Aran Sei

யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது: உச்சநீதி மன்றம் தீர்ப்பு

credits:ndtv.com

யுபிஎஸ்சி தேர்வுகளை தள்ளிவக்க வேண்டி அளித்திருந்த மனுவை உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையும் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு அக்டோபர் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

கொரோனா சூழல் மற்றும் வடகிழக்கு இந்தியாவில் பெய்து வரும் தொடர் கணமழை, வெள்ளம் காரணமாக மூன்று மாதங்களுக்கு தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பாக, மத்திய அரசு மற்றும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்வு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதால் இனி தேர்வினை ஒத்திவைக்க முடியாது என தேர்வாணையம் பதிலளித்தது.

இந்த மாதத் தொடக்கத்தில் நடைபெற்ற நீட் மற்றும் ஜெஇஇ (JEE) தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததைக் குறிப்பிட்டு சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் எனக் கூறியது.

பொதுமுடக்கத்தால் தேர்வு பயிற்சி மையங்கள் மற்றும் நூலகங்கள் திறக்கப்படாமல் இருந்தபடியால் உரிய முறையில் தேர்வுக்கு தயார் ஆவதில் சிக்கல் இருந்தது என்று மனுதாரர் கூறியிருந்தார்.

நீதிபதி தரப்பில், “1960 காலகட்டத்தில் இருந்துகொண்டு பேசுகிறீர்கள். தேர்வுக்கான பாடங்கள் இணையத்திலேயே கிடைக்கிறன.” என்று பதிலளித்துள்ளதாக லைவ் லா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், சிவில் சர்வீஸ் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு, தேர்வு நடத்துவதற்கு தேர்வாணையம்  பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் உச்சநீதி மன்றம் தெரிவித்துள்ளது.

 

குறிப்பாக, கொரோனா பாதிப்பு இருக்கும் நபர்களை தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது. ஒரு தேர்வு மையத்தில் நூறு பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தேர்வு எழுதுவோர் தங்குவதற்காக தேர்வு மையங்களுக்கு அருகிலேயே விடுதி அமையுமாறு மாநிலங்களுக்கு தேர்வாணையம் வலியுறுத்த வேண்டும் எனவும் உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.

நாடு முழுவதும் 72 தேர்வு மையங்களும் இரண்டாயிரத்துக்கும் மேலான கிளை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் சமூக இடைவெளி கடைபிடிப்பதில் எந்த சிக்கலும் இருக்காது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

சிவில் சர்வீஸ் தேர்வுக்கு இறுதி முறையாக தேர்வெழுத உள்ளவர்கள், கொரோனா காரணமாக தேர்வெழுத முடியாமல் போனால், வயது உச்சவரம்புக்கு உட்பட்டு அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என தேர்வாணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

திராவிட முன்னேற்ற கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.விலசன் செப்டம்பர் 21-ம் தேதி இதுகுறித்து மத்திய அமைச்சர் ஜித்தேந்திர சிங்-க்கு கடிதம் எழுதியிருந்தார்.

நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில் யுபிஎஸ்சி தேர்வு நடத்துவது என்பது தேர்வு எழுதுபவர்களின் நலனை பாதிக்கும் எனவும், பல மாநிலங்களில் வெள்ள அபாயம் இருப்பதால் பலரும் தேர்வெழுத முடியாமல் போகும் என்பதையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பொதுப்போக்குவரத்து இன்னும் இயக்கப்படாததால் பெரும்பாலானோருக்கு தேர்வு மையத்துக்கு வருவதிலும் சிக்கல் இருக்கும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

தேர்வை ஒத்தி வைக்கக்கோரி பிரியா குமாரி உட்பட சிலர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதைக் குறிப்பிட்டு,  நிலைமை கட்டுக்குள் வரும்வரை அனைத்து தகுதித் தேர்வுகளையும் ஒத்தி வைக்க வேண்டும் என்று எம்.பி வில்சன் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்