடத்திட்டம் பற்றியும் கற்பித்தல் முறைகளின் பல்வேறு கூறுகளைப் பற்றியும் பேசுவேன்.

போராட்டம் இந்த வகுப்பறைகளில் பேசுபொருளாக இருக்கவில்லை என்பது என்னை மிகவும் பாதித்தது. நடந்து கொண்டிருக்கும் போராட்டங்கள் இந்த மாணவர்களின் வாழ்க்கையை எந்த அளவு ஆழமாக பாதித்துள்ளன என்பது கண்முன்னே தெரிந்தாலும் அது பற்றிய பேச்சே முற்றிலும் இல்லாதிருந்தது. “வீதிக்கும்” “பள்ளிக்கும்” இடையிலான இந்த முரண்பாட்டை, இந்திய பள்ளிக்கல்வியின் தன்மையை வெளிப்படுத்துவதற்கான நுழைவுவாயிலாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறேன்.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

சமூகக் கட்டுப்பாட்டுக்கான கருவியாக கல்வி

நடப்பு நிலவரத்தின்படி, முறையான பள்ளிக்கல்வி பெருமளவில் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்டு, ஒழுங்குபடுத்தப்படுகிறது. இது ஒரு அரசியல் நடைமுறையாக இருப்பதால் அதிகாரத்துடன் நெருங்கிய தொடர்பு உடையது. பள்ளிக்கல்விக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பு மிக முக்கியமான ஒன்றாகும். ‘பள்ளி’ என்பதை ‘மருத்துவமனை (clinic)’ ‘சிறை’ ஆகியவற்றின் வகையினத்தில் வைத்தார், மைக்கேல் ஃபூக்கோ (Michel Foucault), பள்ளி கட்டுப்பாட்டுக்கும் கண்காணிப்புக்குமான நிறுவனமாக உள்ளது என்று அவர் கூறுகிறார்.

பள்ளிகள், அரசு எந்திரத்தின் ஒரு பகுதியாக, தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகளை மறு உற்பத்தி செய்வதிலும், மேலாதிக்க அடுக்குகளின் சமூக ஆதிக்க நலன்களை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று பல அறிஞர்களும் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

பள்ளிக்கல்வியை சமூகக் கட்டுப்பாட்டு பொறிமுறையாகப் புரிந்து கொள்ள, இந்தியச் சூழலில் கல்வி ஏற்றத்தாழ்வுகளின் வெளிப்புற வரைவுகளையும் உள் வரைவுகளையும் ஆராய வேண்டியது அவசியம்.

முதலில் கல்வி ஏற்றத்தாழ்வுகளில் உள்ள வெளி வரைவுகளை எடுத்துக் கொள்கிறேன். இந்திய பள்ளி முறை, இந்திய சாதி முறை போலவே படிநிலையாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருவர் பெறும் கல்வியின் தரம் என்பது அவரது சூழலால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது ஓரங்கட்டப்பட்ட சாதிகளைச் சேர்ந்த குழந்தைகள் மிக மோசமான கல்வியைப் பெறுகின்றனர். அதாவது இந்த அமைப்பு முன்னேறியவர்களுக்கு ஆதரவாகவும், பின்தங்கியவர்களுக்கு எதிராகவும் உள்ளது.

இந்த கல்வி ஏற்றத்தாழ்வில் ஒரு உள்வரைவும் உள்ளது.

பள்ளிகளுக்குள் பகுஜன் (தாழ்த்தப்பட்ட) மாணவர்கள் எதிர்கொள்ளும் தண்டிக்கும் வகையிலான வன்முறையான கற்பித்தல் முறை இரகசியமானதல்ல. 2013-14 ன், இந்தியா ஒதுக்கி வைத்தல் அறிக்கையில் (India Exclusion Report) உடல்ரீதியான தண்டனையும், வாய்மொழி அவதூறும் அவமானப்படுத்தலும் பிரித்து வைத்தலும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான வெளிப்படையான பாகுபாட்டின் வடிவங்களாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்த அடக்குமுறை அடிப்படையிலான கற்பித்தல் முறையின் காரணமாக, கூட்டு அதிர்ச்சியையும் இழப்பையும் மரபுரீதியாக பெற்ற விளிம்பு நிலை மாணவர்கள், பள்ளிகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகின்றனர். எனவே பட்டியலின வகுப்பினர் இடையேயும் பழங்குடியினரிடையேயும் பள்ளி இடைநிற்றல் வீதம் மிக அதிகமாக இருப்பதில் ஆச்சரியமில்லை.

