Aran Sei

தேர்வை நடத்த அருகதையற்றவர்கள் கல்விக்குத் தரம் நிர்ணயிப்பது வேடிக்கை – கனிமொழி எம்.பி

Credits Scroll

பொதுத்தேர்வுகளில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் நுழைவுத் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றுள்ளதாகத் தேர்வு முடிவுகளில் வெளியாகியுள்ளது.

செப்டம்பர் மாதம் நடைபெற்ற மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை அக்டோபர் 16-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகள் வெளியான தினம், தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேசிய தேர்வு முகமை இணையத்தளத்திலிருந்து முடிவுகள் நீக்கப்பட்டன. பிறகு திருத்தப்பட்ட பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி நடந்திருப்பதாக மாணவர்கள் மின்னஞ்சல்மூலம் தேர்வு முகமையிடம் புகார் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் பள்ளியில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றுள்ள சென்னையைச் சேர்ந்த மாணவர் சாய் அக்‌ஷய், நீட் தேர்வில் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றுள்ளதாக முடிவுகள் வெளியாகியுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இதுகுறித்து ட்விட்டரில், “2020 நீட் தேர்வில் நடந்துள்ள குளறுபடிகள் ஒவ்வொன்றாக வெளிவந்துகொண்டிருக்கிறது.”

“பள்ளியில் முதலாவதாக வந்த சென்னையைச் சேர்ந்த மாணவர் சாய் அக்‌ஷய், நீட் தேர்வில் வெறும் பூஜ்யம் மதிப்பெண்களை பெற்றுள்ளது எப்படி சாத்தியமாகும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இதே போல கோவை மற்றும் அரியலூரில் குளறுபடிகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. ஒரு தேர்வைக் கூட ஒழுங்காக நடத்த அருகதையற்றவர்கள், மருத்துவக் கல்விக்கு தரம் நிர்ணயிப்பது வேடிக்கையாக உள்ளது.” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

 

மேலும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது குறித்து, “மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்துவது, மாணவர்களின் எதிர்காலத்தோடு விபரீத விளையாட்டில் ஈடுபடுவதாகும். ஆளுநர் செய்யும் தாமதம் கூட்டாட்சித் தத்துவத்துக்கே எதிரானதாகும்.” என்று கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்