Aran Sei

நாம் ஏன் காதலை கசடறக் கற்க வேண்டும்? – குறுநகை

 

நாம் ஏன் உணவு உற்கொள்ள வேண்டும்?

ஏன் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்?

ஏன் தண்ணீர் அருந்த வேண்டும்?

ஏன் காலையில் பல் துலக்க வேண்டும்?

என்ற பலதரப்பட்ட அகம் சார் அடிப்படைக் கேள்விகளுக்கான பதில்களைக் குழந்தைப் பருவத்தில் இருந்தே அறிந்து வைத்திருப்போம். நாம் ஏன் காதல் செய்ய வேண்டும் என்ற அகத்திற்கும் அகமானக் கேள்விக்கு பதிலைத் தேட நேரம் ஒதுக்கியிருக்க மாட்டோம்.  காதல் என்பது பள்ளிக்கூடங்களின் தீண்டத்தகாத சொல் என்பதால் நம் ஊர்களின் கல்வித் தளங்கள் பாலியல் கல்வி என்ற பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி தேர்வுப் பாடத்தின் ப்ளு பிரிண்டில் வைத்தாலும் கூட காதல் மூடிமுழுகப்பட்ட பாடமாகவே கற்பிக்கப்படும். குழந்தைகளுக்கு அவர்கள் எப்படிப் தோன்றினார்களென்ற அடிப்படை அறிவியலை விளக்கத் தயங்கும் கல்வித் தளங்கள் புவி எப்படித் தோன்றியது, பூசணிக்காய் எப்படி வளர்கின்றது, பூ எப்படி மகரந்தச்சேர்ககை செய்கின்றது என்ற அறிவியலையெல்லாம் கற்று அறிவு பெறும்படி அறிவுறுத்திவருவதெல்லாம் வேடிக்கையே. குழந்தைகளைப் பெற்றெடுத்தவர்களுக்குக் கூட குழந்தை எப்படிப் பிறக்கிறதென்ற போதிய காம அறிவு(Lust science)  இருப்பதில்லை. நம் சமூகமே அப்படித்தான் பல நூற்றாண்டுகளாக இயங்கிவருகின்றது.

காதல் என்றால் என்னவென்று முறையாகக் கற்பிக்கப்படாததால் விவாதிக்கப்படாததால் இங்குள்ளவர்களில் முக்கால்வாசி இளைஞர்கள் காதலைத் தேடி ஓடுகின்றனர். அலைகின்றனர். மறுக்கப்படும் பொழுதும் மறுக்கும் பொழுதும் தன்னிலை தவறிவிடுகின்றனர். அமில வீச்சு, பாலியல் மிரட்டல் போன்ற செயல்களில் ஈடுபட்டு எதிரில் இருப்பவர்களின் வாழ்க்கையைச் சிதைத்துவிடுகின்றனர். அல்லது சில போதைப் பழக்கங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கின்றனர். இதில் ஒரு சிலரே இயல்பாய் கடக்க முயற்சிக்கின்றனர். கால்வாசி இளைஞர்கள் காதலைப் பற்றி சிந்திக்காமல் சமூகம் செயற்கையாக அளிக்கின்ற ஒரு உறவைப் பிடித்துக் கொண்டு வாழ்க்கை நடத்துவதாகக் காட்டிக் கொள்கின்றனர். பருவம் வந்ததும் காதலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் அல்லது காதல் செய்யும் இளைஞர்களை இயல்பாக பொது சமூக உளவியல் விட்டுவிடுவதில்லை. பொது உளவியல் காதலை வயதுக் கோளாறாகச் சித்தரித்து தடுக்க முயற்சிக்கின்றது.

காதல் என்பது உடலில் ஏற்படும் கோளாறல்ல. காதல் என்பது உடலின் தேவை. வயது வந்ததும் காதல் சிந்தனை வரவில்லை என்றால்தான் கோளாறு.  காதல் சிந்தனை வந்தால் ஆரோக்கியம். ஒரு வேளை வயது வந்தும் உங்களுக்கு காதற் சிந்தனை வரவில்லையென்றால் நல்ல மருத்துவரிடம் தாமதிக்காமல் ஆலோசிப்பது சிறந்தது.

