Aran Sei

லைக் பண்ணுங்க , ஷேர் பண்ணுங்க, கமென்ட் பண்ணுங்க – அதிஷா எழுதும் தொடர்

 

 

“ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்” – அண்ணல் அம்பேத்கர்

நிர் எயல் என்கிற அமெரிக்க எழுத்தாளர் 2014-ம் ஆண்டு ஒரு புத்தகத்தை எழுதுகிறார். HOOKED என்கிற இந்த நூல் ஒரு ப்ளாக்பஸ்டர் ஹிட். கேமிங் துறையிலும் வாடிக்கையாளர் உளவியலிலும் பெரிய கில்லாடி இந்த நிர். அவருடைய இந்த நூல் வாடிக்கையாளர்களை எந்நேரமும் நமது இணையதளங்களிலேயே தக்கவைக்கும் வித்தைகளை கற்றுத்தருவதாக இருந்தது. என்னென்ன மாதிரி பொறிகளை வைத்தால் வாடிக்கையாளர்கள் வசமாக நம் இணையதளங்களில் வந்து மாட்டிக்கொண்டு முழுநேரமும் அங்கேயே பாயை போட்டு படுத்துவிடுவார்கள், எது அவர்களை நம் இணையதளங்களை நோக்கி திரும்பத் திரும்ப அழைத்து வரும் என்பதை பற்றியெல்லாம் தொழில்நுட்ப ரீதியிலும் உளவியல் அடிப்படையிலும் வரலாற்று சான்றுகளோடும் மிகவும் நேர்த்தியாக எழுதப்பட்ட நூல் இது. கூகுள் தொடங்கி பேஸ்புக் வரை அத்தனை பெரிய நிறுவனங்களில் பணியாற்றுகிறவர்களுக்கும் இது ஒரு நல்ல வழிகாட்டியாக விளங்கியது.

அதே நிர் எயல் நான்காண்டுகளுக்கு பிறகு 2018-ல் இன்னொரு நூலை எழுதினார். Indistractable என்கிற இந்த நூல் முந்தைய நூலுக்கு நேரெதிரான ஒன்று. சமூகவலைதளங்களும் இணையதளங்களும் நம்மை எப்படியெல்லாம் கவனச்சிதறலை ஏற்படுத்தி அடிமைப்படுத்துகின்றன. அதிலிருந்து மீள்வது எப்படி என்பதை இந்த நூல் விளக்கியது. அடிமைப்படுத்துவது எப்படி என்கிற நூலை எழுதிய அதே நிர் எயல் இணையதளங்களுக்கும் சமூகவலைதளங்களுக்கும் அடிமையாகிவிடாமல் இருப்பது எப்படி என்கிற நூலை எழுதினார்.

இவரே பாம்வைப்பாரம்… அப்புறம் அவரே பாமை எடுப்பாராம் என்பதுபோல் இருக்கிறது இல்லையா… அதற்கு ஒரு கதை இருக்கிறது.

நிர் எயல் வீட்டிலிருந்து வேலை பார்க்கிற எழுத்தாளர். அவர் வீட்டில் அவருடைய செல்லமகளும் இருக்கிறாள். அடிக்கடி அப்பாவிடம் வந்து எதாவது சந்தேகம் கேட்டுக்கொண்டேயிருப்பது அவளுடைய வாடிக்கை. குழந்தைகளுக்கே உரிய குணமில்லையா…

நிர் எயல் ஒருநாள் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தை மொபைல் போனில் நோண்டிக்கொண்டிருந்தார். அப்போது குழந்தை வந்து ஏதோ சந்தேகம் கேட்க… பதில் சொல்லாமல் போனையே நோண்டி கொண்டிருந்திருக்கிறார். மீண்டும் மீண்டும் கேட்க எதையோ வாய்க்கு வந்ததை உளறி இருக்கிறார். அது தவறான வழிகாட்டுதல் என்பதை பாப்பா போனபின்புதான் உணர்ந்திருக்கிறார்.

