Aran Sei

E-அடிமைகள் : டிக்டாக் ரஜினிகள்! – அதிஷா எழுதும் தொடர் (பகுதி 3)

றுவகை அடிமைகளைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன்னால்… இந்த அடிமைகளின் பரிணாம வளர்ச்சி பற்றிப் பார்த்துவிடுவோம். அது இன்னும் ஆழமாக அடிமைகள் குறித்த புரிதலை உருவாக்கும். பிரபலமான அடிமை ஒருவருடைய உண்மைக் கதையிலிருந்து இதைப் புரிந்துகொள்ளலாம். அவருக்குக் கற்பனையாக முருகேசன் என்கிற பெயரை வைத்துக்கொள்வோம்.

அந்தக் கிராமத்தில் முருகேசன்தான் ஒரே ஒரு பிரபல டெய்லர். பார்க்க நடிகர் ரஜினிகாந்த் போலவே இருப்பார். கோயில் திருவிழாக்களில் ரஜினி போல வேஷம் கட்டி ‘பட்டது பட்டது என் மனம் பட்டதடி சுட்டது சுட்டது சட்டிகள் சுட்டதடி’ என தர்மதுரையாக ஒட்டுதாடியோடு சோகத்தில் ஆடுவார்… ‘கண்டாங்கி சேலையாக மாறவா உன் கண்ணாடி மேனி தொட்டு மூடவா’ எனத் தலையைச் சிலுப்பி வெட்கத்தில் சிவந்து அருகில் குஷ்பு இல்லாதபோதும் அண்ணாமலையாகவே மாறி நிற்பார். அவர் மேடையேறினால் ரஜினியே நேரில் வந்து ப்ளேக் மாரியம்மனுக்காக அருள் வந்து ஆடுவது போலிருக்கும்.

அப்படிப்பட்ட முருகேசன் ரஜினிகாந்தைப் போலவே தானுண்டு தன் வேலையுண்டு என வாழ்ந்து வந்தார். அவருடைய கையில் காலவோட்டத்தில் கொரிய தயாரிப்பு மலிவு விலை ஸ்மார்ட்போன் ஒன்று வந்தது. ஊரில் இருக்கிற இளவட்ட பையன்களின் உதவியோடு இந்த ஸ்மார்ட் போனில் ரஜினி பாடல்களைப் பதிவு செய்துகொண்டு அதை எந்நேரமும் தையல் எந்திரங்களோடு ஓடவிடுவார். பாக்கியலட்சுமி சவுண்ட் சர்வீஸ் அண்ணறின் குழாய் ஸ்பீக்கர்களை விஞ்சி சத்தம் எழுப்பி பக்கத்து ஊருக்கே பாடல்கள் கேட்கும். கதையில் இதுவரை ட்விஸ்ட்டே இல்லை.

அப்போதுதான் முதன்முதலாக ஜியோ ஊருக்குள் வந்தான். அனைவருக்கும் இணையத்தை அள்ளி அள்ளித் தந்தான். அதனாலேயே நல்ல ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கினார். இது சீனத் தயாரிப்பு. மெதுமெதுவாக முருகேசன் யூடியூப் பார்க்கத் தொடங்கினார். வாட்ஸ்அப் பயன்படுத்த ஆரம்பித்தார். அதில் வருகிற காமெடி வீடியோக்களை ரசிக்க ஆரம்பித்தார். காதலின் தீபம் ஒன்று வீடியோவைப் பார்த்து அதே போலத் தலையை ஆட்டி ஆட்டி ப்ராக்டிஸ் பண்ணவும் தொடங்கினார். அரசியல் வீடியோக்கள் பார்த்துப் பார்த்து வெறும் முருகேசன் முருகேச யாதவராக மாறினார். ஆபாச வீடியோக்கள் பார்க்க ஆரம்பித்தார். வாட்ஸ் அப்பில் நிறைய பார்வர்டு மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பித்தார். ஷேர் சாட்டில் பழைய பாடல் வீடியோக்களைத் தரவிறக்கி ஸ்டேடஸ் வைத்துக்கொண்டார்.