காதலையே கோளாறாகக் காட்டும் கோளாறு நிறைந்த சமூகத்தை மாற்ற நினைக்கும் ஒவ்வொறு தோழர்களும் நாம் ஏன் காதல் செய்ய வேண்டும் என்பதை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

காதலைப்பற்றி முழுமையான புரிதல்கள் அறிவியல் தரவுகள் முறையாக குடும்ப அமைப்புகளாலும் கல்வித்தளங்களாலும் குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படாமல் இருப்பதால் காதலை புதிராகவே அனைவரும் அணுகுகின்றனர். நேர்முகமாகக் காதல் கல்வி மறுக்கப்படுவதால் மறைமுகமாகக் காதலைக் கற்க பார்ன் வளைதளங்கள் போன்ற இணைய சேவைகளுக்குள் குழந்தைகள் உட்பட பலர் இயற்கைத் தேவை ஏற்படுவதற்கு முன்பே நுழைந்துவிடுகின்றனர். திரைப்படங்களில் வருகின்ற வன்முறைக்காட்சிகளை மிக கொடூரமாக சித்தரிக்கப்படும் கொலைக் காட்சிகளை குழந்தைகளுடன் கண்டு மகிழ்கின்ற குடும்ப அமைப்புகள் காதல் காட்சிகள் வருகின்ற பொழுது ரசிக்க மறுக்கின்றனர். வன்முறைகளைக் குழந்தைகளுக்கு ரசிக்க கற்றுத்தரும் குடும்பங்கள் காதலை மூடி மறைக்க முயற்கிக்கின்றன.  குடும்பத் திரைப்படங்களில் மறுக்கப்பட்ட காதல் காட்சிகள் ஏற்படுத்துகின்ற உணர்ச்சித் தாக்கங்களால் தூண்டப்பட்டும் குழந்தைகளின் மூளை காதலைப்பற்றி நிறையத் தெரிந்து கொள்ள விரும்புகின்றது. இது பற்றி பெற்றோர்களிடமோ ஆசிரியரிடமோ  கேட்டறிந்து கொள்வதற்கான வெளியை சமூகம் அளிப்பதில்லை. எனவே நேரிடையாக பார்ன் வளைதளங்களுக்குள் தள்ளப்படுகின்றனர்.

காமம் என்பது அகவயமாகத் தோன்றக் கூடிய ஒன்று. வலைதளங்களில் காதலைப் பயில்கின்ற பலர் புறவயமாகவே தொடர்ந்து தூண்டப்படுகின்றனர். காதல் நம் சமூகத்தில் வெளிப்படைத்தன்மையற்றதாகவே இருந்து வருகின்றது. இணையதளங்களில் காதலை மிகுந்த வெளிப்படைத்தன்மைகளுடன் காணும் இளைஞர்கள் நிஜத்தில் இருப்பவைகளைக் கண்டு ஏமாற்றம் அடைகின்றனர். முறையானக் காதல் கல்வி மறுக்கப்படுவதால் தொடர்ந்து காதலை தவறாகவே புரிந்து கொள்கின்றனர்.

காதலையும் காமத்தையும் தனித்தனியாகக் கையாண்டு காதலைத் தவறவிடுகின்றனர். காமம் என்ற சொல்லை மிகப்பெரிய கூடா வார்த்தையாகவே ரகசியப் பண்பாட்டுவரிசைகளுக்குள் புழங்கிக் கொள்கின்றனர். புணர்உறுப்புகளை புணர்செயல்பாடுகளை அவமானக் குறியீடுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர். மொத்தமாகக் காதலை இயல்புக்கு அப்பாற்பட்ட அசிங்கமெனவே கட்டமைத்துக் கொள்கின்றனர். உடலை அதுவும் குறிப்பாகப் பெண்களின் உடலை ஆபாசம் நிறைந்தவையாக கருதி வருகின்றனர். ஆறறிவு படைத்த மனிதர்களின் இந்நிலையைக காண்கையில் எனக்கு பாவமாகத் தோன்றும்.