நல்லவேளையாக அது சாதாரண கேள்வியாக இருந்துவிட்டது. ஒருவேளை எதாவது ஆபத்தான கேள்வியாக இருந்திருந்தால்… என்று நிர் எயலுக்கு உரைத்திருக்கிறது. நாமவைச்ச எலிப்பொறியில் இருந்த வடைக்கு நாமே அடிமையாகிவிட்டோம் என்று புரிந்திருகிறது. இதன் ஆபத்தை உணர்ந்திருக்கிறார். அப்போது தொடங்கிய தேடல்தான் இந்த Indistractable என்கிற நூலாக மாறியது என்கிறார் நிர் எயல்.

அந்த நூலில் அவர் சுட்டிக்காட்டுகிற ஒட்டுமொத்த செய்தியும் ஒன்றுதான்.

‘’இன்றைய காலக்கட்டத்தில் கவனச்சிதறல் இல்லாமல் , சமூகவலைதளங்களுக்கு அடிமையாகாமல் இருப்பதுதான் ஒரு மனிதன் பெறக்கூடிய ஆகப்பெரிய சூப்பர் பவர்’’

உங்களிடம் இருக்கிறதா அந்த சூப்பர் பவர். ஒரு சோதனை செய்து பார்க்கலாம். ஒரு நாள் முழுக்க உங்கள் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு உங்களால் இருக்கமுடியுமா… முடியும் என்றால் உங்களுக்கு 75 மதிப்பெண்கள். ஒரு நாள் முழுக்க இணையத்தொடர்பு இல்லாமல் உங்களால் இருக்க முடியுமா… 50 மதிப்பெண்கள். ஒருநாள் முழுக்க வாட்ஸ்அப், பேஸ்புக், ட்விட்டர், யூடியூப் பார்க்காமல் இருக்கமுடியுமா… பிடியுங்கள் 35 மார்க்ஸ்!

யோசித்துப்பார்த்தால் இதையெல்லாம் செய்யாமல் இருப்பது எளிதானது என்பதைப்போல்தான் இருக்கும். ஆனால் உண்மையில் சோதனைக்காக ஒருநாள் செய்துபார்க்கலாம். இரண்டாவது நாளும் என்றால் தயங்குவோம். மூன்றாவது அடப்போய்யா வேலையபாத்துட்டு முடியவே முடியாது என்று கோபமாகிவிடுவோம். மண்டைக்குள் மணி அடிக்கத்தொடங்கும். அந்த மணி டோபோமைன்க்கு பெயர் டோபமைன். (அதைப்பற்றி பிறகு)

ஆமாம் நண்பர்களே… அரைமணிநேரம் செல்போனை எடுத்து பார்க்காமல், வாட்ஸ் அப் நோண்டாமல், நோடிபிகேஷன்களுக்கு துள்ளாமல் இருப்பதற்குத்தான் இன்று நாம் அதிகமும் மெனக்கெட வேண்டியிருக்கிறது

பத்தாண்டுகளுக்கு முன்பு யாருமே நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள் நம் சமூக வலைதள ஸ்டேடஸ் எல்லாம் அரசால் கண்காணிக்கப்பட்டு அதற்காக சிறைக்கு செல்ல வேண்டிய அளவுக்கு தண்டனை கிடைக்கும் என்று… வாட்ஸ் அப் ஸ்டேடஸ்களில் சண்டை போட்டு கணவனும் மனைவியும் விவாகரத்து வரை செல்வார்கள் என்று… சமூகவலைதளங்களில் இயங்குபவர்களின் அந்தரங்க விஷயங்கள் செய்திகளாக மாறும் என்று… அரசியல்வாதிகள் கோடி கோடியாக சமூகவலைதள போஸ்ட்களுக்கு செலவழிப்பார்கள் என்று… வாழ்நாளில் முக்கால்வாசியை செல்போன் அல்லது கணினி திரைகளுக்குள் கழிப்போம் என்று… சமூகவலைதளங்கள் என்பது தனிமனித சண்டைகளுக்கான மைதானங்களாக மாறும் என்பது…

