Aran Sei

பள்ளிக் கட்டணம் – கொரோனா முடக்கத்திலும் தனியார் பள்ளிகள் பிடிவாதம்

கொரோனோ நோய்த்தொற்றைத் தொடர்ந்து பள்ளிகள் இந்த ஆண்டு முழுவதும் செயல்படாத நிலையில், பள்ளிக் கட்டணம் வசூலிப்பது பற்றிய பிரச்சனை, பல்வேறு மாநிலங்களில் நீதிமன்றங்களிலும், பெற்றோர் மத்தியிலும் தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.

தமிழ்நாடு

தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் ஆண்டு கட்டணத்தில் இன்னும் 35%-ஐ வசூலித்துக் கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது என்று தினகரன் நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது. ஏற்கனவே 40% கட்டணத்தை வசூலித்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு, பல பள்ளிகள் அதை வசூலித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு வசூலித்த கட்டணத்தில் 75% மட்டுமே 2020-21 கல்வியாண்டுக்கு வசூலிக்கலாம் என்று நீதிமன்றம் ஜூலை 17-ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. அதில் 40%-ஐ முன் கட்டணமாக ஆகஸ்ட் 31-க்கு முன்பும், 35% கட்டணத்தை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளும் வசூலிக்கலாம் என்று கூறியிருந்தது.

ஆனால், பள்ளிகள் 2020 இறுதிக்குள் திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ள நிலையில் எஞ்சிய 35% கட்டணத்தை கட்டுவதற்கு பிப்ரவரி 28, 2021 வரை பெற்றோருக்கு நேரம் அளித்துள்ளது, நீதிமன்றம்.

நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக முழுக் கட்டணம் வசூலிப்பதாக குற்றம் சாட்டப்பட்ட பள்ளிகளை அடையாளம் கண்டு அறிக்கை சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கு முந்தைய விசாரணையின் போது 32 பள்ளிகள் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அதிக கட்டணம் வசூலித்ததாக சிபிஎஸ்ஈ தகவல் தெரிவித்திருந்தது.

“தொடர்ந்து இணையவழி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன” எனவும், “கட்டணம் வசூலிக்காமல் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிரமம் ஏற்படுகிறது” என்றும் தனியார் பள்ளிகள் முறையிடுகின்றன. “பல பெற்றோர் 40% கட்டணத்தைக் கூட இன்னும் செலுத்தவில்லை. இதை கட்டாயமாக வசூலிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தமிழ்நாடு மழலையர், தொடக்க, மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்ஈ பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் கேட்டுக் கொண்டுள்ளார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மாணவர்கள் நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் எஸ் அருமைநாதன், “வகுப்புகள் இணையவழியில் நடத்தப்படுவதால் 75% கட்டணம் வசூலிப்பது நியாயமாகாது. பள்ளிகளுக்கு இப்போது உள்கட்டமைப்பு செலவுகள் எதுவும் இப்போது இல்லை. எனவே, 50% கட்டணத்தை மட்டும் இரண்டு அல்லது மூன்று தவணையாக வசூலிக்கும்படி பள்ளிகளுக்கு பரிந்துரைக்கிறோம்” என்று கூறியுள்ளார்.

ஒடிசா

ஒடிசா மாநிலத்தில் பள்ளிக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரும் மனு மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே, தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோருக்கு அறிவிப்பு அனுப்பி வருவது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதால டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவிக்கிறது.

நீதிமன்றம், தனியார் மற்றும் அரசு பள்ளிகள் மாநில அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி கட்டணம் தொடர்பாக சுமுகமான தீர்வுக்கு வரும்படி வழிகாட்டியிருந்தது. அதன்படி, ஒடிசா மாநில அரசு அதிகபட்சம் 26% வரை கட்டணத்தை குறைப்பது என்ற தீர்வை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. ஆண்டு கட்டணம் ரூ 6,000-க்கும் குறைவான பள்ளிகளுக்கு எந்த கட்டணக் குறைப்பும் கிடையாது.