வகுப்பறைக்குள் அடக்குமுறை ரீதியிலான கற்பித்தல் முறையின் வெளிப்படையாக தெரியாத வழியும் உள்ளது. இது நிறுவனமாக்கப்பட்ட அறிவு அரசியலின் தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது. அதிகாரமிக்க குழுக்களின் கலாச்சாரம், அறிவு ஆகியவற்றின் வடிவத்தையும் உள்ளடக்கத்தையும் முறையான அறிவு என்று வரையறுத்து, அவற்றை பள்ளிகள் பாதுகாத்து பரப்புகின்றன.

Image Credit : thewire.in
Image Credit : thewire.in

பேராசிரியர். காஞ்சா இலையா ஷெப்பர்ட்  ‘ நான் ஏன் இந்துவாக இல்லை’ என்ற தனது முக்கியமான படைப்பில், அனுபவத்தை ஒரு கட்டமைப்பாகப் பயன்படுத்தி, பள்ளிப் பாடத்திட்டம் ஒதுக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை எவ்வாறு செல்லாததாக்குகிறது’ என்று விளக்கி உள்ளார்: “தலித் ஒதுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை பள்ளிப் பாடத்திட்டத்தில் எங்குமே இல்லை.” பள்ளி பாடப்புத்தக உள்ளடக்கங்களைச் பற்றி கூறும்போது, “பாடப் புத்தகங்களின் மொழி எங்கள் சமூகங்கள் பேசிய மொழி அல்ல. பாடநூல் அறநெறி எங்கள் வாழ்க்கை ஒழுக்கத்திலிருந்து வேறுபட்டது.” என்று அவர் கூறி உள்ளார்.

2009-ம் ஆண்டின் கல்வி உரிமை (RTE) சட்டம் மூலம் இந்தியா, குழந்தைகளின் கல்விக்கான சட்டபூர்வமான உரிமையை உறுதி செய்தாலும், சமத்துவமான நிறுவனங்கள் மூலம் அதனை கட்டமைக்கத் தவறிவிட்டது.

நடுநிலை என்ற திரைக்குப் பின்னால், பள்ளிகள் அதிகாரத்தையும் சலுகைகளையும் மறுஉற்பத்தி செய்யும் வினையூக்கிகளாக செயல்படுகின்றன. சில வடிவங்களிலான அறிவு பள்ளி அறிவின் ஒரு பகுதியாக மாற அனுமதிக்கப்படுவதில்லை. ஏனெனில் அவை நிலவும் அதிகார உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன. போராட்டம் பற்றி பேசுவதற்கு வாய்ப்பு இல்லாத நிலையைத்தான் அடக்குமுறை அடிப்படையிலான கற்பித்தல் உருவாக்குகிறது. ஏனெனில் போராட்டம் என்பது அதிருப்தியின் மொழி. நிலவும் கட்டமைப்பு சவால் விடும் கருவி.

விமர்சன ரீதியான கற்பித்தல் முறை

இது விமர்சன ரீதியான கற்பித்தல் முறையிலிருந்து வேறுபட்டது. “விமர்சன ரீதியான கற்பித்தல் முறையானது கோட்பாட்டிற்கும், நடைமுறைக்கும் இடையிலான உறவையும், விமர்சனப் பகுப்பாய்வுக்கும் பகுத்தறிவிற்கும் இடையிலான உறவையும், கற்றலுக்கும் சமூக மாற்றத்துக்கும் இடையிலான உறவுகளையும் பற்றி தீவிரமாக கேள்வி எழுப்பும், விவாதிக்கும் முக்கிய காரணிகளாக மாணவர்கள் மாறும் வகையில் கற்பிக்கிறது,” என்கிறார் ஹென்றி கிராக்ஸ்.