அப்படித்தான் அவருக்கு டிக்டாக் அறிமுகமானது. அதைப்பற்றி யாரிடம் கேட்பது என்ன ஏது எனத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வருகிறது. ‘’அதென்னடா டிக்கி டாக்கி ஊரல்லாம்’’ என்று அஸிஸ்டென்ட் பையனிடம் கேட்டதுதான் அவருடைய வாழ்க்கையின் மிகமுக்கியமான திருப்புமுனை வசனம். அதற்குப் பிறகு அவருடைய வாழ்வு முற்றிலுமாக மாறுவதற்கான தொடக்கம் அதுதான்.

போனில் டிக்டாக்கைப் போட்டுக் கொடுத்தார் அஸிஸ்டென்ட் பையன். அதில் வருகிற நடன வீடியோக்கள் அவருக்கு மிகவும் பிடித்துப்போனது. முதலில் கவர்ச்சி வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தார். அடுத்து காமெடி வீடியோக்கள்… அதற்குப் பிறகு சமையல் வீடியோ… பிறகு கருத்து கந்தசாமிகள்… பிறகு சாதிவெறி வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தார். அந்த வரிசையில் நடன வீடியோக்களைப் பார்க்க ஆரம்பித்தார். அதில் நிறைய லுக் அலைக் வீடியோக்கள் வரத்தொடங்கின… அதில் அவரைப்போலவே ஏராளமான டூப் ரஜினிகள் இருந்தார்கள். கமல்கள் இருந்தார்கள். சிவாஜிகள் இருந்தார்கள். விஜயகாந்த்கள் இருந்தார்கள். டிக்டாக் முருகேசனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

காலையில் எழுந்ததும் டிக்டாக்தான். பின்பு மதியம் வரைக்கும் டிக்டாக்தான். பிறகு இரவு வரைக்கும் டிக்டாக்தான். வேலையில்லாத போதெல்லாம் டிக்டாக் பார்க்க ஆரம்பித்தார்.

முதலில் அனைவருக்கும் லைக் போட ஆரம்பித்தார். இந்த நடனங்களைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. எப்படி கமென்ட்ஸ் போடுவது என்பதை அஸிஸ்டென்ட் பையனே கற்றுத்தந்தான். அண்ணா அருமையான நடனம்… இந்த ஸ்டெப் அருமை.. அந்த ஸ்டெப்பில் கவனம் வேண்டும்… இன்னும் கூட மெனக்கெடுங்க மேக் அப் சரியில்லை என்று கமென்ட் போடத் தொடங்கினார். அவருடைய கமென்ட்டுக்கு நிறைய லைக்ஸ் வரத்தொடங்கியது.

பொழுதன்னைக்கும் வித்தியாசமாக எப்படியெல்லாம் கமென்ட் போடுவது என்று சிந்திக்க ஆரம்பித்தார். நடனத்தையே விஞ்சும் கமென்டுகளைப் போட மெனக்கெட ஆரம்பித்தார். வீடியோவை விட அவருடைய கமென்டுக்கு அதிக லைக்குகள் வரவேண்டும் எனப் பாடுபட ஆரம்பித்தார்.

ஏண்ணே எவ்வளவு நாளைக்குதான் நீங்க கமென்டே போடுவீங்க வீடியோவை இறக்குங்க என்று தம்பிகள் சொல்வார்கள், அவருக்கே அந்த எண்ணம் இருந்தாலும், ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது. தயக்கத்தை கமென்ட் ஒன்று உடைத்தது.

அவருடைய விமர்சன கமென்ட் ஒன்றுக்கு உனக்கு நடனத்தைப் பத்தி என்ன தெரியும் என ஏதோ ஒரு பேப்பர் ஐடி சலங்கை ஒலி கமலிடம் கேட்டது போல எதிர்வினை ஆற்ற…

இந்த நாள்… உன் காலண்டர்ல குறிச்சுவச்சுக்கோ… நானும் பல நடன வீடியோக்களைப் போட்டுப் பல லட்சம் லைக்ஸ்களை வாங்கி… எனத் துடித்தெழுந்தார் முருகேசன். அஸிஸ்டென்ட் பையன் உதவியோடு முதல் வீடியோவை ஷூட் பண்ணி அப்லோடு பண்ணினார்.