ரூ 1 லட்சத்துக்கு அதிகமான கட்டணத்தில் 26%, ரூ 72,001 முதல் ரூ 1 லட்சம் வரையிலான கட்டணத்துக்கு 25%, ரூ 48,001 முதல் ரூ 72,000 வரை கட்டணத்துக்கு 20%, ரூ 24,001 முதல் ரூ 48,000 வரை கட்டணத்தில் 15%, ரூ 12,001 முதல் ரூ 24,000 கட்டணத்தில் 7.5%, ரூ 6,001 முதல் 12,000 வரையிலான கட்டணத்தில் 7.5% குறைப்பு செய்வது என்று உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

வழக்கின் மீதான அடுத்த விசாரணை 23-ம் தேதி நடைபெறவுள்ளது.

“வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போது கட்டணம் செலுத்தும்படி கேட்பது நீதிமன்ற அவமதிப்பாகும்” என்று ஒரு பெற்றோர் கூறியதை டைம்ஸ் ஆஃப் இந்தியா மேற்கோள் காட்டியுள்ளது.

“கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளையோ, இணையவழி வகுப்புகளுக்கான சுட்டிகளையோ பகிராமல் பள்ளிகள் நிறுத்தி வைக்கின்றன. இந்த நெருக்கடி காலத்தில் இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று” என்று தேபாஷிஷ் பத்ரா என்ற பெற்றோர் கூறியிருக்கிறார்.

ஆந்திர பிரதேசம்

ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்படுவதாக thehansindia.com செய்தி வெளியிட்டுள்ளது.

ஆந்திர பிரதேச பள்ளிக் கல்வி ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை ஆணையத்தின் தலைவர் நீதிபதி காந்தா ராவ், தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் 2020-21 கல்வி ஆண்டில் கட்டணத்தை உயர்த்துவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட ஆணையின்படி, கல்விக் கட்டணத்தை மாதம் தோறும் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும், பெற்றோர் மீது அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது. 2020-21 கல்வி ஆண்டுக்கான முதல் காலாண்டு கட்டணத்தை மட்டுமே இரண்டு தவணைகளில் வசூலிக்கலாம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இணையவழி வகுப்புகளை நடத்துவதற்கான மென்பொருள் கட்டணம், ஆசிரியர்களுக்கு சம்பளம் ஆகியவற்றுக்கு நிதி தேவைப்படுகிறது என்று பள்ளிகள் கூறினாலும், பல பள்ளிகள் காரணம் காட்டாமல் ஆசிரியர்களை வேலையை விட்டு நீக்கியிருப்பதையும், வேலையில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சொற்ப ஊதியமே கொடுக்கப்படுகிறது என்பதையும் hansindia சுட்டிக் காட்டியுள்ளது.

மேற்கு வங்காளம்

மேற்கு வங்காளத்தில் தனியார் பள்ளிகளை 20% கட்டணத்தைக் குறைக்கும்படியும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக வழங்கப்பட முடியாத சேவைகளுக்கான கட்டணத்தை முழுவதுமாக ரத்து செய்யும்படியும் உத்தரவிட்ட கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்து விட்டிருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தன.

உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகளின்படி, “அரசு உதவிபெறாத தனியார் பள்ளிகள் அரசின் தலையீடு இல்லாமல் தமது பள்ளிகளை நிர்வாகம் செய்யும் உரிமையை கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு பாதிக்கிறது” என்று தனியார் பள்ளிகள் வாதிடுகின்றன என்று டெலிகிராஃப் இந்தியா செய்தி தெரிவிக்கிறது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில், பள்ளிக் கட்டணங்களை 30 முதல் 40% வரை குறைப்பதற்கான மாநில அரசின் ஆணையை தனியார் பள்ளிகள் எதிர்த்து வருகின்றன. நவம்பர் 5-ம் தேதி முதல் இணையவழி வகுப்புகளை நிறுத்தி வைத்து 50,000 தனியார் பள்ளிகள் தமது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

மாநில அரசின் உத்தரவை எதிர்த்து தனியார் பள்ளி ஒன்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. என்று டைம்ஸ் நவ் நியூஸ் தெரிவிக்கிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்