Aran Sei

சூடு… சொரணை… சுயமரியாதை… – பாமரன் எழுதும் தொடர்

மொதல்ல…

அடுத்தவங்க குப்பையைக் கிளறுவதற்கு முன்னாடி நம்ம வண்டவாளத்தைத் தண்டவாளத்துல ஏத்துனாத்தான் மனசு கொஞ்சம் ஆறுதலாகும்…

அதனால….

நான் எப்படி எழுத வந்தேன்…..

என்னென்ன கருமத்தையெல்லாம் எழுதுனேன்….

அதப் பாத்து யார் யாரெல்லாம் எதுல சிரிச்சாங்கங்குறதுல இருந்து ஆரம்பிச்சாத்தான் அதுல ஒரு நியாயம் இருக்கும்.

So…..

அது அநேகமாக எழுபதுகளின் பிற்பகுதி…

பெண்களைப் பார்த்தவுடனேயே கவிதைகள் பீறிட்டுக் கொண்டு வந்த பொன்மாலைப் பொழுதுகள். அவைகளை எவளும் சீந்தாததால் துணுக்குகளில் திடுக்கிட வைப்போம் என பாயத் துவங்கினேன். துணுக்குகளுக்கென்றே பூவாளி…. முத்தாரம்… கல்கண்டு என்று எண்ணற்ற பத்திரிக்கைகள் வந்து கொண்டிருந்தன அப்போது.

“அண்டார்ட்டிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கெல்லாம் ஆறு விரல்தான் என்கிற உண்மை உங்களுக்குத் தெரியுமா?” என்று எழுதி அனுப்பினால் அதற்கு மூணு ருபாய் மணியார்டர் அனுப்புவார்கள். பின்னே இதை கிராஸ் செக் செய்ய அண்டார்ட்டிக்காவுக்குப் போயா பார்த்துவிட்டு வருவார்கள்?.

அது உண்மையா என்று எழுதுகிற எனக்கும் தெரியாது… படிக்கிற அவனுக்கும் தெரியாது…. எப்படியோ பக்கம் நிரம்பினால் சரி என்று அவர்களும்… எப்படியோ அச்சில் நமது பெயரைப் பார்த்தால் சரி….என்று நானும் நடையைக் கட்டுவோம்.

அதிலும் நான் பத்திரிக்கைகளின் கதவுகளைத் தட்டிக் கொண்டிருந்த நேரமோ

புஷ்பா தங்கதுரை…/ பாலகுமாரன் / சாண்டில்யன் / சுஜாதா / சுப்ரமண்யராஜு / மணியன் / சோ / சாவி / சிந்துஜா / மாலன் / சுதாங்கன் / இந்துமதி சிவசங்கரி / வாஸந்தி / லஷ்மி / அனுராதா ரமணன் / விமலா ரமணி /உஷா சுப்ரமணியம் போன்றவர்கள்தான் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம்.

இதில்…

க.நா.சு. / லாசரா / வெங்கட் சாமிநாதன் / ஞானக்கூத்தன் / இந்திரா பார்த்தசாரதி / மெளனி / நகுலன் / சு.ரா / தி,ஜா… போன்றோர் எல்லாம் வேற வகையறா…

ராஜேஷ்குமார் போன்ற விதிவிலக்குகளும் இருந்தார்கள்.

ஆனாலும் திரும்பிய எல்லா திசைகளிலும் எழுதிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்தான்.
நம்முளுக்கோ ஒரு எழவும் புரியாது….

துணுக்குகளைத் தாண்டி எப்படியோ வாசகர் கடிதத்தில் எப்படியாவது நம் பெயரைப் பார்த்துவிட்டால் போதும் என்று கண்டதையெல்லாம் சிலாகித்து போஸ்ட் கார்டுகளாய் போட்டுத் தள்ளுவேன்.
அதுவும் குமுதத்தில் வாசகர் கடிதம் வந்துவிட்டால் போதும் இந்தப் பிறவி எடுத்ததன் பலனை அடைந்துவிட்டதாக அர்த்தம். அது அவ்வளவு லேசில் நடக்காது என்று நண்பர்களிடம் விசாரித்த போதுதான் தெரிந்தது.

