Aran Sei

நீட் தேர்வு குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அறிக்கை – முக்கிய அம்சங்கள் என்ன?

Image Credits: India TV

மிழ்நாட்டில் நீட் தேர்வு தொடர்ந்து நடைபெற்றால், கிராமப்புற ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர முடியாத நிலை ஏற்படும் என்று நீதிபதி ஏ.கே.ராஜன் குழு சமர்ப்பித்த அறிக்கையில் புள்ளிவிவரங்களுடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் , திமுக வலியுறுத்தி வந்த நிலையில், திமுக ஆட்சிப்பொறுப்பேற்றதும், ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில், நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்தது.  அந்தக் குழு  பொது மக்களிடம் கருத்துப் பெற்று ஆய்வு மேற்கொண்டு, தமிழ்நாடு அரசிடம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது.

நேற்று (செப்டம்பர் 20), ஏ.கே.ராஜன் குழுவின் 165 பக்க  அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதில், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு இதேபோல் ஒரு சில ஆண்டுகள் தொடரும்பட்சத்தில், தமிழ்நாட்டு சுகாதார கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்படும் என்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவையான மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

‘மாணவர் நலனுக்கும், மாநில நலனுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் ஆபத்தானவை’ – நடிகர் சூர்யா

மேலும், “அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவ நிபுணர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். சுகாதார கட்டமைப்பு தரவரிசையில் பிற மாநிலங்களுக்குக் கீழ் தமிழ்நாடு செல்லும் நிலையும் ஏற்படலாம். கிராமப்புற, நகர்ப்புற ஏழை, எளிய மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத சூழல் ஏற்படும். சுறுங்கச்சொன்னால், சுதந்திரம் அடைவதற்கு முந்தைய நிலைக்கு தமிழ்நாடு செ்ன்றுவிடும்.” என்று அக்குழு எச்சரித்துள்ளது.

“நீட் தேர்வை நீக்குவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனே மேற்கொள்ளலாம். இந்திய மருத்துவ கவுன்சில் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ இடங்கள் மருத்துவ கவுன்சிலின் சட்டதிட்டப்படிதான் நிரப்பப்பட வேண்டும் என்று சட்ட விதிகள், அரசியல் சட்டக் கூறுகளைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம்.” என்று ஏ.கே.ராஜன் குழு பரிந்துரைத்துள்ளது.

மேலும், 2007 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நுழைவுத்தேர்வு ரத்து சட்டம் போல, நீட் தேர்வை ரத்துசெய்யும் வகையிலும் சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெறலாம் என்றும் பரிந்துரைத்துள்ளது.

நீட் தேர்வு குறித்து ஆராய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை – உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்

நீட் தேர்வுக்கு முன்பு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்களின் குடும்ப நிலை, சமூக, பொருளாதார நிலை, படித்த பள்ளிகள் விவரம் போன்றவையும், நீட் தேர்வுக்கு பிறகு மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் நிலையும் எவ்வாறு மாறுபட்டிருக்கிறது என்று புள்ளிவிவரங்களுடன் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, நீட் தேர்வுக்குப் பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த ஆங்கில வழி மாணவர்களின் விழுக்காடு 56.02 தொடங்கி 69.53 வரை உயர்ந்துள்ளது என்றும் ஆனால், தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் விழுக்காடு 14.44 தொடங்கி 1.7 ஆக குறைந்துள்ளது என்று விளக்கப்பட்டுள்ளது.

முதல் முறை நீர் தேர்வு எழுதுபவர்களை விட, ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்களுக்கு தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கிறது என்று அக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்