Aran Sei

மருத்துவப் படிப்பில் மாநில இடஒதுக்கீட்டை அமுல் படுத்துக – திமுக எம்.பி வில்சன்

நீட் தேர்வு முடிவுகள் வெளிவரும் முன் மருத்துவ கல்லூரிகளில் மாநில அரசின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் பி.வில்சன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய அளவிளான இடஒதுக்கீட்டை உடனே அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

தமிழக மருத்துவ கல்லூரிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினைச் சேர்ந்த மாணவர்களுக்கு உரிய 50% இடங்களை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்திருந்தன.

தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், அகில இந்திய அளவில் மருத்துவ படிப்புக்கு மாநில இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என வழக்கு தொடரப்பட்டிருந்தது.

ஜூலை 27-ம் தேதி வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதி மன்றம், இதர பிற்படுத்தப்பட்டவருக்கு மத்திய அரசு 50% இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றலாம் என கூறியிருந்தது.

மாநில அரசின் இடஒதுக்கீட்டு கொள்கையை பின்பற்றுவதில் மத்திய அரசுக்கு சட்ட ரீதியாகவோ அரசியல் ரீதியாகவோ எந்தத் தடையும் இல்லை எனவும் உயர் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

மத்திய மாநில அரசுகளின் சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்திய மருத்துவ கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இடஒதுக்கீடு குறித்து முடிவெடுத்து மூன்று மாதங்களில் மத்திய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

செப்டம்பர் 13-ம் தேதி நடத்தப்பட்ட மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வின் (நீட்) முடிவுகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், செப்டம்பர் 7-ம் தேதி ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இந்த  குழுவின் முதல் சந்திப்பு 22-ம் தேதி நடந்தது.

இதுகுறித்து மத்திய அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் எம்.பி.வில்சன், ஜூலை 27-ம் தேதி உயர்நீதி மன்றம் அளித்துள்ள உத்தரவுபடி மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுத்து இந்தாண்டே இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உரிய மருத்துவப் பட்டப்படிப்பு இடங்களை உறுதி செய்ய வேண்டும் என கோரியுள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் வில்சனிடம் பேசியபோது “மருத்துவ கல்லூரிகளில் மாநிலத்தின் இடஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு மட்டும் தொடர்ந்து புறக்கனிக்கப்பட்டு வருகிறது. 18% இடஒதுக்கீடு கொடுக்க வேண்டிய எஸ்.டி பிரிவினருக்கு 15% மட்டுமே வழங்கப்படுகிறது. 1% இடஒதுக்கீடு மட்டுமே பெற வேண்டிய எஸ்.டி பிரிவுக்கு 7.5% அளிக்கப்படுகிறது” என்று கூறினார்.

“மருத்துவ படிப்புக்கான ஒவ்வொரு இடமும் நம் மாநிலத்தின் வளம். மருத்துவ கல்லூரிகள் கட்டுவதற்கு கோடிக்கணக்கில் செலவிடப்படுகிறது. ஆகவே, மாநிலத்தின் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் எனக் கேட்கிறோம்” என்கிறார் வில்சன்.

அவர் மேலும் கூறுகையில் “உயர்நீதி மன்றம் மாநிலத்தின் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது. தீர்ப்பின் மீது கோரப்பட்ட இடைக்கால தடையையும் நீதி மன்றம் ஏற்கவில்லை. இடஒதுக்கீடு வழங்குவதை மத்திய அரசு மறுக்க முடியாது. நீட் தேர்வு முடிவுகள் வெளிவர இருப்பதால், விரைவில் நடவடிக்கை எடுத்து 2020-2021 ஆண்டுக்கான இடஒதுக்கீட்டையும் உறுதி செய்வது, இந்த ஆண்டு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனளிப்பதாக இருக்கும்” என்றார்.

“நேற்று டெல்லியில் மத்திய அமைச்சர் ஹர்சவர்தனின் விட்டுக்கு நானே நேரில் சென்று அவருடைய உதவியாளரிடம் இதுகுறித்த கடிதத்தை கொடுத்துவிட்டு வந்தேன். மருத்துவ கல்லூரிகளில் சரியான இடஒதுக்கீட்டை கேட்டு பெறுவது ஒரு போராட்டம். அடுத்தகட்ட நடவடிக்கையாக, இதற்கு முந்தின ஆண்டுகளில் இடஒதுக்கீடு வழங்கப்படாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, அந்த சமுதாய்த்துக்கு உரிய எண்ணிக்கையில் மருத்துவ பட்டப்படிப்புக்கான இடங்கள் வழங்க வேண்டும் என்பதே” என்று திமுக மாநிலங்களை உறுப்பினர் வில்சன் கூறினார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்