Aran Sei

65 மருத்துவ உயர்படிப்பு அனுமதிகள் செல்லாது – உயர் நீதிமன்றம்

Image Credits: New Indian Express

ருத்துவப் படிப்புகளில் அனுமதிக்கப்பட்ட தகுதியற்ற மாணவர்களுக்கு நீதிமன்றங்கள் தவறான அனுதாபம் காட்டுவதை நிறுத்தும் நேரம் வந்துவிட்டது என்று, நேற்று, மெட்ராஸ் உயர் நீதிமன்றம் கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு மே மாதம், பல்வேறு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் டிப்ளோமா படிப்புகளில் சேர்ந்த 65 மருத்துவர்களின் அனுமதிகள் செல்லாது என்று அறிவித்துவிட்டு மெட்ராஸ் உயர் நீதிமன்றம் இதனைக் கூறியுள்ளது.

இந்த மாணவர்கள் இப்போது கிட்டத்தட்ட படிப்புகளை முடித்துவிட்டனர். நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுகளின் அடிப்படையில் தங்கள் இறுதித் தேர்வுகளையும் எழுதியுள்ளனர்.

மருத்துவ கவுன்சிலிங் செயல்முறை தொடங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் உச்சநீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு ஆகியவற்றைப் பயன்படுத்தி தகுதியற்ற மாணவர்களைச் சந்தேகத்திற்குரிய முறைகள் மூலம் ஆண்டுதோறும் அனுமதிக்கும் மருத்துவ நிறுவனங்களுக்கு ஒரு தீர்க்கமான செய்தி அனுப்பப்பட வேண்டும், என்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளதாக ‘தி இந்து’  இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

`அத்தகைய அணுகுமுறை நீதிமன்றங்களால் பொறுத்துக் கொள்ளப்படாது. மேலும் இது போன்ற வழக்குகளுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படாது.

“ஒவ்வொரு ஆண்டும், முதல் கட்ட கலந்தாய்வைத் தொடங்குவதற்குக் கூட ஒரு பெரிய தாமதம் இருப்பதைக் காண முடிகிறது. இது போன்ற குழப்பங்கள் இயல்பாகவே ஏற்படுகிறதா அல்லது சுய நிதி நிறுவனங்களே மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள இந்தக் குழப்பங்கள் உதவுகிறதா என்பது தெரியவில்லை.

விதிமுறைகளை மீறி 65 மருத்துவர்களை முதுகலை பட்டப்படிப்பில் அனுமதித்ததற்காக, அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி, விநாயக மிஷன் மருத்துவக் கல்லூரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, வெங்கடேஸ்வர மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மற்றும் பாண்டிச்சேரி மருத்துவ அறிவியல் நிறுவனம் ஆகியவற்றிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்தார்.

65 மாணவர்களையும் வெளியேற்றுமாறு ஆறு நிறுவனங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சிலே (எம்சிஐ) உத்தரவிட்டது. இருப்பினும், அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகி, 2018-ம் ஆண்டு வெளியேற்றக் கோரி பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிராக இடைக்கால தடை பெற்றனர்.

இடைக்கால தடைக்கு அனுமதி அளிக்கும்போது, படிப்பை முடித்தபின்னர் ரிட் மனுக்கள் இறுதித் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டால் எந்தவோர் இழப்பீடையும் கோரக் கூடாது என்று நீதிமன்றம் மாணவர்களிடமிருந்து ஒரு உறுதிமொழியைப் பெற்றுக்கொண்டது.

“எனவே, இந்த ரிட் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவது அவர்களின் தொழில் வாழ்க்கையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்றாலும், இது முற்றிலும் எதிர்பாராத ஒன்று அல்ல” என்று நீதிபதி கூறியுள்ளார். இருப்பினும், அவர்கள் தங்கள் படிப்பை முடித்தபின் இத்தகைய உத்தரவை நிறைவேற்றுவது வேதனையாக உள்ளது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

இடைக்கால உத்தரவுகளைப் பெற்ற பின்னர் வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததால், மாணவர்கள் மீதும் தவறு உள்ளது என்றார். இறுதித் தேர்வுகளை எழுதுவதிலிருந்து அவர்களை தடுத்தபோதுதான், வழக்குகள் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மருத்துவர்கள் விரும்பினர். நிறுவனங்களும் மாணவர்களும் கணக்கிடப்பட்ட அபாயத்தை எடுத்து இத்தகைய ஆபத்தான சூழலில் நுழைந்து உள்ளனர். ஆகையால், அவர்கள் விளைவுகளுக்கும் தயாராக இருக்க வேண்டும்.

134 பக்கத் தீர்ப்பை எழுதிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஒவ்வொரு ஆண்டும் கல்லூரி சேர்க்கை தொடர்பான வழக்குகளில் இடைக்கால உத்தரவுகளை வழங்கும் நீதிமன்றங்களிலும் மாணவர்கள் தங்கள் படிப்புகளை முடித்த பின்னரே அந்த வழக்குகளை இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆகையால், நீதிமன்றங்கள் மீதும் தவறு உள்ளது.

தற்போதைய வழக்கிலிருந்து பாடத்தைக் கற்று, இது போன்ற வழக்குகளுக்கு நீதிமன்றங்கள் முன்னுரிமை அளித்து, மாணவர்கள் தங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை வீணடிக்காத வகையில், விரைவாகத் தீர்ப்பளிக்க வேண்டும்”. இவ்வாறு என்.ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளதாக ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்