Aran Sei

தொல்லியல் துறையில் தமிழ் – பணிந்தது மத்திய அரசு

மிழகம் முழுதும் எழுந்த கடும் கண்டனங்களைத் தொடர்ந்து மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் தொல்லியல் துறையின்  ‘பண்டித் தீன்தயாள் உபாத்யா கல்வி நிறுவனம்’ அமைந்துள்ளது. இதில், தொல்லியல் சம்பந்தப்பட்ட பல்வேறு வகை பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் ஒன்றான 2 ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான தகுதியாக வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகிய துறைகளில் முதுநிலை பட்டப் படிப்பு (எம்.ஏ) முடித்திருக்க வேண்டும்.

அதற்கு செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபு அல்லது பெர்ஷியன் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், செம்மொழி பட்டியலில் இடம்பெற்ற தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழித்துறைகளில் பயின்றவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை.

இதையடுத்து, மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழையும், தமிழ்ப் பண்பாட்டையும் புறக்கணித்து வருவதாக தமிழ் ஆர்வலர்களும், திமுக உட்பட எதிர்க்கட்சிகளும் பல்வேறு இயக்கங்களும் எதிர்ப்பு தெரிவித்தன.

அதையொட்டி அக்டோபர் 7-ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இந்திய நாட்டின் தொல்லியல் சான்றுகளில் அறுபது சதவீதத்திற்கும் மேலான சான்றுகளைக் கொண்டு விளங்கும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்திருப்பது, தமிழ் மொழியின் மீதான பண்பாட்டுப் படையெடுப்பாகும். இந்திய ஒன்றியத்தின் ஒருமைப்பாட்டை ஒழித்திட முனையும் இந்தப் பிற்போக்கு நடவடிக்கைக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து கண்டனக் குரல் எழுப்புவோம்!” என்றார்.

நேற்று, தொல்லியல் பட்டயப்படிப்பில் தமிழைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதினார். அதில், “மத்திய தொல்லியில் துறையின் பட்டய படிப்பில் சேர கல்வித்தகுதியாக தமிழ்மொழியையும் சேர்க்க வேண்டும். பல மொழிகளின் 48 ஆயிரம் பழங்கால கல்வெட்டுகளில் 28 ஆயிரத்திற்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.

2004 ம் ஆண்டிலேயே செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ் தற்போது புறக்கணிக்கப் பட்டு உள்ளது வேதனையளிக்கிறது. தமிழ்மொழியை சேர்ப்பதற்கான நடவடிக்கையை பிரதமர் மேற்கொள்ள வேண்டும்.” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று மத்திய அரசின் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்படும் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான கல்வித் தகுதியில், தமிழ் மொழியையும் சேர்த்து திருத்தம் செய்து புதிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதில், ‘இந்திய அரசால் செம்மொழிகளாக அறிவிக்கப்பட்ட தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா, பாலி, பராகிரித், அரபி அல்லது பார்ஸி ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் தொல்லியல்துறை பட்டயப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை வரவேற்கும் விதமாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

“மத்திய தொல்லியல் துறையின் பட்டயப் படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக்கிறது. வரவேற்கிறேன்! மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.”

இது குறித்து, மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் ‘இந்திய தொல்லியல் துறை வரவேற்பும் எதிர்பார்ப்பும்’ என்ற தலைப்பில் செய்த ட்வீட்டில், ”இந்தியத் தொல்லியல் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது.

இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பை வரவேற்கிறேன். இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனைத் தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது. சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க தமிழகமே உரத்துக் குரல் கொடுத்தது.

இந்தியத் தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, ‘இந்திய பண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தையும்’ ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். “ என்றார்.

கட்சிகள் என்ற ரீதியில் பிரியாமல், மத்திய அரசுக்கு எதிராக ஒன்றுபட்டு குரல் எழுப்பியதால் இந்தக் கோரிக்கை நிறைவேறி இருக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்