Aran Sei

நீட் தேர்வை ரத்து செய் – நாடாளுமன்ற வளாகத்தில் திமுக ஆர்ப்பாட்டம்

நன்றி: The Hindu

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலுவின் தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. பதினெட்டு நாட்கள் நடைபெறவுள்ள இக்கூட்டத்தொடரில் “நீட் தேர்வு ரத்து, புதிய கல்விக் கொள்கை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு சட்ட வரைவு, மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை, மீன்பிடி தொழிலுக்கான பிரச்சினைகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய இருபதுக்கும் மேற்பட்ட பிரச்சினைகளை எழுப்புவோம்” என்று திமுக மக்களவைக் குழு தலைவர் டி.ஆர். பாலு கூறியுள்ளார்.

போராட்டம் குறித்து தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் பேசிய போது, “இந்தப் போராட்டம் நீட் தேர்வை ரத்து செய்தல், புதிய கல்விக் கொள்கையை ரத்து செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்ட வரைவை கைவிடுதல் ஆகியவற்றைக் கோரி நடத்தப்பட்டது.” என்று கூறினார்.

“நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத்தொடரில் இக்கோரிக்கைகளை விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படுமா?” என்று கேட்ட போது, “நாங்கள் சபாநாயகருக்கு இது தொடர்பாக நோட்டீஸ் கொடுத்துள்ளோம்” என்று கூறியதோடு “அது எடுத்துக் கொள்ளப்படலாம்” என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

காலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு நடந்த மக்களவை கூட்டத்தில் பேசிய டி.ஆர்.பாலு, மாநில பாடத்திட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சிபெற்ற மாணவர்கள், சி.பி.எஸ்.சி பாடத்திட்டத்தில் நடைபெறும் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்