வீடியோவைப் போட்டுவிட்டுக் காத்திருந்தார். காத்திருந்தார். காத்திருந்தார். யாருமே வரவில்லை. வ்யூஸ் இல்லை… லைக்ஸ் இல்லை. கமென்ட்டுக்கு அவ்ளோ லைக்ஸ் வந்தது… அட வ்யூஸ் கூட இல்லையே… என்னவா இருக்கும் என்று சிந்திக்க ஆரம்பித்தார். அடுத்த வீடியோவில் இன்னும் பிரமாதமாக மேக் அப் போட்டு நடித்தார். லைக்ஸ் வரவில்லை. தம்பிகள் எல்லாம் நம்பிக்கை ஊட்டினார்கள். தன் முயற்சியில் சற்றும் தளராது தொடர்ந்து வீடியோக்களைப் போட ஆரம்பித்தார். ஓரளவுதான் லைக்ஸ் வந்தது. ஆனால் எதிர்பார்த்த வ்யூஸ் இல்லை.

ஒருநாள் இரவெல்லாம் தூக்கமில்லாமல் தவித்தார். நான் எவ்வளவு பெரிய திறமைசாலி எனக்கு ஏன் லைக்ஸ் வரமாட்டீங்குது என்று ஏங்கி ஏங்கி மனம் நொந்து போனார். கோபத்தில் ‘’டிக்டாக் நண்பர்களே இனிமேல் டிக்டாக் வரமாட்டேன் இதுதான் என் கடைசி வீடியோ.. உண்மையான திறமைக்கு இங்கே மதிப்பில்லை. அரைகுறை ஆட்டத்திற்குத்தான் டிக்டாக் காரன் அதிக வியூஸ் கொடுக்கிறான் என்னைப்போன்ற கலைஞர்களுக்கு மரியாதை இல்லை, இனிமேல் உங்கள் ரஜினி முருகேசன் கோடி ரூவ்வா கொடுத்தாலும் வீடியோ போடமாட்டான்’’ எனக் கண்ணீர் மல்க ஒரு வீடியோ போட்டார்.

அதிர்ச்சி அளிக்கும் வகையில் அந்த வீடியோ பல மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுப் பல லட்சம் லைக்ஸ் வாங்கியது. அதில் ஒருவர் டிக்டாக்கின் ‘’ரஜினியே நீங்கதான் சார் தயவு செஞ்சு போயிடாதீங்க’’ எனச் சொல்லிவிட… டெயிலர் முருகேசன்… சூப்பர் ஸ்டார் முருகேசனாகப் பதவியேற்க வேண்டியது ஆண்டவன் கட்டளையாக மாறியது.

மீண்டும் வீடியோக்கள் போட ஆரம்பித்தார். ரஜினி அணியும் சட்டைகளைத் தைத்துப் போட்டுக்கொண்டு விதவிதமான வீடியோக்களை இறக்க ஆரம்பித்தார். லொக்கேஷன்களைத் தேடிப்பிடித்து நடனமாடினார். ஒவ்வொரு வீடியோவுக்கும் எவ்வளவு வ்யூஸ் வருகிறது எவ்வளவு கமென்ட்ஸ் வருகிறது என்பதையே பொழுதன்னைக்கும் பார்க்க ஆரம்பித்தார். அது குறைந்தால் அடுத்த வீடியோவுக்கு இன்னும் மெனக்கெடுவார்.

அவரைப் போலவே டூப்பு ரஜினிகள் ஒரு நூத்தம்பது பேர் டிக்டாக்கில் இருந்தனர். அவர்கள் எல்லாம் என்ன செய்கிறார்கள் என்பதை நோட்டம் விடுவார். அவர்களுக்கு முருகேசனை விட அதிக லைக்ஸ் வந்தால் தூக்கமே வராது. அவர்களை எப்பாடு பட்டாவது விஞ்சிவிட வேண்டும் என்று ராத்திரி பகலாகத் திட்டம் போடுவார். வாடகைக்கு ஆள் பிடித்து ஜோடி நடன வீடியோக்கள் போடுவார். ரஜினிகாந்த் திரைப்படத்தில் எந்த லொக்கேஷனில் எப்படி ஆடினாரோ அதே இடத்திற்கே போய் படப்பிடிப்பு நடத்துவார்! இப்போது போட்டி சக ரஜினிகளோடு மட்டும்தான். மற்றவர்களைப் பற்றி அலட்டிக்கொள்வதில்லை. இருப்பதிலேயே பெஸ்ட் ரஜினி எனப் பேர் வாங்கவேண்டும் அவ்வளவுதான்!

