Aran Sei

நீட் விவகாரம் – ‘அரசியல் செய்யாமல் அவியலா செய்வது’ – மு.க.ஸ்டாலின் காட்டம்

credits : stage3news

6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்  படிப்புகளில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்யும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட பிறகு, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மருத்துவம் படிப்பது குறைந்துள்ளதாகக் கூறப்பட்டது. இது குறித்து விசாரித்து அரசுக்குப் பரிந்துரை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் தமிழக அரசு குழு அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின்படி அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, மருத்துவப் படிப்புகளுக்கான கவுன்சலிங்கைத் தொடங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், உள் ஒதுக்கீட்டிற்கான சட்டத்திற்கு இதுவரை ஆளுநர் ஒப்புதல் வழங்காத நிலையில், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் ஆகியோர் கடந்த புதன்கிழமையன்று ஆளுநரைச் சந்தித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தியதாகவும் ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையில், சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்குப் புதன்கிழமையன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தில், சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு நிறைவேறும் என்றும் இந்தக் கல்வி ஆண்டிலேயே அவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், இந்த விவகாரத்தில் அதிமுகவுடன் இணைந்து போராடத் தயார் என்று தெரிவித்த ஸ்டாலின், அனைத்துக் கட்சிகளுடன் கலந்துபேசி போராட்டத்தை அறிவிக்க முதலமைச்சர் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் “இதுகுறித்து முடிவெடுக்க எனக்கு 3 முதல் 4 வாரங்கள் தேவை” என்றும் “சமீபத்தில் என்னைச் சந்தித்த அமைச்சர்கள் குழுவிடமும் இதே தகவலைத் தெரிவித்தேன்” என்றும் தற்போது பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள மு.க.ஸ்டாலின், “3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்று ஆளுநர் சொல்லியிருப்பது சட்டத்தை நீர்த்துப்போக வைப்பது” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இதனையே தன்னைச் சந்தித்த தமிழக அமைச்சர்கள் குழுவிடமும் ஆளுநர் தெரிவித்திருக்கிறார். ஆனால், திட்டமிட்டு மறைத்து விட்டார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

“மாணவர் நலனையும், சட்டமன்றத்தின் மாண்பினையும் பாதுகாக்கும் போராட்டத்தில் திமுக இறங்க வேண்டிய தருணம் வந்துவிட்டது” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

ஆகவே, சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கோரியும். அழுத்தம் கொடுக்கத் தவறி மாணவர்களுக்குத் துரோகம் செய்யும் அதிமுக அரசைக் கண்டித்தும் அக்டோபர் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் “நீட் தேர்வு என்ற விஷயத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து மாணவர்களுக்குத் துரோகம் இழைத்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் ஆளுநருக்கு அழுத்தம் தரவில்லை என்று கூறுவதற்கு எவ்வித அருகதையும் இல்லை எனவும் இதில் ஸ்டாலின் அரசியல் செய்வதாகவும் முதல்வர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் வெவ்வேறு சமூக பொருளாதார பின்னணியை கொண்டவர்கள். இவர்கள் கற்கும் பள்ளி, வளரும் வீட்டுச் சூழல், பெற்றோர் வருமானம் போன்றவற்றில் வேறுபாடுகள் உள்ளன. எனவே, இவர்களை சமநிலையில் வைத்து பார்ப்பது சமநீதிக்கு எதிரானது. தமிழ்நாடு அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் அவர்களுக்கு உரிய அளவுக்கு மருத்துவ இடம் கிடைப்பதில்லை. எனவேதான், அரசு பள்ளியில் படித்த நான், தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தனியாக உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உணர்வுப் பூர்வமாக உணர்ந்து, கடந்த 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் 21.3.2020 அன்று சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மருத்துவ படிப்பு பயில உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என மாணவர்கள் மருத்துவப் படிப்பு பயில உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்தேன்.

இந்த 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்குவதால், ஏழை எளிய மாணவர்களுக்கு சம நீதி வழங்க இது வழிவகுக்கும் என்பதை உணர்ந்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் இதற்கு விரைந்து ஒப்புதல் அளிப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.

இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் நீலிக்கண்ணீர் வடிப்பது, மக்களின் மனங்களில் எந்த ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது என்பது திண்ணம். வெண்ணை திரண்டு வரும் நேரத்தில், தங்களால் தான் எல்லாம் நடந்தது என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கும் எண்ணத்துடன் மாண்புமிகு ஆளுநருக்கு கடிதம், அறிக்கைகள் என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் நடவடிக்கைகள், “அரசியல் ஆதாயம் தேடும் செயல் “ மட்டுமே என்று நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவர் என்று தன் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில்  ‘அரசியல் ஆதாயம் தேடும் செயல்’ என்று முதலமைச்சர் சொல்கிறார். அரசியல் ஆதாயம் தேடுவதற்கு, அ.தி.மு.க. அரசால் கொண்டுவரப்பட்ட  மசோதாவை  மேலும்  தாமதம் செய்யாமல் நிறைவேற்று என்றா சொல்வார்கள்? இந்த குறைந்தபட்ச பொது அறிவு கூடவா முதலமைச்சருக்கு இல்லாமல் போய்விட்டது? எடப்பாடி பழனிசாமி அரசாங்கத்தின் மீது, பல்லாயிரம் கோடி மதிப்பிலான ஊழல் முறைகேடுகளின் பட்டியலைக் கொடுத்து, எங்களுக்கு அரசியல் ஆதாயம் தேடத் தெரியாதா? என்று கூறியிருந்தார்

இந்நிலையில், அறிவித்தப்படி இன்று  ஆளுநர் மாளிகை முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. மு.க.ஸ்டாலின்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ” திமுக ஆட்சியில் இருந்தவரை நீட் தமிழகத்தில் இல்லை மாற்றுக்கருத்து இருந்தாலும் கூட ஜெயலலிதா இருந்தபோதும்  நீட் தமிழகத்தில் நுழைய முடியவில்லை. தற்போதைய அதிமுக அரசு அடிமையாக இருப்பதின் காரணத்தினால் நீட் தமிழகத்தில் நுழைந்துவிட்டது“ என்று கூறினார்.

தேர்தல் அறிக்கைகளில் மட்டும் நீட் தேர்வு விலக்கு என்று மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் ”13 மாணவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்” நீட் என்பது பலிபீடமாக மாறிவிட்டது என்றும் ஸ்டாலின் கூறினார்.

”ஆளுநரிடத்திலே மன்றாட முடியாதா? காலில் விழ வேண்டாம், அழுத்தம் திருத்தமாக கேட்க முடியாதா” என்று கேள்வியெழுப்பிய மு.க.ஸ்டாலின் “எடப்பாடி அரசு ஆளுநரை கேள்விகேட்காது என்பது தெரிந்தே ஆளுநர் இவ்வளவு அலட்சியத்துடன் செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

நீட் தேர்வு முடிவுகள் வந்துவிட்டது. இன்னும் ஒரு சில வாரங்களில் மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வுகள் தொடங்கிவிடும். ஆளுநர் அனுமதி அளித்தால்தான் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். நீண்ட நாள் கோரிக்கையான எழுவர் விடுதலை ஆளுநர் மாளிகையில் கிடப்பில் இருப்பது போல் இதுவும் ஆகிவிடக் கூடாது என்பதனால் தான் போராடுகிறோம் என்று ஸ்டாலின் கூறினார் .

இதற்கு ” ஒப்புதல் அளிக்கப்பட்டால்தான் 300 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவர் ஆவார்கள். இல்லையேன்றால் வெறும் 3 அரசு பள்ளி மாணவர்கள் தான் மருத்துவர் ஆக முடியும்“ என்று கூறிய ஸ்டாலின் “இது மிகப்பெரிய அநீதி” என்று கூறினார்.

திமுக நீட் விவகாரத்தில் அரசியல் செய்கிறது என்று முதலமைச்சர் கூறியதற்கு “எதிர்க் கட்சி அரசியல் செய்யாமல், அவியலா செய்யும்” என்று ஸ்டாலின் பதிலளித்தார்.

“மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தி அவர்களை மருத்துவர்களாக்குவதற்குக் குரல் கொடுப்பதுதான் அரசியலா? இதைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத நிலையில் வக்கற்ற வகையற்ற நிலையில் இருக்கிறது ” போலி விவசாயி “ எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு” என்றும்  “இந்தப் பிரச்சனை முடிவுக்கு வரும் வரை தொடர்ப் போராட்டங்கள் நடத்தப்படும்” என்றும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்