இளங்கலை ஆங்கில படிப்புக்கான பாடத்திட்டத்தில் இருந்த தலித் இலக்கியங்களை டெல்லி பல்கலைக்கழகம் நீக்கியுள்ளதாக நியூஸ்18 செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, டெல்லி பல்கலைக்கழகத்தில்மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
டெல்லி பல்கலைக்கழகத்தின் மேற்பார்வை குழுவானது தலித் எழுத்தாளர்கள் பாமா மற்றும் சுகிர்தராணி ஆகியோருடன் வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவியின் படைப்புகளையும் நீக்கியுள்ளதாக அச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.
நேற்று (ஆகஸ்ட் 25), பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்வி நிர்வாகக் குழுவின் 15 உறுப்பினர்கள் இணைந்து, இந்த நடவடிக்கைக்கு எதிராக ஒரு கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர் என்றும் இது பாடத்திட்டத்தை அழிவுக்குள்ளாக்கும் செயல் என குற்றஞ்சாட்டியுள்ளனர் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “பல்கலைக்கழக மேற்பார்வைக் குழு முதலில் பாமா மற்றும் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளுக்குப் பதிலாக ஆதிக்கச் சாதி எழுத்தாளர் ரமாபாய்யின் படைப்புகளைச் சேர்த்துள்ளது.” என்று கல்வி நிர்வாகக் குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
“வங்க எழுத்தாளர் மஹாஸ்வேதா தேவியின் புகழ்பெற்ற கதையான பழங்குடிப் பெண்ணைப் பற்றிய திரௌபதி என்கிற சிறுகதையை, எந்தவித கல்விசார் காரணங்களையும் தெரிவிக்காமல், நீக்கக் கோரி ஆங்கிலத் துறைக்கு மேற்பார்வைக் குழுவானது திடீரென உத்தரவிட்டுள்ளது. மேலும், மஹாஸ்வேதா தேவியின் எந்த சிறுகதையையும் ஏற்க அக்குழு மறுத்துவிட்டுள்ளது.” என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலனித்துவத்திற்கு முந்தைய இந்திய இலக்கியங்கள் என்ற தலைப்பில் உள்ள தேர்வுக்கான பாடத்திட்டத்தில், சந்திரபதி ராமாயணத்திற்கு பதிலாக துளசிதாஸ் ராமாயணத்தை மாற்றுமாறு ஆங்கிலத் துறைக்கு மேற்பார்வைக் குழு உத்தரவிட்டுள்ளது என்றும் இம்முடிவானது ராமாயண இதிகாசத்தின்மீதான பெண்ணிய வாசிப்பை அகற்றும் செயல் என்றும் அக்கடிதத்தில் கல்வி நிர்வாகக் குழு குற்றம் சாட்டியுள்ளதாக நியூஸ்18 தெரிவித்துள்ளது.
மேலும், “மேற்பார்வை குழு எப்போதுமே தலித், பழங்குடியினர், பெண்கள் மற்றும் பாலியன சிறுபான்மையினரின் குரலை பாடத்திட்டங்களில் இருந்து முற்றாக நீக்குவதற்கான பணிகளையே தொடர்ந்து செய்து வருகிறது. டெல்லி பல்கலைக்கழக மேற்பார்வைக் குழுவில் பட்டியல் அல்லது பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களே இல்லை.” என்று அக்கடிதத்தில் கல்வி நிர்வாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
Source: News18, Indian Express,
தொடர்புடைய பதிவுகள்:
சிறைகளில் உள்ள 32% பேர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் – உள்துறை அமைச்சகம் தகவல்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.