Aran Sei

`அருந்ததி ராய் நூலை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்’ – தமுஎகச

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முதுநிலை பட்டப்படிப்பு பாடத்திட்டத்திலிருந்து அருந்ததி ராய் எழுதிய ’வாக்கிங் வித் த காம்ரேட்ஸ்’ என்கின்ற நூல் நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நூலை நீக்குவது,  பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். அதை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆர்எஸ்எஸ்ஸின் துணை அமைப்பான ஏபிவிபி என்கிற மாணவர் அமைப்பு கொடுத்த புகாரின்பேரில் பல்கலைக்கழகம் அந்தப் பாடத்தைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கியுள்ளது. இதைப் பல்கலைக்கழகச் சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்றும் அதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ள தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், மீண்டும் பாடத்திட்டத்தில் அந்நூலைச் சேர்க்க வேண்டும் என்று இணைய வழி கண்டனக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.

`தடையால் புத்தக வாசிப்பைத் தடுக்க முடியாது’ – அருந்ததி ராய்

இதற்குக் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், எழுத்தாளர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதன் தொடர்ச்சியாக நேற்று (நவம்பர் 12) மாலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் இணைய வழியாக கண்டனக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அக்கூட்டத்திற்கு அமைப்பின் மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை தாங்கியுள்ளார்.

`அருந்ததி ராய் புத்தகத்தை நீக்கியது வன்மப் போக்கின் தொடர்ச்சி’ – ஆ.ராசா கண்டனம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கல்வியாளர் வே.வசந்திதேவி, மக்களவை உறுப்பினர்கள் கவிஞர் கனிமொழி, சு.வெங்கடேசன், பத்திரிகையாளர் ஃப்ரண்ட் லைன் விஜயசங்கர், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.நாகராசன், இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தியுள்ளனர். கண்டனக் கூட்டத்தை தமுஎகச பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா ஒருங்கிணைத்து நடத்தியுள்ளார்.

அப்போது பேசிய முனைவர் வே.வசந்திதேவி, “கல்வித் திட்டத்தில் ஒரு பாடத்தைச் சேர்ப்பதற்கும் நீக்குவதற்கும் ஒரு நடைமுறை உள்ளது. ஆட்சிமன்றக் குழு, நிலைக்குழு, சிண்டிகேட் குழு ஆகியவை முடிவு செய்தால்தான் எதையும் செய்ய முடியும். ஆனால் இவை எதையும் கலந்துகொள்ளாமல் துணைவேந்தர் செயல்பட்டிருப்பது, ஒரு மதவாதக் கும்பல் சொன்னவுடனேயே பாடத்திட்டத்தை நீக்கி இருப்பது பல்கலைக்கழக அமைப்புக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும்.” என்று கூறியுள்ளார்.

இரண்டு சதித் திட்டங்களும் ஒரு எரியூட்டலும் – அருந்ததி ராய்

”பழங்குடிகள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்கள், இயற்கை வளங்கள் கார்ப்பரேட் கொள்ளைக்கு உள்ளாவது, பழங்குடி மக்களை வேட்டையாடுவது எனத் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அநியாயத்தை இந்தப் புத்தகம் அம்பலப்படுத்துகிறது.” என்று அப்புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

அதைத் தொடர்ந்து, மக்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி பேசிய போது, “ இப்புத்தகம் பள்ளிப் பாடப்புத்தகத்தில் வைக்கப்படவில்லை. முதுகலைப் படிப்பில்தான் வைக்கப்பட்டுள்ளது. முதுகலை படிக்கும் மாணவர்கள் எல்லாக் கருத்துகளையும் தெரிந்துகொள்ளக் கூடியவர்கள். அந்த மாணவர்களிடையே ஒரு தெளிவு இருக்கும். எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எதை மறுக்க வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். சிந்திக்கக்கூடிய வயதை அடைந்தவருக்கு அந்தப் பாடம் வைக்கப்பட்டுள்ளது. அதை நீக்கி இருப்பது முறையல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

அருந்ததிராய் நூல் பாடத்திட்டத்திலிருந்து நீக்கம் – பன்முகத்தன்மையை அழிக்கும் செயல் – கனிமொழி

மேலும், எதைப் படிக்க வேண்டும், எது சினிமா, எது கலை என்று எல்லாவற்றுக்கும் இவர்கள்தான் அனுமதி தர வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேராசிரியர் நாகராஜன் பேசிய போது, “அது ஒரு தேச விரோத நூல் என்றால் அரசாங்கமே தடை செய்யலாமே? ஆனால் ஒரு துணைவேந்தருக்குப் பாடத்திட்டத்திலிருந்து ஒன்றை நீக்குவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. இந்த நடைமுறை நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இன்று வரையிலும் துணைவேந்தரின் முடிவுக்கு சிண்டிகேட் ஒப்புதல்  தரவில்லை. எனவே, நமது போராட்டத்தின் மூலம் துணைவேந்தரின் இந்த உத்தரவைத் தடுத்து நிறுத்த முடியும். ”

`பல்கலைக்கழகம் பவ்விப் பணிந்து செயல்படுவது, மகா வெட்கம்’ – கி.வீரமணி காட்டம்

 ’ஃப்ரண்ட் லைன்’ பத்திரிகையின் ஆசிரியர் விஜயசங்கர் பேசுகையில், “இந்தக் கும்பலிடம் மதம் மட்டும்தான் இருக்கிறது. அதன்மீது கேள்வி கேட்டால் கூட பயப்படுகிறார்கள். ஒரு மூடர் கூட்டத்திடம் நாம் சிக்கிக்கொண்டிருக்கிறோம். இன்னும் நிறைய பிரச்சனைகள் வரக்கூடும். கல்வி நிலையங்களில் பேச வருபவர்கள் யார் என்பதைக்கூட இவர்கள் கண்காணிக்கிறார்கள். அறிவுப்பூர்வமாகச் சிந்திப்பதோ அறிவுப்பூர்வமாகக் கேள்வி கேட்பதோ இவர்களுக்கு ஏற்புடைய செயலல்ல.” என்று தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன்,  ”பல்கலைக்கழகங்களில் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது. மாநிலங்களின் கல்வி உரிமையில் அது தொடர்ந்து தலையிடுகிறது. கல்வித்துறை இன்றைக்கு மிகக்கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. யாருடைய கருத்துகளையும் கேட்காமல் தன்னிச்சையாக துணைவேந்தர் இத்தகைய செயலில் ஈடுபட்டு இருக்கிறார் என்றால் இவ்வளவு பெரிய அழுத்தம் அவருக்கு எங்கிருந்து வருகிறது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, “ஏபிவிபி அமைப்பு ஒரு புகார் கொடுத்து அந்தச் செய்தி சில தினங்களுக்கு முன் ஆர்எஸ்எஸ் நடத்தும் ஆர்கனைசர் பத்திரிகையில் வெளிவந்த பிறகுதான் இந்த நடவடிக்கை நடந்து இருக்கிறது. ஏபிவிபி அமைப்பு ஏற்கனவே வெண்டி டோனிகரின் ஒரு புத்தகத்தையும் தடை செய்ய இப்படி போராடினார்கள்.” என்று கூறியுள்ளார்.

பின்னர் நூலை பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வலியுறுத்தும் தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா முன்மொழிந்து பேசியுள்ளார். 400-க்கும் மேற்பட்டோர் கண்டனக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்