Aran Sei

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

”என் ஒரே ’அஜெண்டா’ லட்சத்தீவின் வளர்ச்சிதான்…” – எனக் கூறிக் கொள்ளும் இந்தப்  பிரஃபுல் படேலை ஏன் இந்தச் சிறிய தீவுக் கூட்டத்தில் வாழும் 70 ஆயிரம் மக்களும் வெறுக்கின்றனர்? அவர் தீவு நிர்வாகத்திலிருந்து அகற்றப்பட வேண்டும் என ஒற்றைக் குரலில் கூவுகின்றனர்?

அவர் கூறும் லட்சத்தீவின் இந்த வளர்ச்சியின் கதையை முதலில் பார்க்கலாம். முதலில் அவர் லட்சத்தீவின் ‘அட்மினிஸ்ட்ரேடர்’ (Administrator) ஆகப் பொறுப்பேற்ற இந்த ஆறு மாதங்களுக்கும் குறைவான காலத்தில் இயற்றியுள்ள சர்ச்சைக்குறிய சட்டங்களின் கதையைப் பார்ப்போம்.

  1. “லட்சத்தீவு வளர்ச்சிக்கான அதிகார விதிகள் 2021 (Draft Lakshadweep Development Authority Regulation 2021 (LDAR) என்பது தீவில் உள்ள மக்கள் யாரையும் அவர்கள் வாழ்விடத்திலிருந்தும் அதன் மீதான சகல உரிமைகளிலிருந்தும் வெளியேற்றும் அல்லது இடப்பெயர்வு செய்து வேறெங்காவது குடியமர்த்தும் அதிகாரத்தை, தீவின் நிர்வாகிக்கு அளிக்கிறது. நகரத் திட்டமிடல் அல்லது ஏதேனும் ஒரு வளர்ச்சித் திட்டத்திற்கு அந்த நிலம் தேவை எனச் சொன்னால் போதுமானது.
  2. ”சமூக விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (Prevention of Anti-Social Activities Act (PASA) என்பது ஜனவரி 2021 இல் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம், ஏன்? எதற்கு? எனப் பொதுவில் அறிவிக்காமலேயே குடிமக்கள் யாரையும் சிறையில் அடைக்கலாம்.
  3. ”பஞ்சாயத்து அறிவிப்பு நகல்” (Draft panchayat notification) என்பதன்படி இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றவர் யாராயினும் பஞ்சாயத்து உறுப்பினர் ஆவதற்குத் தகுதி கிடையாது.

கேரள எம்.பி எகமாரம் கரீம், இப்படியான சர்வாதிகாரப் போக்கைக் கண்டித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதினார். என்னத்தைக் கடிதம் எழுதி… ந்க்குறீங்களா? வேறென்ன செய்றது? படேல் வந்தபிறகு 2021 ஜனவரி தொடங்கி கிட்டத்தட்ட 300 பேர் வேலை நீகம் செய்யப்படுள்ளனர் எனப் புலம்புகிறார் லட்சத்தீவு எம்.பியான மொம்மட் ஃபைசல். ட்விட்டர் மற்றும் சமூக ஊடகங்களிலும் இது குறித்த வேதனை வெளிப்பாடுகள் பதியப்பட்டன. படேல் வந்தபின்தான் இங்கே கோவிட் 19 உச்சமானது. அப்போதுதான் இந்த அநீதிகளும் முன்வைக்கப்பட்டன.

அதிகபட்சமாக 70,000 மக்கள் தொகையுள்ள லட்சத் தீவில், முதல் கோவிட் பாதிப்பு பதிவானதும் இந்த ஜனவரியில்தான். இன்று 6,000 பேர்கள் அங்கே பாதிக்கப்பட்டுள்ளனர். 24 பேரை கோவிட் 19 பலிவாங்கியுள்ளது.

The Print ஊடகம் படேலைச் சந்தித்துக் கேட்டபோது அவர் சொன்னது: “எனக்கு ஒரே ’அஜண்டாதான்’. அதுதான் லட்சத்தீவின் வளர்ச்சி”.

நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அங்கு உள்துறை அமைச்சராக இருந்தவர்தான் இன்றைய லட்சத் தீவின் பிரச்சினைக்குரிய நிர்வாகி (administrator) பிரஃபுல் படேல். டாமன் & டையு மற்றும் தாத்ரா & நாகர் ஹவேலி ஆகிய யூனியன் பகுதிகளுக்கும் அவரே நிர்வாகி. யூனியன் பகுதிகளில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியையே நிர்வாகியாக நியமிப்பது என்பது, நரேந்திர மோடி காலத்தில் இப்படி முடிவுக்கு வந்தது. அந்த யூனியன் பகுதியின் சகல நிர்வாகத்திற்கும் இந்த ‘நிர்வாகி’யே பொறுப்பாகிறார் என்பதால், குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இந்த யூனியன் பகுதிகளின் ”நிர்வாகி” எனும் பதவி மிக முக்கியமான ஒன்று. அதாவது குடியரசுத் தலைவரின் அதிகாரத்தில் உள்ள அப்பகுதியை குடியரசுத்தலைவருக்காக இவர் செய்கிறார் எனப் பொருள்.

தங்களின் நிலம் பறிபோவது குறித்த மக்களின் அச்சம் பற்றி, “இது தவறான கவலை. மற்றவர்களின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகிறார்கள். அப்படியெல்லாம் எதுவும் நடக்காது. என் ஒரே அஜண்டா வளர்ச்சிதான். டூரிஸ்டுகள் எல்லாம் மாலத்தீவுக்குத்தானே போகிறார்கள் என்றும் படேல் ஒப்பிடுகிறார். இந்தப் பக்கமே டூரிஸ்டுகள் ஒதுங்கிறதில்லியே. அதுனாலதான் நாம் நிலச்சீர்திருத்தச் சட்ட நகலை எல்லாம் கொண்டு வர்றேன்- என்கிறார். “மக்கள் தப்பு செய்யலைன்னா அப்புறம் ஏன் தடுப்புக் காவல் சட்டத்துக்கு எல்லாம் பயப்புடுறாங்க” என்றும் பதில் கேள்வி போட்டு, கேட்பவர்களை அசத்துகிறார். “டூரிசத்தை எல்லாம் டெவலப் பண்ணனும் சார்” என்கிறார். ”நான் சொல்ற செய்தி ஒண்ணுதான். நாம எல்லாம் சேர்ந்து லட்சத்தீவு முன்னேற்றத்துக்கு பாடுபடணும்” –என்று சொல்லிப் புன்னகைக்கிறார் படேல்.

யார் இந்த பிரஃபுல் படேல்? – ஒரு முன்கதைச் சுருக்கம்

ஏழுமுறை தாத்ரா நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தின் எம்,பி ஆக இருந்தவரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான (எம்.பி) மோகன் டெல்கார், சென்ற பிப்ரவரி 21, 2021 அன்று மும்பை ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் ஏறுவதற்கு முன் அவர் விரிவாகத் தான் ஏன் தற்கொலை செய்து கொள்ள நேரிடுகிறது என்பது குறித்து ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துள்ளார். அந்தத் தற்கொலையைத் தூண்டிய குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளவர்தான் இந்த பிரஃபுல் படேல்.

சற்று விரிவாகப் பார்க்கலாம். குற்றம் சாட்டப்பட்ட பிரஃபுல் படேல் மற்றும் 8 பேரும் தன் தந்தையை மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும், அவரை ஒரு பொய்யான கிரிமினல் வழக்கில் சிக்க வைப்போம் எனவும் மிரட்டி 25 கோடி ரூபாய் அதற்கு ஈடாகக் கேட்டு அச்சுறுத்தியதால்தான் தன் தந்தை தற்கொலை செய்ய நேரிட்டது எனவும், இன்று  குற்றம் சாட்டுகொன்றனர் மோகன் டெல்காரின் மகன் அபிநவ் மற்றும் டெல்காரின் மனைவி.