இவ்வளவு கஷ்டப்படறோம் ஆனா யாரோ ரவுடிபேபி ஜிபிமுத்துனு திறமையே இல்லாதவங்களுக்கு அதிக வ்யூஸ் லைக்ஸ் கிடைக்குது என சலித்துக்கொள்ளும் சமூக அக்கறை கொண்ட வீடியோவும் அவ்வப்போது போடுவார். யாதவனோடு மோதாதே ஆண்டபரம்பரைடா என்று வீரம் செறிந்த வீடியோக்களும் வரும். ஆனால் அதற்கெல்லாம் லைக்ஸ் குறைவுதான். எனவே எப்போதும் ரஜினி வீடியோதான் பிரதானமாக இருக்கும்.

இப்படி பல போராட்டங்களை, துக்கங்களை, துயரங்களை கடந்து அவருக்கும் பல மில்லியன் ஃபாலோயர்கள் வந்துவிட்டார்கள். ஆனாலும் அவருக்கு அது போதாமல் இருந்தது. பத்தாயிரம் வ்யூஸ் வந்தபோதும்… மில்லியன் வ்யூஸ் வராதா என ஏக்கம்… மில்லியன் வந்தால்.. பத்து மில்லியன் வராதா என ஏங்க ஆரம்பித்தார். அவருடைய நோடிஃபிகேசன் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும். கமென்ட் பாக்ஸில் பாராட்டுமழை குவிந்திருக்க வேண்டும்.

எதாவது வந்திருக்கிறதா என்பதை தைக்க தைக்கப் பார்ப்பார். ஒரு வீடியோ போட்டு விட்டால் அன்றைக்குப் பொழுதெல்லாம் என்ன கமென்ட் எவ்வளவு வியூஸ் என்பதை கணக்கிடுவதிலேயே போய்விடும். வேலை நாசம். வேலையில்லாதபோது டிக்டாக் என்பது மாறி டிக்டாக் பண்ணுவதற்காக வேலையைக் குறைத்துக்கொண்டார். அவ்வப்போது டிக்டாக் பிரபலம் என்பதால் பள்ளிகளில் அழைத்துக் கொடியேற்றச் சொல்வார்கள். எதாவது டிவி நிகழ்ச்சிகளில் ஜோக்கர்களைப்போல பயன்படுத்துவார்கள். ஒரு திரைப்படத்தில் கூட துக்கடாவாக நடித்தும் முடித்து விட்டார் முருகேசன். ஆனால் வாழ்க்கையில் பெரிய வளர்ச்சி இல்லை. ‘’சார் இந்த பிஜிலி ரமேஷ் அளவுக்கு வந்துட்டா கூட போதும்’’ என்பார்.

சமீபத்தில் டிக்டாக் தடை செய்யப்பட்ட பிறகு மனிதர் துடியாய்த் துடித்துப்போனார். தான் கட்டி எழுப்பிய கண்ணாடி மாளிகை மோடியால் சுக்கல் சுக்கலாக உடைக்கப்பட்டது என விசும்பினார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமெல்லாம் வந்ததாகச் சொன்னார். இப்போது மோஜ் பூஜ் என இந்திய தயாரிப்பு டூப்ளிகேட் டிக்டாக்கில் பிஸியாக இருக்கிறார். இன்ஸ்டாவில் வீடியோ போடுகிறார். மனிதர் அங்கேதான் கால்மேல கால்போட்டு கபாலிடா எனச் சுற்றிக்கொண்டிருக்கிறார்.

அவ்வளவுதான் முருகேசனின் கதை. இந்தக்கதைக்குள் ஒரு Pattern இருப்பதைக் கவனித்திருக்கலாம். உங்களை அதற்குள் பொருத்திப்பாருங்கள்… அவருடைய வாழ்க்கைப் பயணத்தில் பல ஸ்டாப்கள் உண்டு… அதில் எந்த ஸ்டாப்பில் நீங்கள் நிற்கிறீர்கள் என்பது தெரிகிறதா… தெரிந்தால் இந்தப் பரிணாம வளர்ச்சியை எளிதில் புரிந்துகொள்ளலாம்.

எப்படி என்பது அடுத்த பகுதியில்…

• விலங்குகள் உடைப்போம்

பகுதி 1 லைக் பண்ணுங்க , ஷேர் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க
பகுதி 2 முதல் அடிமையின் கதை

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்