“மாப்ளே… குமுதம் ஆபீசுக்கு மூட்டை மூட்டையா வாசகர் கடிதம் வரும். அதுல ஒவ்வொரு மூட்டைலயும் கைய உட்டு கொத்தா கொஞ்சம் எடுப்பானுங்க… அதுல உன் கடிதம் சிக்குச்சுன்னா நீ குடுத்து வெச்சவன்…” என்றான் ஒரு நண்பன்.

இதற்காகவே குமுதம் கடைக்கு வந்திறங்கியதுமே ஒரு புரட்டு புரட்டிவிட்டு ஏகப்பட்ட போஸ்ட் கார்டுகளை வாங்கி அதில் ”நடிகை சுமலதாவின் படத்தை முழுசாகப் போட்டால் என்ன குறைந்தா போய்விடுவீர்…? உமது தலையில் இடிவிழ….”என்கிற ரகத்தில் படு கேவலமான கடும் கண்றாவிகளை எழுதி அனுப்புவேன். எல்லாம் பத்திரிக்கையில் நம்ம பேர் பார்க்கும் வெறிதான் வேறென்ன?

ஒருநாள்…

அந்த ஒரு நாள்….

குமுதம் வாசகர் கடிதத்தில் என் பெயரும் வர….

ஊர் முழுக்க டமாரம் அடித்து செய்த அலப்பரைக்கு அளவே இல்லை… கெடா வெட்டி கறிவிருந்து போடாதது ஒன்னுதான் கொறைச்சல். எப்படியோ பிறவிப் பயனை அடைந்தேன் நான்.

அடுத்த பயணம் வாசகர் கடிதத்தில் இருந்து சின்னச் சின்ன கட்டுரைகளுக்கு. இத்தனைக்கும் கொஞ்சம் படிக்கத் துவங்கியிருந்தேன். ஆனால் ஒன்று கூட அச்சானதில்லை. அச்சில் வரக்கூடிய அளவுக்கு அவ்வளவு தகுதியான கட்டுரைகள் அல்லவென்றாலும் அந்த வார இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளும் அவ்வளவு தரமான கட்டுரைகள் கிடையாது என்பதும் கொஞ்சம் புரிந்தது.

எப்படியாவது ஏதாவது பத்திரிக்கையில் ரிப்போர்ட்டர் ஆகிவிட வேண்டும் என்கிற கொலைவெறி என்னுள் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்திருந்தது.

புடிச்சாப் போடு… இல்லாட்டி கிழிச்சு வீசு என்கிற கடுப்பில் சுயவிலாசமிட்ட உறையில் அஞ்சல் தலைகளை எல்லாம் ஒட்டி அனுப்ப மாட்டேன் நான். அதனால் எதுவுமே எனக்கு திரும்ப வந்ததில்லை.
கட்டுரைகளோடு இந்தப் பக்கம் போனா அவன் கட்டையப் போடுவான்….

அந்தப் பக்கம் போனா இவன் கட்டையப் போடுவான்….

சுற்றிச் சுற்றி அவர்களே எழுதிக் கொள்வார்கள்.

”அப்ப நீ சாகற வரைக்கும் துணுக்கும்… வாசகர் கடிதமும்… மட்டுமே எழுதீட்டு இருக்க வேண்டீதுதான் மகனே…”ன்னு எனக்குள்ள ஒரு அசரீரி கேட்டபோதுதான் ஈழப் போராட்டம் கடலைத் தாண்டி தமிழகத்தின் கரையைத் தொட்டது.

சிங்கள இனவெறி தலைவிரித்தாடியதன் விளைவாய் லட்சக்கணக்கான ஈழத்து மக்கள் உயிர்தப்பி தமிழகத்தில் கால் பதித்தனர். அவர்களோடு எண்ணற்ற போராளிகளும் வந்திறங்கினர். அந்த ஈழப் போராளிகளோடு எனக்கு ஏற்பட்ட உறவு என்னுள் எண்ணற்ற கதவுகளைத் திறந்து விட்டது. அரசியல்… சினிமா… இலக்கியம்… என புதிய பார்வைகளை காட்டியது அவர்களது தோழமை. அதைச் சாத்தியப்படுத்தியது என் வாழ்க்கையின் வரலாற்றுத் திருப்பமாய் அமைந்த நெடுஞ்செழியனது உறவு.