என்றைக்காவது ஆடையின்றித் திரியும் பறவைகளை, பாம்புகளை, நாய்களை பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா? புறத் தோற்றத்தால்(உடலால்) தூண்டப்பட்டுதான் அவைப் புணர்கின்றனவா? என்று எப்பொழுதாவது நீங்கள் சிந்தித்திருந்தால் கட்டாயம் பெண்களின் ஆடை விருப்பங்களுக்குள் மூக்கை நுழைத்திருக்க மாட்டீர்கள். காமம் என்பது புறவயமான படிமங்களால் மட்டுமே இயங்கக் கூடியது அல்ல இருப்பினும் அப்படி நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். எப்படி எல்லோரும் காதலர் தினங்களுக்கு ரோஜா மலர்களைத் தருவதைக் கண்டு நாமும் தரத் தொடங்குகிறோமோ அதுபோல் பெரும்பான்மை மக்கள் வழிப் பெரும் கற்பிதங்களின் அடிப்படையில் நமக்குள்ளானக் காதலைக் கட்டமைத்துக் கொள்கிறோம். காதலையும் கடவுளை போல ஆக்கிவைத்துள்ளோம். ஏன்? எதற்கு என்ற சிந்தனைக்கெல்லாம் நேரமளிப்பதே இல்லை. எடுத்தோம் கவுத்தோம் என்று சொல்வார்களே அதை போல நேரடியாக எந்தப் புரிதல்களுமின்றி காதலை எடுப்பது பிறகு கவுந்துவிட்டதே என்று கவுந்தடித்துப் புலம்புவது வாடிக்கையாகிவிட்டது.

உண்மைக் காதலென்ற பெயரில் இங்கு நடத்தப்படுபவையும் திணிக்கப்படுபவையும் ஆதிக்க உணர்வுகளை அடுத்தடுத்தத் தலைமுறைகளுக்கு கடத்த நிகழ்த்தப்படும் நாடகங்களே ஆகும்.

காலனிய விடுதலைக்குப் பின் இந்திய ஒன்றியத்தில் எத்தனை எத்தனை மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சாதிய ஒழிப்பிற்காக எண்ணற்ற கொள்கைகள் செயல்படுத்தப்பட்டன. பிறப்பின் அடிப்படையில் மனிதனை மனிதன் ஒடுக்கும் வன்மம் நிறைந்த சாதியத்தை ஒழிக்க அனைத்துத் தளங்களிலும் எண்ணற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தீண்டாமை ஒரு கொடுங்குற்றம் என்ற சிந்தனை பள்ளிப் பாட புத்தங்களில் கால காலமாக அச்சிடப்பட்டு வந்திருக்கின்றன. இவையெல்லாம் என்ன இதைவிடச் சிறப்பாக சாதி பார்க்காமல் பழகும் எத்தனை எத்தனை நட்புறவுகள் தினமும் மலர்கின்றன. இருந்தும் என்ன சாதியக் கட்டமைப்பு கடந்த நூற்றாண்டில் எப்படி இருந்ததோ அப்படியேதான் இன்றும் இருக்கின்றது. சாதியென்பது முழுமையானப் பாகுபாட்டின் வடிவம். அந்தப் பாகுபாட்டை கல்வி, அதிகாரம் மற்றும் பொருளாதார உறவுகளால் சமநிலைப்படுத்த முடியுமே ஒழிய ஒழிக்க முடியாது. சாதியம் என்பது அழித்தொழிக்கப்பட வேண்டிய வன்மமாகும். சாதியத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கு அகமணமுறை (சுய சாதித் திருமணங்கள்) வழிவகுக்கின்றது. எனவே சாதிய நிறுவனங்கள் அகமணமுறைகளை காதலின் புனிதமாக கற்பிக்கின்றன. அகமணமுறைகளை குறைக்காமல் சாதியத்தைத் துளிகூட அகற்றிவிட முடியாது. புறமணமுறைகளான சாதி மறுப்புத் திருமணங்கள் பொது உளவியலால் தொடர்ந்து தாக்கப்படுவதன் பின்னணியில் சாதியம் சிதைந்திவிடுமென்ற அளவு கடந்த அச்ச உணர்ச்சி இடம்பெற்றிருக்கின்றது. இந்திய ஒன்றியத்தைப் பொருத்தமட்டில் சாதி மறுப்புத் திருமணம் என்பது முன்னேரிய வகுப்பை(FC) அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பை(BC) சேர்ந்த நபரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள பட்டியலினம் அல்லது பழங்குடியினத்தை (SC/ST) சேர்ந்த நபரும் மணம்புரிவது ஆகும். புறமணமுறைகள் தமிழகத்தில் அரிதிலும் அரிதாகவே நடக்கின்றன. புறமணமுறைகளை ஊக்குவிக்க எண்ணற்ற நலத்திட்டங்களை அரசு வகுத்திருந்தாலும் புறமணமுறைகளைத் தடுக்க நினைக்கும் சாதிவெறியர்களின் ஆணவப்படுகொலைகளைத் தடுக்க அரசு நிறைவானத் திட்டங்களை வகுக்காதது சற்றுப் பின்ணடைவையே ஏற்படுத்துகின்றது.

