Aran Sei

நீட் தரவரிசை – முதலிடம் பெற்ற மாணவன் தோல்வியா?

ருத்துவத் தகுதி தேர்வில், அகில இந்தியத் தரவரிசையில் இடம் பெற்ற மாணவர் ஒருவருக்குத் தோல்வியுற்றதாக மதிப்பெண் சான்றிதழ் அனுப்பியுள்ளது, தேசியத் தேர்வு முகமை.

நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடைபெற்றது. அதன் முடிவுகளை தேசிய தேர்வாணையம் கடந்த வெள்ளி அன்று வெளியிடப்பட்டது.

கொரோனா சூழலால் செப்டம்பர் மாதம் தேர்வு எழுத முடியாமல் போன மாணவர்களுக்கு அக்டோபர் 14-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டு இரண்டு தேர்வுகளுக்குமான முடிவுகளும் சேர்த்து வெளியிடப்பட்டன. மத்தியக் கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் தேர்வு முடிவுகளை வெளியிட்டிருந்தார்.

ராஜஸ்தான் மாநிலம், சவாய் மதோபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், 17 வயதான மிருதுல் ராவத். நீட் தேர்வு முடிவுகள் வெளியான அன்று, முதலில் முடிவைப் பார்த்தபோது 720 மதிப்பெண்ணுக்கு, 329 மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதாகக் காட்டியிருக்கிறது.

உடனே ஓ.எம்.ஆர் தாளையும், தேசியத் தேர்வு முகமை வெளியிட்ட விடை தொகுப்பையும் வைத்து சரி பார்த்திருக்கிறார். அதற்குப் பின் இரண்டாவது முறை சோதனை செய்து பார்த்த போது வந்த மதிப்பெண் சான்றிதழில், 720 மதிப்பெண்ணுக்கு 650 வாங்கியிருப்பதாகக் காட்டியிருக்கிறது என்று ‘டிஎன்ஏ இந்தியா’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அச்செய்தியில், அம்மாணவர் பொதுப் பிரிவிற்கான அகில இந்தியத் தரவரிசைப் பட்டியலில் 3577-வது இடத்தைப் பெற்றுள்ளதாகவும், எஸ்.சி பிரிவிற்கான அகில இந்தியத் தரவரிசையில் முதல் இடம் பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

மிருதுல் ராவத்துக்கு வந்த இரண்டாவது மதிப்பெண் சான்றிதழிலும் தவறுகள் இருந்திருக்கின்றன. அதில் 650 மதிப்பெண் என்று எண்களில் எழுதப்பட்டு இருந்திருக்கிறது. அதேநேரம், 329 மதிப்பெண் என்று வார்த்தைகளில் எழுதப்பட்டிருந்ததாக ‘டிஎன்ஏ இந்தியா’ தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 3,536. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 88,889 என்றும், தேர்ச்சி விகிதம் 56.62% என்றும் உள்ளது. உத்தர பிரதேசத்தில் 1,56,992 பேர் தேர்வு எழுதியதில், 7,323 பேர் தேர்ச்சி என்றும், தேர்ச்சி விகிதம் 60.79% என்றும் தவறான புள்ளிவிவரம் வெளியாகியுள்ளது.

அதேபோல் உத்தரகாண்டில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 12,047 ஆக உள்ளது. ஆனால் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 37,301 என்று வெளியாகியுள்ளது. தெலங்கானாவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி சதவிகிதம் அதிகமாக உள்ளது.

தேர்வு முடிவுகளின் புள்ளிவிவரத்தில் குளறுபடி ஏற்பட்ட நிலையில், தேசியத் தேர்வு முகமை இணையத்தளத்தில் இருந்து முடிவுகள் நீக்கப்பட்டன. பிறகு திருத்தப்பட்ட பட்டியல் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. நீட் தேர்வு விடைத்தாள் திருத்துவதிலும் குளறுபடி நடந்திருப்பதாக மாணவர்கள் கூறினார்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்