சென்னை வங்கியில் பணிபுரிந்து கொண்டே சூழலியல்… மனித உரிமை… ஈழம்… சமூகநீதி என பம்பரமாய்ச் சுழன்ற மகத்தான மனிதர் அவர்.

இத்தகைய உறவுகள்தான் தமிழகத்தின் வெகுஜன பத்திரிக்கைகளின் மீதிருந்த மோகத்தில் இருந்து என்னை மீட்டவை.

“அவன் ஏன் உன் கட்டுரையப் போடலேன்னு யோசிக்காதடா…. உன் கட்டுரையப் போடற அளவுக்கு அவன் வொர்த் ஆன ஆளான்னு பாரு….”என்று என்னைச் சிந்திக்க வைத்தவர் நெடுஞ்செழியன் தான். அதன் விளைவுதான் அச்சில் என் பெயரைப் பார்க்க வேண்டும் என்று வெறி கொண்டு அலைந்த என்னை வெகுஜன ஊடகத்தில் இருந்து விலகி நிற்க வைத்தது.

படிப்பது….

அதையொட்டி செயல்படுவது…

தேவைப்படின் அதை நூலாக்குவது….

இப்படி வெளிவந்தவைதான் எனது முதல் நூலான “அன்புத் தோழிக்கு” அடுத்து வந்த “புத்தர் சிரித்தார்” பிற்பாடு வந்த ”வாலி+வைரமுத்து=ஆபாசம்.”

இம்மூன்றுமே எந்த வார இதழ்களின் பக்கமும் தலைவைத்துக்கூட படுக்காமல் நண்பர்களோடு இணைந்து சொந்த செலவில் வெளியிட்டவைகள்.

இந்த வேளையில்தான் இத்தகைய வெகுஜன அச்சு ஊடகங்களுக்கு நடுவே மனஓசை… கேடயம்… புதிய கலாச்சாரம்… முன்னோடி… நிகழ்… போன்ற மாற்று அரசியலைப் பேசிய இதழ்களும் வெளிவரத் தொடங்கியிருந்தன.

பாமரன்
பாமரன்

எனது முதல் இரண்டு நூல்களைப் பற்றி மூச்சுகூட விடாத வெகுஜன ஊடகம் எனது மூன்றாவது புத்தகமான ”வாலி+வைரமுத்து=ஆபாசம்.” குறித்து பெரும் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன. “தமிழன் எக்ஸ்பிரஸ்” வார இதழ் “பாமரன் சொல்வது சரிதானா?” என்று வாசகர் பரிசுப் போட்டியே நடத்தியது. குமுதம் ஸ்பெஷல் “அவதார புருசர் வாலி பகவானுக்கு” கட்டுரையை அப்படியே எடுத்துப் போட்டது… தினமணி மூன்று முறை இந்நூல் குறித்து எழுதியது…. (மறைந்த இராம சம்பந்தம் அப்போது அதன் ஆசிரியர்)… சுஜாதா கல்கியில் எழுதினார்….

அப்போதுதான் குமுதத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது.

அதன் ஆசிரியராய் இருந்த மாலன் ”எனக்கு உங்கள் நூல்களில் மிகவும் பிடித்தது ”புத்தர் சிரித்தார்”…. ஏதோ ஒன்றில்கூட என்னைப்பற்றி கிண்டல் அடித்திருந்தீர்கள்… உங்களால் குமுதம் இதழில் ஒரு தொடர் எழுத இயலுமா? யோசித்துச் சொல்லுங்கள்” என்று எனது ஒப்புதலைக் கேட்டு எழுதியிருந்தார்.

சிப்பாயாக இருந்த மாலன் மேஜராக பதவி உயர்வு பெறாத காலம் அது.

(அபத்தங்கள் தொடரும்…)

– பாமரன்
(எழுத்தாளர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்