Aran Sei

கொரோனா பேரிடர் – இந்திய மாணவர் சேர்க்கை வீழ்ச்சி

ந்தியாவில் இருந்து அமெரிக்கா படிக்கச் சென்ற மாணவர்களில் 4.4 சதவீதம் பேர் 2019-20 ஆம் ஆண்டில் இடைநிற்றலாகி இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் இது மோசமான வீழ்ச்சி என்று அமெரிக்கா வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என தி இந்து இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர் சேர்க்கை 42 விழுக்காடு குறைந்துள்ளது என்றும் 90 விழுக்காடு கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையைத் தள்ளி வைத்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறையுடன் இணைந்து சர்வதேசக் கல்வி நிறுவனம் (International Institute of Education) நடத்திய வருடாந்திரக் கணக்கெடுப்பான ‘ஓபன் டோர்ஸ் 2020’ புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஒரு மில்லியன் சர்வதேச மாணவர்களில் 18 விழுக்காடு இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் 35 விழுக்காடு சீனா மாணவர்கள் என்றும் அந்தப் புள்ளி விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது அமெரிக்கக் கல்வி நிறுவனங்களின் சர்வதேச மக்கள் தொகையில் பெரும் பங்கைக் கொண்டுள்ளது.

கொரோனா தொற்றின் தாக்கத்தால் 2020-21 ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் இன்னும் வீழும் என்றும் 700 கல்வி நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் சர்வதேச மாணவர்களில் 20 சதவீதம் பேர் இந்த ஆண்டு ஆன்லைனில் படிக்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

ஆன்லைனில் படிக்கத் தெரிவுசெய்தவர்களுக்குச் சவால்கள் மிகப்பெரியதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க வேலை நேரத்தில் ஆன்லைன் வகுப்புகளில் உள்நுழையும் சர்வதேச மாணவர்கள், வெவ்வேறு நேர மண்டலங்களில் வாழும்போது அவர்களின் கல்வி நேரத்தை மாற்றியமைப்பதில் சவால்கள் உள்ளன”என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஆன்லைன் வகுப்பெடுக்கும் அமெரிக்கக் கல்வி நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களுக்கு நேரமேலாண்மை காரணமாகப் பாட அட்டவணைகளை மாற்றியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்