Aran Sei

`வன்கொடுமைக்கு ஆளான 12 வயது மகள்’ – நியாயம் கேட்கும் இருளர் தாய்

Representational image

“என் மகளை வன்கொடுமை செய்தவனை சட்டப்படி தண்டித்து, என் மகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவ வேண்டும்” என்று திண்டிவனம் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த சிறுமியின் தாய், காவல் ஆய்வாளருக்குப் புகார் கடிதம் எழுதியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பாலப்பட்டு கிராமத்தில் பழங்குடியினரான இருளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இணையருக்கு மூன்று பெண் பிள்ளைகளும் இரண்டு ஆண் பிள்ளைகளும் உள்ளனர். முற்ராம்பட்டு கிராமத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை செய்து வருகிறார்கள். அங்கேயே ஒரு குடிசையில் தங்கியுள்ளனர்.

கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 26), காய்ச்சல் காரணமாக தனது 12 வயது மகளை வீட்டில் விட்டு விட்டு, அனைவரும் வேலைக்குச் சென்று விட்டனர். அதே செங்கல் சூளையில் ட்ராக்டர் ஓட்டுநர் பிரகாஷ் (வயது 35), சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின் வரும் வழியில், தன் மகளை முள் காட்டிற்குள் வைத்து வன்கொடுமை செய்ததாகவும், இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும், சிறுமியின் தாய் புகார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் உள்ள இருளர் பாதுகாப்பு சங்கத்தின் உதவியோடு, இந்தப் புகார் கடிதம் கண்டமங்கலம் காவல் உதவி ஆய்வாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், “ஐயா அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து, என் மகளை வன்புணர்ச்சி செய்த செங்கல் சூளை டிராக்டர் ஓட்டுநர் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து, என் மகளுக்கும் எங்களுக்கும் பாதுகாப்பும் நீதியும் கிடைக்க உதவுமாறு தங்களை வேண்டிக்கொள்கிறேன்.” என்று அச்சிறுமியின் தாய் கோரிக்கை வைத்துள்ளார்.

 

மேலும்,  அக்டோபர் 27 அன்றுதான் இந்தச் சம்பவம் அச்சிறுமியின் தாய்க்குத் தெரிய வந்தது என்றும் அன்று காலையே, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்துச் சென்றதாகவும் அதில் கூறியுள்ளார். ஆனால், காவல்துறை வழக்குப் பதியாமல் இருப்பதால், இவர்களை மருத்துவமனை ஊழியர்கள் திருப்பி அனுப்பிவைத்து விட்டதாகப் புகார் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தக் கடிதத்தின் நகல், விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கும் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கல்விமணியிடம் அரண்செய் பேசியது.

புகார் கடிதம் கொடுக்கப்பட்ட பின் குற்றவாளி மேல் வழக்கு பதியப்பட்டு விட்டதா?

எஃப்.ஐ.ஆர் பதிந்திருக்கிறார்கள். தாயையும் சிறுமியையும் விழுப்புரத்தில் உள்ள ஹோம் ஒன்றில் சேர்த்திருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட சிறுமியை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதற்கு `காவல்துறைக்கு அறிக்கப்படவில்லை’ என்று திருப்பி அனுப்பியிருக்கிறார்களே?

பாலியல் வல்லுறவு தொடர்பான வழக்குகளில் மருத்துவப் பரிசோதனை உடனே நடத்தப்பட வேண்டும். விந்து 48 மணி நேரம்தான் இருக்கும். அதற்குப் பின் இருந்ததே தெரியாமல் போய்விடும். குற்றத்துக்கான தடயம் மறைந்து விடும். சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி, ஒரு நாள் கழித்துதான் தாய்க்குத் தெரிந்திருக்கிறது. உடனே மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்கள்.

அங்கே பாதிப்புக்கு உள்ளான சிறுமியைத் திருப்பி அனுப்பியிருக்கிறார்கள். இது சட்டத்தின் படி சரியாக இருக்கலாம். ஆனால், ஒருவன் அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கிறான். அவன் முதலில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமா இல்லை காவல் நிலையத்திற்குப் போய் புகார் கொடுத்த பின் பொறுமையாக மருத்துவமனைக்கு வரவேண்டுமா?

இந்த வழக்கைக் கலைக்க எதிர்த் தரப்பு முற்படும் என்று நினைக்கிறீர்களா?

வாய்ப்பு இருக்கிறது. லோக்கல் போலீஸ் ஸ்டேஷனில் அப்படி நடக்கலாம். அதனால் தான் இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்குப் புகாரின் விவரங்களை அனுப்பிவிட்டேன்.

தொடர்ந்து, இந்தச் சமுதாயம் ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு வருகிறதா?

உண்மைதான். இருளர் மக்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாகப் பல வழக்குகளை நான் பார்த்து விட்டேன். மத்திய தர வர்க்கம்தான் வழக்குகளுக்கு அஞ்சும். இவர்கள் உறுதியாக நிற்பார்கள்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள அரியாக்குஞ்சூர் கிராமத்தின் ஊராட்சி தலைவராக இருப்பவர் இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த முருகேசன். கடந்த ஜூலை மாதம், அதே ஊரில் இறந்தவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற போது, ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள், உடல் அடக்கம் செய்ய தன்னைக் குழி தோண்டப் பணித்ததாகப் புகார் செய்திருந்தார் என்பது குறிப்பிடப்பட்டது.

குழிதோண்ட வைக்கப்பட்ட முருகேசன் (நன்றி : The News Minute)

இருளர் சமூதாய மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கான பட்டாவைக் கேட்டுத் தொடர்ந்து பல காலங்களாகப் போராடி வருகின்றனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்