காதலின் வடிவமாகக் காட்டப்படும் சாதியத்தைக் கடத்தும் அகமணமுறைகள் நிறைய குடும்ப வன்முறைகளையும் உள்ளடக்கியுள்ளது. அகமணமுறையென்னும் அத்தியாயத்திற்குள் தான் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டது. பெண்களை உடன் கட்டை ஏற்றுவித்ததும் பெண்களுக்கு மறுமணம் மறுத்து விதவையாக்கியதும் வரதட்சணை வன்கொடுமைகளை நிகழ்த்தியதும் அகமணமுறை கட்டமைப்புதான் என்பதையெல்லாம் நாம் அறிந்திருப்போம்.  சாதியத்தை செயல்படுத்துவதைப் போல அகமணமுறைகள் ஆணாதிக்கத்தையும் பாதுகாக்கின்றன. அகமணமுறையிலிருந்து காதல் பாடம் படித்துவிட்டு காதல் செய்யும் இளைஞர்கள் சாதியத்தை விட்டு வெளியில் வந்தாலும் ஆணாதிக்க வட்டத்திற்குள்ளேயே நின்றுவிடுகின்றனர் என்பதை கண்கூடாக பார்க்க முடிகின்றது.

காதல் என்ற உணர்வுநிலை இருவருக்குள்ளாக தோன்றி இருவருக்குள்ளாகவே முடிந்துவிடுவதில்லை. இருவரது காதல் உணர்வு சமூகத்தின் உறவுநிலைகளைக் கட்டமைக்கின்றன. இன்றுவரை நம் ஊர்களில் சாதிப் பாகுபாடு பாலினப் பாகுபாடு சாதிகளுக்குள்ளான வர்க்கப் பாகுபாடு போன்ற பாகுபாடுகளை காதல் என்ற பெயரில் நடத்தப்படும் சடங்குகளால் அசைக்க முடியாத கட்டமைப்பாக விரிவுபடுத்தியுள்ளனர். பாகுபாட்டுக் கட்டமைப்பை உளவியல் ரீதியாக கேள்வியே கேட்டுப் பழகாத பாழடைந்த மூளைகளிடமிருந்து அழித்தொளிப்பதற்கு சமூகத்தில் காதல் சிந்தனைகள் வெகுவாக பரவ வேண்டும். எதை வைத்துக் கொண்டு கட்டமைத்தார்களோ அதைக் கொண்டே தாக்குவதற்கு காதல் குறித்த தெளிவு நம்மிடையே இருக்க வேண்டும்.

காதல் என்ற உணர்வுநிலை அடிப்படையாகவே பாகுபாடற்றது. காதலால்தான் வேறுபாடுடைய உடலியலைக் கொண்ட ஆண் பெண் பாலினத்தைக் கூட இயல்பாக ஒன்றிணைக்க முடிகிறது. காதல் மனிதர்களைச் சமநிலைப்படுத்தக் கூடியது. காதல் மனித உடலிலும் உளவியலிலும் எண்ணற்ற புதுமைகளை உருவாக்கவல்லது. புத்துணர்வை நல்கக் கூடியது.

