Aran Sei

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு : தடை கேட்கும் பாஜக ?

bjp against reservation Credits The Hindu

கடந்த செப்டம்பர் 15-ம் தேதி, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் சட்ட மசோதா அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடனும் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. பின்னர், ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் ஆளுநர் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்ததால் சட்டத்திற்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு தமிழ்நாடு அரசின் 5 அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்தனர். அமைச்சர்களின் சந்திப்பிற்கு பின்பும் கால தாமதம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், விரைந்து ஒப்புதல் அளிக்க கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் எழுதினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், இதுகுறித்து முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் அவகாசம் தேவை என்றும், தன்னை சந்தித்த அமைச்சர்களிடமும் இதையேதான் தெரிவித்தாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து, திமுகவிற்கும் அதிமுகவிற்குமான அறிக்கைப் போர் நடைபெற்று வந்தது. சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரை கண்டித்து ஆளுநர் மாளிகையின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை நடந்ததியது திமுக.

இந்த சட்டத்திற்கு விரைவில் ஒப்புதல் அளிக்குமாறு தமிழகத்தில் இருக்கும் ஏறக்குறைய அனைத்து கட்சிகளும்  தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.

தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் கே.அண்ணாமலை  “கிராமப்புற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் திட்டத்தை உடனடியாக அனுமதித்து, மாணவர்களின் மனதில் இருக்கும் குழப்பத்தை நீக்க மேதகு ஆளுநரை நான் கேட்டுக்கொள்கிறன். மிக முக்கியமான இதை, இதற்கு மேலும் தாமதப்படுத்த வேண்டாம் “ என்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பாஜகவின் தலைவர் எல்.முருகனும் காலதாமதம் செய்யாமல் ஆளுநர் உடனே ஒப்புதல் அளிக்க வேண்டும் என செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திற்கு தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் நந்தகுமார் கடிதம் எழுதியிருந்தார் அந்த  கடிதத்தில் “தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் மருத்துவக் கல்லூரியில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்ததைத் தமிழகத்தில் பயிலும் அனைத்து வகை மாணவர்களுக்கும் வழங்கிடும் வகையில் அரசாணை வெளியிட வேண்டும். தற்போதுள்ள அரசாணைக்கு ஆளுநர் ஒப்புதல் ஆணை பிறப்பிக்க கூடாது என்ற எதிர்ப்பைப் பதிவு செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி நடந்து முடிந்த கூட்டத்தொடரில் அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தந்து, அதை அரசாணையாக ஆளுநரிடம் எழுதிக் கையொப்பமிட்டு அரசாணை வெளியிடத் திட்டமிட்டுள்ளது” என்று அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

“அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பு, ஒரு கண்ணுக்கு வெண்ணெய் வைக்கக்கூடிய வேலையைச் செய்வது தவறு. குறைந்தபட்சம் அரசுப் பள்ளியில் படிக்கும் தமிழ்வழி மாணவர்கள் போல் தனியார் பள்ளியில் படிக்கும் தமிழ் வழி மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தரவேண்டும்” என்றும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் நந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.

நந்தகுமார், பாஜகவின் கல்வி பிரிவு மாநில செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கடிதத்தில் பாஜகவின் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் கட்சியில் இருந்துகொண்டு கட்சிக்கு எதிரான கருத்தை பொதுவெளியில் வைத்ததால், கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். நந்தகுமார் நீக்கப்பட்ட தகவலைபாஜகவின் தமிழக கல்வி பிரிவு தலைவர் தங்க கணேஷ் வெளியிட்டுள்ளார்.

இந்த நீக்கம் குறித்து நந்தகுமார், நியுஸ் 7 தமிழ் செய்தி தொலைகாட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ”தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்க பொதுச்செயலாளராக இந்த கடிதத்தை ஆளுநருக்கு எழுதியதாகவும் இதில் பாஜகவினுடைய லெட்டர் பேடையோ பாஜக என்ற பெயரையோ பாஜகவில் நான் வகிக்கும் பதவியையோ குறிப்பிடவில்லை” என்று கூறியுள்ளார்.

“கட்சி என்பது வேறு சங்கம் என்பது வேறு” என்று தெரிவித்துள்ள நந்தகுமார் “பாஜக மீதும் அதன் தலைவர் மீதும் அவதூறு ஏற்படுத்தவே 7.5 % இட ஒதுக்கீடுக்கு எதிராக தமிழக பாஜக  தடை கேட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன “ என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்