யூனியன் பிரதேசங்களின் நிர்வாக அதிகாரியாக வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் நியமிக்கப்படுவார். அப்படியான வழமைகளைக் குழி தோண்டிப் புதைப்பதில் வல்லவர்களான பா.ஜ.வினர் செய்த இன்னொரு நிர்வாக மாற்றம் இது. ஏற்கனவே மோடி முதலமைச்சராக இருந்த குஜராத்தில் உள்துறை அமைச்சராக இருந்து அவருக்கு நெருக்கமானவர் இவர். மோடிக்கு மட்டுமல்லாமல் மோடியின் ஆக நம்பிக்கைக்கு உரியவரான உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கும் நெருக்கமானவர் இவர்.

இன்று லட்சத்தீவின் நேரடி நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ள  இந்த ப்ரஃபுல் படேல் உள்ளிட்ட இதர 8 பேர் மீது, சென்ற மார்ச் இரண்டாம் வாரம் மகாராஷ்டிர அரசு, நாடாளுன்ற உறுப்பினர் மோகன் டெல்காரின் தற்கொலைக்குக் காரணமாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்தது. டெல்காரின் மகன் அபிநவ் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தக் குற்றச்சாட்டுகளுடன் கூடிய இந்த வழக்கு மும்பை மரீன் டிரைவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.

பல அதிகாரிகளிடம் தன் தந்தை இது தொடர்பாகப் புகார் அளித்துள்ளார் எனவும், அதனால் எந்தப் பயனும் இல்லாததன் விளைவாகவே தன் தந்தை இந்த முடிவை எடுக்க நேரிட்டுள்ளது எனவும் அபிநவ் தன் குற்றச்சாட்டில் கூறியுள்ளார். ”என் தந்தை தாத்ரா நகர் ஹவேலியின் தலைநகரான சில்வசாவில் (Silvassa ) தற்கொலை செய்து கொண்டிருந்தால் தனது மரணம் சரியாக விசாரிக்கப்பட்டு உரிய நீதி கிடைக்காது என்பதற்காகவே அவர் திட்டமிட்டு மும்பையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்” எனவும் அவர் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர அரசு இப்போது நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் டெல்காரின் இந்தத் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகிறது. 15 பக்கங்களில் அவர், தான் ஏன் தற்கொலை செய்ய நேர்ந்தது என்பது குறித்துத் தன் ‘லெட்டர் பேடில்’ பதிவு செய்திருந்த ஒரு மரண வாக்குமூலத்தையும் இப்போது மகாராஷ்டிர போலீஸ் கைப்பற்றியுள்ளது.

அபிநவ் சொல்லியுள்ளது உண்மைதான். பிரஃபுல் படேல் அதிகாரம் செலுத்தும் தாத்ரா நகர் ஹவேலியில் மட்டும் இந்தத் தற்கொலை நடந்திருந்தால் தடையங்கள் அழிக்கப்பட்டு, இது தற்கொலையே இல்லை என்றும் கூட இந்நேரம் கதை முடிக்கப்பட்டிருக்கலாம். மஹாராஷ்டிர அரசு அப்படிச் செய்துவிடவில்லை. இன்று மோகன் டெல்காரின் இந்தத் தற்கொலை குறித்துப் புலனாய்வு செய்வதற்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளார். இது குறித்து அவர் மகாராஷ்டிர சட்டமன்றத்திலும் அறிவித்தார். டெல்காரின் மனைவியும் மகனும் முதல்வர் உத்தவ் தாக்கரேயைச் சந்தித்து இதுதொடர்பாக முறையிட்டுள்ளனர்.  ”ஒருவரை அவதூறு செய்து அசிங்கப்படுத்த படேல் எந்த மட்டத்திற்கும் இறங்குவார்” எனவும் பத்திரிகையாளர்கள் முன் அவர்கள் கூறியுள்ளதும் ஊடகங்களில் வந்துள்ளது.