இருபதாண்டுகளுக்கு முன்பு நம் வாழ்வையே இணையம் புரட்டிப்போட்டது. 2010-களில் சமூகவலைதளங்களின் வருகையும் அதன் தாக்கமும் முற்றிலுமாக கலாச்சாரம் பண்பாடு குடும்பச்சூழல் வாழ்க்கை முறை அரசியல் சிந்திக்கும் ஆற்றல் என சகலத்தையும் மாற்றிவிட்டது. இன்று நாம் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் தொடங்கி யாருடன் நட்பாக இருக்கவேண்டும் என்பது வரை சமூகவலைதளங்கள் தீர்மானிக்கின்றன.

எல்லோருமே எதாவது ஒன்றாக இருக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறோம். புகைப்படக்காரராக, நடனக்கலைஞராக, கருத்து கந்தசாமியாக, எழுத்தாளராக, பாடகராக என்று எதாவது ஒன்றை செய்துகொண்டேயிருக்கிறோம். நாம் அதுவாக இல்லாத போதும் அப்படி ஒருவராக நம்மை காட்டிக்கொண்டு பாவனை செய்யத் தொடங்கி விடுகிறோம்!

உலகத்துக்கு நாம் யார் என்பதை காட்டிக்கொண்டேயிருக்க நிர்பந்திக்கப்படுகிறோம். உலகத்தில் யாருமே சும்மா இல்லை. யாரையும் சும்மா இருக்க விடுவதும் இல்லை!

மனிதர்களுக்கு இன்றியமையாத மூன்று விஷயங்களான உணவு உடை இருப்பிடத்தை விட இன்றைய தேதியில் உலகையே ஆட்டிப்படைக்கிற மூன்று விஷயங்கள் எது தெரியுமா… ஒன்று லைக்…இன்னொன்று ஷேர்… மூன்றாவது கமென்ட்ஸ். டிக்ட்டாகில் லைக்கு போடுங்க பிரண்ட்ஸ் என்று மக்கள் கெஞ்சுகிறார்கள். லைக் கிடைக்கும் என பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள். அதிக ஷேர்களுக்காக யூடியூபில் எப்படியெல்லாம் வீடியோக்கள் வெளியாகின்றன. வாட்ஸ் அப் என்பது வதந்தி பரப்புபவர்களின் கூடாரமாக மாறிவிட்டது!

அதிஷா
அதிஷா

இப்படி நாம் என்னென்னவோ சர்க்கஸ் வினோதங்களை செய்துகொண்டிருப்பது ஒருபுறம் என்றால்… இப்படியெல்லாம் செய்ய நாம் நிர்பந்திக்கப்படுகிறோம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஃபேஸ்புக் நோட்டிபிகேஷன்களின் நிறம் சிகப்பாக இருப்பதில் தொடங்கி… டைம்லைனில் நாம் என்ன பார்க்கவேண்டும், எதற்கெல்லாம் லைக் பண்ண வேண்டும், என்ன பொருள் வாங்க வேண்டும் என்பது வரை யாரோ எங்கோ தீர்மானிக்கிறார்கள்… அல்லது எதோ ஒரு அல்காரிதம் முடிவு செய்கிறது. இதை எப்படி செய்கிறார்கள் ஏன் செய்கிறார்கள்… என்பதை இனிவரும் வாரங்களில் பேசலாம்.

இப்போதைக்கு எஞ்சி இருக்கிற கேள்வி ஒன்று உள்ளது.

சமூகவலைதளங்களுக்கு நாம்தான் வலியச்சென்று அடிமையாக இருக்கிறோமா… அல்லது எப்படிப்பட்டவரையும் அடிமையாக மாற்றும் படி சமூகவலைதளங்கள் வடிவமைக்கப்படுகின்றனவா…
விடை தேடுவோம்.

-விலங்குகள் உடைப்போம்

– அதிஷா
(பத்திரிகையாளர் & எழுத்தாளர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்