Aran Sei

“ஆளுநர் வெளியேற வேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

ஆளுநர் உடனடியாக அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் அல்லது தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த அக்டோபர் 20-ஆம் தேதி, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், செங்கோட்டையன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோர் சந்தித்துள்ளனர். ஒரு மாத காலம் கடந்த பிறகும் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திவருகிறார்.

இந்த விவகாரம் குறித்து, திமுக தலைவர் ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் போன்றோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அரசமைப்பு சட்டப்படி நடக்க மறுத்தால், ஆளுநர் வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிகள் அனைத்திலும் இருந்து அதிகபட்சமாக 8 பேர் மட்டுமே தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்க முடியும். இப்படியான கவலையளிக்கும் சூழ்நிலையில்தான், தமிழக அரசின் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் தாமதப்படுத்துகிறார்.” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

எழும் கேள்விகள்

  1. தமிழக எதிர்க் கட்சித் தலைவருக்கு ஆளுநர் எழுதிய பதில் கடிதத்தில், இந்த சட்டத்தின் மேல் முடிவு எடுக்க இன்னும் மூன்று நான்கு வாரங்கள் ஆகும் என்று கூறியிருக்கிறார். அப்படியானால் ஆளுநர் இந்தக்காலத்தில் இதைத் தவிர வேறு பிரதான வேலை என்ன செய்துகொண்டிருக்கிறார் ?
  2. இந்த சட்டம் பற்றி, ஆளுநரை அமைச்சர்கள் சந்தித்தபோதே இதனை அவர் தெரிவித்தாரா?
  3. அப்படியென்றால் அமைச்சர்கள் ஏன் இதுபற்றி தெரிவிக்கவில்லை?

என கேள்விகளை அடுக்குகிறார்.

ஒழிக்கப்படும் இடஒதுக்கீடு

“தமிழக மருத்துவக் கல்லூரிகளில், மத்திய அரசு பறித்துக் கொண்ட இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இந்த ஆண்டும் இட ஒதுக்கீடு இல்லை என அறிவித்துள்ளது, பல்வேறு போட்டித்தேர்வுகளில் பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவிகித இடம் கொடுப்பதற்காக பட்டியலினம், பழங்குடிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் இடங்களை பறித்துக் கொண்டது என தொடர்ச்சியாக வரக்கூடிய செய்திகள், இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டையே மொத்தமாக ஒழித்துக் கட்ட பாஜக முயற்சிக்கிறது என்ற கருத்திற்கு வலுச்சேர்க்கின்றன. ” என்று தாக்கியுள்ளார்.

ஆளுநரின் கடமை

”இப்படியான சூழலில் தமிழக ஆளுநரும் அரசமைப்புச் சட்டத்தின்படியான தனது கடைமையை நிறைவேற்றாமல், பாஜகவின் கொள்கையை அமல் படுத்தும் நோக்கிலேயே தமிழக அரசு பள்ளி மாணவர்கள் நலனையும் அதன் மூலம் தமிழக மருத்துவ கட்டமைப்பையும் சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு துணையாக உள்ளார் என கருத இடம் ஏற்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கவே முடியாது.”  என்று ஆளுநரின் செயலை சுட்டிக்காட்டுகிறார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்