Aran Sei

நீட் தேர்வு: பேரவையில் அனல் பறந்த விவாதம் – வெளியேற்றப்பட்ட காங்கிரஸ்

credit:thehindubusnessline.com

மிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது.

சட்டப்பேரவை நடைபெற்ற கலைவாணர் அரங்கத்துக்கு வந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி தனது கையில் நீட் எதிர்ப்பு பாதாகை ஏந்தியிருந்தார்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முக்கியமாக நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசை கண்டிக்கும் கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக கொண்டு வந்தது.

தீர்மானத்தில் பேசிய எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், “மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு சட்டப்பேரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அண்ணாவின் இரு மொழிக்கொள்கைக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும்” கூறினார்

அதற்கு பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ”நீட் தேர்வு கொண்டு வந்தபோது காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்ததா? இல்லையா?” என்று கேள்வி எழுப்பினார்.

முதல்வர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ”கருணாநிதி ஆட்சியில் இருக்கும் வரையில் நீட் தேர்வு கொண்டு வரப்படவில்லை” என்றார்.

அப்போது குறிக்கிட்ட பேசிய அதிமுக உறுப்பினர் இனியன் ”நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரசு சார்பில் நளினி சிதம்பரம் உச்சநீதி மன்றத்தில் ஆஜரானார்” என்பதை சுட்டிக்காட்டினார்.

அவரின் பேச்சை அவை குறிப்பிலிருந்து நீக்கக்கோரி காங்கிரசு சட்டப்பேரவை உறுப்பினர்கள் குரல் எழுப்பினர். அதற்கு சபாநாயகர் மறுப்பு தெரிவிக்கவே காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து காங்கிரசு உறுப்பினர்களை பேரவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்திரவிட்டார்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரசு கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவர் ராமசாமி, நீட் தேர்வை எதிர்ப்பதில் காங்கிரசு கட்சி உறுதியுடன் இருப்பதாகத் தெரிவித்தார்.

சட்டப்பேரவை உறுப்பினாராக இல்லாத நளினி சிதம்பரத்தை சுட்டிக்காட்டி சட்டப்பேரவையில் பேச முடியாது என்று சபாநாயகரிடம் கூறியதாகவும் ஆனால், சபாநாயகர் எங்களை வெளியேற்ற உத்திரவிட்டதாகவும் ராமசாமி கூறினார்.

”நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி காங்கிரசு கட்சி உண்ணாவிரதம் போராட்டம் நடத்தவும் கூட தயாராக இருப்பதாகவும் அதற்கு முதல்வரும் அவருடைய கட்சியும் ஆதாரவளிக்குமா?” என்று ராமசாமி கேள்வி எழுப்பினார்.

இதை தொடர்ந்து சட்டமன்றத்தில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, ”நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்துகொண்ட 13 மாணவர்கள் உயிரிழப்புக்கு திமுக தான் காரணம்” என்று பகிரங்கமாக குற்றசாட்டை முன்வைத்தார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ”தமிழகத்தில் நீட் தேர்வை கொண்டு வராமல் தடுத்தது திமுக தான்” என்று கூறினார்.

இவ்வாறாக, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் காரசாரமாக விவாதம் நடைபெற்றது.

திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் பற்றியும் நீட் தேர்வினால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கு திமுகவே காரணம் என்ற முதல்வரின் குற்றச்சாட்டை குறித்து முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவுடன் பேசிய போது, “முழுக்க முழுக்க அதிமுக தங்கள் மீதுள்ள கலங்கத்தையும் தவறுகளையும் மறைப்பதற்கும் திசைத் திருப்ப பார்க்கின்றனர்” என்று கூறினார்.

ஐக்கிய முற்போக்கு ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது என்றாலும் அதை தமிழகத்துக்குள் வரவிடாமல் தடுத்து நிறுத்தியவர் கலைஞர் என்றும் திமுக ஆட்சி இருக்கும் வரையில் நீட் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு ஆட்சியின் போதே நீட் வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது என்று கூறும் தங்கம் தென்னரசு, பாஜக ஆட்சியில்தான் மீண்டும் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும் அப்போது தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக அரசாங்கம் நீட் தேர்வை தடுத்து நிறுத்தவோ அல்லது ரத்து செய்யவோ ஏன் முயற்சி செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பபட்ட நிலையில், பாஜகவுடன் கூட்டணியிலிருந்த அதிமுக அரசாங்கம்  அதற்கு ஒப்புதல்பெற ஏன் வலியுறுத்தவில்லை என்றும் இந்த தீர்மானம் குடியரசு தலைவரின் ஒப்புதல் கிடைக்காமல் திருப்பி அனுப்பபட்டதையே இவர்கள் மறுத்துவிட்டனர் என்று கூறினார்.

இன்னும் கூறிப்பாக கூறுவதென்றால், ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது எதிர்த்த தீர்மானங்களை எடப்பாடி ஆட்சிக்கு வந்த பிறகு நிறைவேற்றினார் என்றும் அவர் கூறினார்.

சட்டப்பேரவையில், அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5% இடஒதுக்கீடு  வழங்கப்படும் என்ற அறிவிப்பை பற்றி தங்கம் தென்னரசு கருத்து கூறும்போது, நீட் தேர்வு கிராமபுற மாணவர்களுக்கும் நகர்புற மாணவர்களுக்கு இடையில் சமநிலையில் உருவாக்கவில்லை என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாததை சாமாளிக்கவே இந்த ஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது என்றும் தமிழகத்தில் 41 விழுக்காடு மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கும் நிலையில், முதல்வர் எதன் அடிப்படையில் 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்ற முடிவை எடுத்தார் என்பதற்கு தகுந்த விளக்கம் இல்லை என்று அவர் கூறினார்.

இன்று நடைபெற்ற மற்றொரு விவாதமொன்றில், ”கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்புப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.

கொரோனா தடுப்பு, சிகிச்சை மற்றும் நிவாரணம் ஆகியவற்றுக்கு மொத்தம் 7,167.97 கோடி ரூபாய் செலவாகியுள்ளாதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதற்கு பதிலளித்தார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்