இதை ஒட்டி சென்ற பிப்ரவரி 26 அன்று, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் நிர்வாகியை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினரான மோகன்பாய் டெல்காரின் மரணம் குறித்து நீதிமன்ற விசாரணை ஒன்று வேண்டும் எனவும் காங்கிரஸ் கட்சி கோரியுள்ளது

படேல் தலைமையில் இயங்கிய ‘தாத்ரா நகர் ஹவேலி’ யூனியன் பிரதேச நிர்வாகம், தற்கொலை செய்துகொண்ட எம்.பிக்குத் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தது எனக் காங்கிரஸ் கட்சியும் குற்றம் சாட்டியுள்ளது. டெல்காருக்குச் சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரி மற்றும் ஒரு ஆதிவாசி கல்யாண மண்டபம் ஆகியவற்றை ஒழித்துக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் அது குற்றம் சாட்டியுள்ளது. ஏழுமுறை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மோகன் டெல்கார் நாடாளுமன்றத்தில் இப்பிரச்சினையை எழுப்பியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கடிதங்கள் எழுதியும் மத்திய அரசு அவற்றைக் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறியுள்ளது. “அவரது இந்தக் குற்றச்சாட்டுகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் பிரதமர் மோடி இருந்ததன் பின்னணி என்ன என்று, மோகன்பாய் டெல்கார் இறந்த இந்தப் பின்னணியிலாவது விளக்கி, இனிமேலாவது அவருக்கு நீதி செய்வார் என நம்புவோம்” –எனவும் காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

இறப்புக்குப் பிந்திய கூறாய்வுச் சோதனையில் டெல்கார் தற்கொலை செய்துகொண்டது ஐயமின்றி உறுதியாகியுள்ளதாக,  சென்ற பிப் 24 அன்று காவல்துறை உறுதி செய்தது. இதுகுறித்து தடயவியல் நிபுணர் குழாம் ஒன்றும் டாக்டர்கள் குழு ஒன்றும் விரிவாக ஆய்வு செய்துள்ளதாகவும் மகாராஷ்டிரக் காவல்துறை கூறியுள்ளது.

எனினும் காவல்துறை டெல்காரின் தற்கொலைக் குறிப்பில் என்ன கூறியுள்ளார், யார் மீது குற்றம் சாட்டியுள்ளார் என்பது குறித்து எதுவும் கூற மறுத்துள்ளனர். இதுகுறத்து அவர்கள் “வாயைத் திறக்க மறுப்பதாக” ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

மோகன் டெல்கார் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதில் பா.ஜ.கவிற்கு ஏதும் பங்குண்டா எனக் காவல்துறை விசாரிக்க வேண்டும் என மகாராஷ்டிர காங்கிரஸ் கோரியுள்ளது. இது தொடர்பாக மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் சச்சின் சாவந்த், பொதுச் செயலாளர் டாக்டர் ராஜு வாக்மேர் ஆகியோர் மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கிற்கு இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளனர். கடந்த ஓராண்டுகாலமாக படேல் நிர்வாகத்தின் கடுந் தொல்லைகளுக்கு டெல்கார் ஆளாகியுள்ளார் என்பதையும் காங்கிரஸ் சுட்டிக் காட்டுகிறது.

தனது கடிதங்கள் மற்றும் வீடியோ பதிவுகளில், தன் மீது பொய்வழக்குகள் போட்டுத் தொல்லை செய்வது, நீதிக்காக, தான் மேற்கொள்ளும் எல்லா முயற்சிகளையும் பாழடிப்பது, பாஜக தலைவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறை, புலனாய்வு முகமைகள் உள்ளூர் ரவுடிகள் என எல்லாத் திசைகளின் ஊடாகவும் தான் குறிவைத்துத் தக்கப்படுவது ஆகியன குறித்து டெல்கார் புலம்பியுள்ளதையும் காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டி, மகாராஷ்டிர உள்துறை அம்மைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தையும் அது வெளியிட்டுள்ளது.

(கட்டுரையாளர் அ.மார்க்ஸ், ஒரு எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்