Aran Sei

கழிவறைகளை காணோம்: சிஏஜி அறிக்கை

credit: swachhindia.ndtv.com

பொதுத் துறை நிறுவனங்கள் அரசு பள்ளிகளில் கட்டியதாகக்  கூறிய கழிவறைகளில் 40 விழுக்காடு காணவில்லை என்று இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General of India) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கூடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிவறைகள் இருக்க வேண்டும் என்பது கல்வி உரிமை சட்டத்தின் இலக்குகளில் ஒன்றாகும். இதை நிறைவேற்றுவதற்கு இந்திய அரசின் மனித வளத்துறை சுவச் பாரத் திட்டத்தை 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

இந்தியாவில் 10.8 லட்சம் அரசுப் பள்ளிகள் உள்ளன. 53 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள்,  குறிப்பாக மின்சக்தி, நிலக்கரி மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் 1.4 லட்சத்துக்கும் அதிகமான கழிவறைகளை அந்தப் பள்ளிகளைக் கட்டின. இந்த நிறுவனங்கள் 15 மாநிலங்களில் மொத்தம் 1.4 லட்சம் கழிவறைகளைக் கட்டின. அவற்றில், 2,695-ஐ சுற்றாய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தலைமை தணிக்கையாளர் (சிஏஜி) நேற்று நாடாளுமன்றத்தில் சுற்றாய்வு அறிக்கையை தாக்கல் செய்தார். அரசுப் பள்ளிகளில் புதிதாகக் கட்டப்பட்ட கழிவறைகளில் 70 விழுக்காடுக்கும் அதிகமாக தண்ணீர் வசதிகள் இல்லாமல் இருக்கின்றன. 75 விழுக்காட்டுக்கும் அதிகமான கழிவறைகள் சுகாதாரமான முறையில் பராமரிக்கப்படாமல் இருக்கின்றன.

அந்தச் சுற்றாய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 2695 பள்ளிகளில் 83 கழிவறைகள் கட்டப்படவே இல்லை. மற்றொரு 200 கழிப்பறைகள் கட்டப்பட உள்ளதாகவும் 86 கழிப்பறைகளைக் காணவில்லை.

ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து படிக்கக்கூடிய 1,967 பள்ளிகள் சுற்றாய்வு செய்யப்பட்டது. அதில், 99 பள்ளிகளில் கழிவறைகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. 436 பள்ளிகளில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிவறைதான் உள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கு தனித்தனியான கழிவறைகள் இருந்தும் கூட பயன்படுத்த முடியாத நிலையில் 27 விழுக்காடு பள்ளிகள் உள்ளன.

கட்டப்பட்ட கழிவறைகளும் கூட குறைபாடுகள் உடையாதாகவும் பயன்படுத்துவதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கின்றன.

கழிவறைகளில் சோப், தண்ணீர் வாளி, கிருமி நாசினி போன்றவை இல்லை என்றும் கழிவறை நோக்கி போகும் பாதைகள் தூய்மை இல்லாமல் இருக்கின்றன.

பள்ளிகளில் கழிவறைகள் இருப்பதும் அதை சுத்தமாக பராமரிப்பதும் பெண்கள் பள்ளிக்கூடங்களுக்கு இடைநிற்காமல் வருவதற்கும் கல்வி கற்பதற்கும் அவசியமாக உள்ளது என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொதுக் கொள்கை துறையில் பணிபுரியும் துணைப் பேராசிரியர் அஞ்சலி ஆதுக்கியா குறிப்பிடுகிறார்.

பள்ளிகளில் பெண்களுக்கு தனியாக கழிவறைகள் இல்லாமல் இருப்பது பெண்கள் பள்ளி படிப்பை இடைநிறுத்துவதற்கு காரணமாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்