காதல் பெற்றோர் வழிப்பெறும் சாதி, மதம், இனம், மொழி, வர்க்கம் போன்ற பின்னணிகளை அறியாது மழையைப்போலப் பாகுபாடன்றி இயற்கையாக இருவருள் தோன்றக்கூடியது என்ற செய்தியை 2000 ஆண்டுகள் முற்பட்ட சங்க இலக்கியத்தின் கீழ்கண்ட செய்யுள் வழியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

‘யாயும் ஞாயும் யாரா கியரோ

எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்

யானும் நீயும் எவ்வழி அறிதும்

செம்புலப் பெயல்நீர் போல

அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே” (குறுந்தொகை – 40)

இச்செய்யுள் கொண்டிருக்கும் பொருளே காதலுக்கு இலக்கணமாகவும் அமைந்துள்ளது. முதல் மூன்று அடிகளில் மூன்று கேள்விகளையும் இறுதி இரண்டடிகள் கருத்தையும் கொண்டுள்ளன. 1. உன் தாயும் என் தாயும் யார் யார் யாரோ? 2. என் தந்தைக்கும் உன் தந்தைக்கும் என்ன உறவு முறையுண்டு? சரி அதுதான் போகட்டும் 3. உனக்கும் எனக்கும் முன்பே அறிமுகமாவது இருந்ததா? பெய்கிற மழை செம்மண்ணோடு கலந்து பிரித்தறிய முடியாத செந்நீராய் ஆவது போல் இருடைய நெஞ்சம் கலந்தது பார் அதான் காதல் என்பதுதான் பொருள்.

அதை விட்டுட்டு நீங்க என்ன ஆளுக? என்ன சாப்பிடுவீங்க? சம்பளம் எவ்வளவு? நகை எவ்வளவு போடுவீங்க? என்பதையெல்லாம் நோண்டி நோண்டிக் கேட்டு நடத்தப்படும் நாடகங்கள் எல்லாம் உண்மையில் நாடகக் காதலாகும் என்பதை தமிழுள்ள வரை திராவிடக்கட்சிகளுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மாட்டோம் என்று சபதமேற்ற மேன்மை பொருந்திய சாதிப்பற்றாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காதல் வரலாற்றின் தொடக்கத்தில் ஒரு வடிவத்திலும் இன்று வேறொரு வடிவத்திலும் உள்ளது. உண்மை எது? பொய் எது? என்பதையெல்லாம் அறிவதற்கு நாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.

வெறுமனே இருவருக்குள்ளான உறவை மட்டும் ஏற்படுத்துகின்ற சாதாரண உறவுநிலையல்ல காதல். அதையும் கடந்து சமூக உறவுநிலைகளை கட்டமைக்கக்கூடியது. அனைத்துத் தரப்பு மக்களையும் காதல் சமநிலைப்படுத்த கூடியது. ஹார்மோன்களின் செயல்பாடுகளால் மனித மூளையில் ஏற்படுகின்ற காதலை நாம் எப்படி புரிந்து கொள்வது, பாலின இடைவெளியுடன் காதல் என்ற பெயரில் நம் மீது திணிக்கப்படுகின்ற உறவு எத்தகையக் குற்றங்களைக் கொண்டு இயங்குகின்றன? நாம் ஏன் காதலிக்கின்றோம்? நாம் ஏன் காதலிக்க வேண்டும்? காதலை வைத்துக்கொண்டு எந்தவிதமான சமூக மாற்றங்களை அடிப்படையில் நம்மிடையே ஏற்படுத்த முடியும்? ஏன் காதலை பொது வெளியில் விவாதிக்க வேண்டும்? போன்ற இன்ன பிற காதல் சார்ந்த உணர்வுகள் தொடர்பாகவும் உறவுகள் தொடர்பாகவும் கேள்விகள் எழுப்பி நாம் அறிந்து தெளிவடைகையில்தான் சிறப்பான மானுடக் காதலை கட்டமைத்துக் கொள்ள முடியும்.

சமத்துவமான சமூகத்தை சமத்துவம் நிறைந்த வளமான காதல் உறவுகளே தீர்மானிக்கின்றன ஆதலால் காதலைக் கற்று காதல் செய்வீர்……

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்