இத்தகைய கல்வி, கற்பித்தல் நடைமுறைகளை வடிவமைக்கும் கல்வி நிறுவனங்கள் வீதிகளின் குரலுக்கு செவி சாய்ப்பதை அனுமதிக்கிறது.

விமர்சன ரீதியான கற்பித்தலின் முன்னோடியான பாப்லோ ஃப்ரீர், கல்வியை ஒரு அரசியல் ரீதியான தார்மீக ரீதியான உருமாற்ற நடைமுறையாக உருவகித்தார். கல்வி, மாணவர்களை சுய பரிசீலனை செய்யவும், விமர்சன ரீதியான குடிமகனாக இருப்பதன் பொருள் என்ன என்பதை ஆராயவும், ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்கெடுக்கவும் செய்கிறது என்று அவர் கருதுகிறார் அவர்.

அண்ணல் அம்பேத்கரும் கூட கல்வியை விடுவிக்கும் சக்தியாகவும், நமக்குள் மாற்றத்தைத் தூண்டும் வலிமை படைத்ததாகவும் கருதினார். “கற்பி, ஒன்று சேர், கிளர்ச்சி செய்” என்னும் அவரது பிரபலமான முழக்கத்தின் ஒரு பகுதியான “கிளர்ச்சி செய்” என்பது கல்வியின் மாற்றும் தன்மையை குறிக்கிறது.

கல்வித் தளத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் பற்றி சிந்திப்பது எனக்கு கவலையளிப்பதாக உள்ளது. இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. டெல்லி காவல்துறை, ஜாமியா மிலியா இஸ்லாமியாவின் நூலகத்திற்குள் அதிரடியாக நுழைந்து அங்கு கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, மாணவர்கள் மீது தடியடி நடத்தியதைக் கண்ட பிறகு நான் ஆச்சரியப்படுவதை நிறுத்தி விட்டேன்.

கல்வியில் தனியார்மயமாக்கலும், தருமமுதலாளித்துவமும் சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு, கற்றல் கற்றல் விளைவுகளாக சுருக்கப்படுவதும் , மழலையர் கல்வியை பள்ளிக்கல்வியாக்குவது ஊக்குவிக்கப்படுவதும், தாழ்த்தப்பட்ட மக்களை கல்வியிலிருந்து விலக்குவது கட்டாயமாக்கப்படுவதும், அறிஞர்களும் இளம் செயற்பாட்டாளர்களும் சிறையிலடைக்கப்படுவதும், என்னை இனிமேலும் ஆச்சரியப்படுத்துவதாக இல்லை.

இது நம்பிக்கை இழப்பா? இல்லாமல் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக அதற்கு நெருக்கமானதுதான்.

ஷாஹீன்பாக் போராட்டக் களத்தில் இருந்த ஃபாத்திமா ஷேக்-சாவித்ரி பாய் பூலே நூலகத்தை நினைத்துப் பார்ப்பதும், நான் சந்தித்த ஏராளமான அறிவாளிகளான, ஆர்வமுள்ள ஆசிரியர்களையும், மாணவர்களையும், செயற்பாட்டாளர்களையும் நினைத்துப் பார்ப்பதும், நான் நம்பிக்கை கொள்வதற்கான அரிய சந்தர்ப்பங்கள் ஆகும்.

மேலும் அவற்றை குறித்து நீண்ட நேரம் சிந்தனை செய்யும் போது, நான் வீதிகளை பள்ளி வளாகங்களிலிருந்து பிரிக்கும் பள்ளிச் சுற்று வேலிகள் மறைந்து போவதையும், பள்ளி தெருவை நோக்கி நகர்வதையும், தெருக்கள் பள்ளிகளை நோக்கி நகர்வதையும் உருவகம் செய்யத் தொடங்குகிறேன்.

சில சமயம், சிறிது காலத்திற்காவது, பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும், சுதந்திரத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் கல்வியை மறு வார்ப்பு செய்வதாகவும், இழந்த, விடுதலைக்கான கற்பித்தலை உருவாக்குவதை மீட்டெடுப்பதாகவும் கற்பனை செய்து பார்க்கும் அளவிற்கு நான் சென்று விடுகிறேன்.

www.thewire.in இணையதளத்தில் யுவராஜ்சிங் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்