Aran Sei

” வழக்கை வாபஸ் பெற மாட்டோம் ” – சாதி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகில் உள்ள உலகம் கிராமத்தில், ஆதிக்க சாதியினருக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறாததால், 29 பட்டியல் சாதி குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக ’தி ஃபெடரல்’  தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் கிராமம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த 22 வயது சூர்ய குமார் என்ற இளைஞன், மணியன்கல் கிராமம் குறும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த 17 வயது மைனர் பெண்ணோடு ஊரை விட்டு வெளியேறி விட்டார்.

இதைத் தொடர்ந்து அப்பெண்ணின் குடும்பத்தார் சூர்ய குமாரின் மேல், ஆள் கடத்தல் மற்றும் போக்சோ பிரிவில் வழக்கு தொடர்ந்தனர். உலகம் கிராமத்தில் உள்ள ஆதிக்க சாதியினர் சிலர், சூர்ய குமாரின் குடும்பத்தார் வசிக்கும் பட்டியல் சாதியினர் வசிக்கும் காலனிக்குச் சென்று, அங்குள்ள மக்களை அடித்து வன்முறையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

”எங்களுக்குச் சூர்ய குமார் அந்தப் பெண்ணோடு ஓடிப்போனது தெரியாது. இவர்கள் திடீரென்று ஊருக்குள் வந்தார்கள். வீடுகளுக்குள் நுழைந்து, எல்லாப் பொருட்களையும் போட்டு உடைத்தார்கள். எங்களையும் அடித்தார்கள்.” என்று தி ஃபெடரல் தளத்திற்குத் பட்டியல் சாதியினர் காலனியைச் சேர்ந்த பெண் கூறியுள்ளார்.

பட்டியல் சாதியினர் காலனி மக்கள் கொடுத்த புகாரைத் தொடர்ந்து, ஆதிக்க சாதியினர் 30 பேர்மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.

ஆறு மாதத்தில் குறும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த அந்தப் பெண் மேஜர் ஆனதை தொடர்ந்து, இரண்டு குடும்பங்களும் இவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தன. பின் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டனர்.

சூர்ய குமார் மேல் பதிவு செய்யப்பட்ட வழக்கைப் பெண்ணின் குடும்பத்தார் வாபஸ் பெற்றனர். ஆனால் பட்டியல் சாதியினர் காலனி மக்கள், வன்முறையில் ஈடுபட்ட ஆதிக்க சாதியினர் மேல் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறவில்லை. இந்த வழக்கு அக்டோபர் 1-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

இதைத் தொடர்ந்து உலகம் கிராமப் பஞ்சாயத்தில், 29 பட்டியல் சாதி குடும்பங்களையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தி ஃபெடரல் தளத்திற்கு உலகம் கிராமத்தைச் சேர்ந்த சேது என்பவர் பேசியபோது, ”பலமுறை அவர்கள் வழக்கை வாபஸ் பெறச் சொன்னார்கள். ஆனால் நாங்கள் வாபஸ் பெற மாட்டோம். காரணம் வன்முறையில் ஈடுபட்ட அந்த ஆதிக்க சாதியினர் பெண்ணின் குடும்பத்தாரோ இல்லை பெண்ணின் ஊர்க்காரர்களோ அல்ல. அவர்கள் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர்தான். பட்டியலின இளைஞன் ஆதிக்க சாதி பெண்ணோடு ஓடிப்போனதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கிராமப் பஞ்சாயத்தினர் எங்களின் தரப்பிடம் இதுபற்றிப் பேசவே இல்லை. அவர்களாகவே முடிவு எடுத்திருக்கிறார்கள். எங்களில் (பட்டியல் சாதி மக்களின்) பாதுகாப்பிற்காக நாங்களே ஒன்று கூடி நின்றதுதான் அவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது” என்றார்.

உலகம் கிராமம் பட்டியல் சாதியினர் காலனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ’தி ஃபெடரல்’ தளத்திடம் பேசும் போது, “எங்களுக்கு முதலில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. கடைக்காரர் மளிகைப் பொருட்கள் தர மறுத்தார். தினமும் பால் ஊற்றும் பால்க்காரர் அக்டோபர் 2-ம் தேதி முதல் எங்களுக்குப் பால் ஊற்றுவதில்லை. தெரு குழாயில் தண்ணீர் பிடிக்க அனுமதிக்கவில்லை” என்றார்.

அதே பட்டியல் சாதியினர் காலனியைச் சேர்ந்த இன்னொரு பெண் , “நாங்கள் தேவை இல்லாமல் அவர்களின் (சாதி இந்துக்களின்) வீடுகளைத் தாண்டிச் செல்லமாட்டோம். மளிகைப் பொருட்கள் வாங்குவதற்குப் போவோம். அவர்கள் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்குப் போவோம். அப்போது அவர்களில் சிலர் எங்களை எங்கள் சாதிப் பெயரைச் சொல்லி வம்பிழுப்பார்கள். ஆதிக்க சாதியினரின் தெருக்களில் நுழையக் கூடாது என்பார்கள்” என்று ’தி ஃபெடரல்’  தளத்திடம் கூறியுள்ளார்.

இந்த 29 பட்டியல் சாதி குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள், பால், தண்ணீர் போன்றவற்றைக் கொடுக்கும் ஊர்க்காரர்களுக்கு ரூ.5000 அபராதம் கிராமப் பஞ்சாயத்தால் விதிக்கப்பட்டுள்ளதாக ’தி ஃபெடரல்’  தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சூளகிரி பகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்  சிவாவிடம் அரண்செய் பேசியபோது, “இன்று சூளகிரியில் பாதிக்கப்பட்ட உலகம் கிராமம் பட்டியல் சாதியினர் காலனி மக்களுக்கு நீதி கேட்டுக் கண்டனப் போராட்டம் நடத்தவுள்ளோம். அரசு சம்பந்தப்பட்டவர்கள் மேல் சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றார்.

இதுகுறித்து உலகம் கிராமம் தலித் காலனியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம் அரண்செய் பேசிய போது, “நேற்று டிஎஸ்பி தாசில்தார் முன்னிலையில், இனி இது போல தவறுகள் செய்யக்கூடாது என்று கிராம பஞ்சாயத்திடம் எச்சரிக்கை செய்யப்பட்டது. நேற்று மாலையில் இருந்து எந்த பொருட்கள் வாங்குவதில் எந்த பிரச்சனையும் இல்லை.  சில விஷமிகள் ஊர்காரர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.

ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதன் மூலம், நாங்கள் அவர்களுக்கு அடிப்பணிந்து விடுவோம் என்று நினைக்கிறார்கள். இந்த விஷயத்தை இப்படியே விட்டால், மற்ற ஊர்களிலும் இது பரவும். அந்த ஊர்களில் இருக்கும் தலித்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இவர்கள் செய்வது அடிப்படை உரிமைகளுக்கே எதிரானது என்று நாம் சட்டத்தின் வழியில் புரிய வைக்க வேண்டும்” என்றார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்