Aran Sei

மைதிலி சிவராமன் (14 டிச. 1939 – 30 மே 2021) – சில குறிப்புகள் – பேராசிரியர் அ.மார்க்ஸ்

ஒன்று

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க அமைப்பிலும் (CITU), இந்திய அளவிலான அதன் பெண்கள் அமைப்பிலும் (AIDWA) இருந்து நீண்டகாலம் களச் செயல்பாடுகளை மேற்கொண்டவரும், ஆங்கிலத்திலும், தமிழிலும் பல முக்கிய நூல்கள் மற்றும் கட்டுரைகள் ஊடாக முக்கிய அறிவுத்துறைப் பங்களிப்புகளைச் செய்தவருமான மைதிலி சிவராமன் அவர்கள் இன்று நம்முடன் இல்லை. கோவிட் 19 கோடுந் தாக்குதலுக்குப் பலியான முக்கிய அறிவுஜீவிகளின் பட்டியலில் இன்று அவரும் இணைந்துள்ளார். எனக்கு அவருடன் நெருக்கமான தொடர்பும் பழக்கமும் இல்லாதபோதும் ஒரே காலகட்டத்தில், (1970 களில்) சில ஆண்டுகள் அதே கட்சியில் நானும் பணியாற்றியவன் என்கிற வகையிலும், அவரது எழுத்துக்களில் முக்கியமான சிலவற்றை வாசித்துள்ளவன் என்கிற வகையிலும் அவரது பிரிவு, அவரை அறிந்த எல்லோரையும்போல என்னையும் துயரில் ஆழ்த்துகிறது. இறுதிக் காலத்தில் ‘நினைவு மறதி’ (Alzheimer) நோயால் பாதிக்கப்பட்டு பொதுப் பணிகளில் ஈடுபட இயலாதவராக இருந்த நிலையில் இன்று அவர் இறக்க நேர்ந்துள்ளது..

அமெரிக்காவில் படித்தவர், ஐ.நாவில் பணியாற்றியவர், கீழ வெண்மணி படுகொலை (1968) குறித்து நேரில்சென்று கள ஆய்வு செய்தபோது தீண்டாமை மற்றும் நிலப்பிரபுத்துவக் கொடுமை ஆகியவற்றின் ஊடாக நிகழ்ந்த அந்தக் கொடு நிகழ்வால் பாதிக்கப்பட்டு தனது எதிர்கால வாழ்வை அரசியல் பணிகளுக்கு, குறிப்பாக விவசாயிகள், தொழிலாளிகள், பெண்கள் முதலானோரின் உரிமைகக்காக அர்ப்பணிப்பது என முடிவு செய்து தன் வாழ்க்கைப் பாதையை அந்தத் திசையில் திருப்பிக் கொண்டவர் என்பன இன்று மைதிலி குறித்த நினைவுக் குறிப்புகள் அனைத்திலும் பதிவு செய்யப் படுவதைக் காண்கிறோம். அப்படியான ஒரு அரசியல் நிலைபாடுகள் இல்லாத ஒரு சமூக மற்றும் குடும்பப் பின்னணியில் பிறந்தவராயினும் தன் வாழ்க்கைப் பாதையை மாற்றிக் கொண்டு அடித்தள மக்கள், தொழிலாளிகள் ஆகியோரின் உரிமைகளுக்கான போராட்டங்களின் ஊடாக வாழ்ந்து மறைந்துள்ளவர் அவர்.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

அவர் செயல்பட்ட இந்தக் காலம் மிக முக்கியமானது. உலகளவில் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் சந்தித்த பிளவுகளை ஒட்டி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் பல நெருக்கடிகளையும் பிளவுகளையும் சந்திக்க நேரிட்டது. ஏற்கனவே இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (CPI) எனவும், மார்க்சிஸ்ட் கட்சி (CPI-M) எனவும் பெரும் பிளவைச் சந்தித்திருந்த (1964) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் அடுத்த மூன்றாண்டுகளில் (1967) நக்சல்பாரி இயக்கத்தின் (CPI –ML) உருவாக்கத்தோடு இன்னும் ஒரு பெரும் நெருக்கடியைச் சந்திக்க நேரிட்டது. இந்தப் பிளவின் ஊடாக மார்க்சிஸ்ட் கட்சிதான் அதிகம் பாதிக்கப்பட்டது.

இப்படி நம்பிக்கை ஊட்டக் கூடிய பொது உடைமைக் கட்சி, வலுவான தொழிலாளர் மற்றும் விவசாய இயக்கங்கள் எல்லாம் பிளவுண்டு படிப்படியாக வலுவிழக்கத் தொடங்கி இருந்த காலம் அது. திராவிடக் கட்சிகளுக்கே இனி எதிர்காலம் எனும் நிலை தமிழ்ச் சூழலில் ஏற்பட்டிருந்தது. இந்தப் பின்னணியில்தான் மைதிலியின் அரசியல் பிரவேசம் இந்தியச் சூழலில் நிகழ்கிறது, மார்க்சிஸ்ட் கட்சியைத் தேர்வு செய்து தன் பணியை இங்கு அவர் தொடங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க இயக்கத்தில் (CITU) தன்னை அர்ப்பணித்து அவர் இயங்கிய அந்தக் காலகட்டத்தில் கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க ஆட்சி கடுமையாக தொழிற்சங்க இயக்கங்களையும் தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களையும் ஒடுக்கியது. மைதிலியின் தொழிற்சங்க வழிகாட்டியாக இருந்த தோழர் வி.பி.சிந்தன் குண்டர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு உள்ளானதெல்லாம் அப்போது நடந்தவைதான்.

உபா சட்டத்தில் சிறுவன் கைது – தன் இயலாமையால் குழந்தைகளிடம் ’வீரத்தைக்’ காட்டுகிறதா அரசு?

1975 -77 காலகட்டத்தில் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை இந்திய ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. ஒரு இரண்டரை ஆண்டு காலத்தில் இந்திராவின் நெருக்கடி நிலை ஆட்சி வீழ்த்தப்பட்டாலும், அந்தச் சூழலில் உருவான ஜனதா கட்சி ஆட்சியின் ஊடாக அன்று ஆர். எஸ்.எஸ் இயக்கம் தனது ஜனசங் கட்சியை முதன் முதலாக ஆட்சி அதிகாரத்தில் (1975 -77) ஒட்ட வைக்க அது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மைதிலி களப்பணியாற்றத் தொடங்கிய இருபதாண்டுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உலகளவில் அவற்றின் ஆகப் பெரும் வீழ்ச்சிகளைச் சந்தித்தன. 1989 வாக்கில் நிகழ்ந்த சோவியத் ருஷ்யாவின் சிதைவு அவற்றின் உச்சபட்சமாக அமைந்தது. சாமுவேல் ஹட்டிங்டன் போன்ற முதலாளியச் சிந்தனையாளர்கள் இனி வர்க்கப் போராட்டத்திற்குக் காலமில்லை எனவும் இனி கலாசாரங்களின் மோதல்களே உலகளவில் முக்கியம் பெறும் எனவும் பேசத் தொடங்கினர்.

ஈழத் தமிழர்களை என்னவாக சித்தரிக்கிறது TheFamilyMan2 ? – ர. முகமது இல்யாஸ்

அதற்குப்பின் தொடர்ந்த பல சிக்கல்களை இந்திய அளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் சந்தித்த வரலாறை நாம் அறிவோம். உலகமயச் செயல்பாடுகள் இந்தியாவில் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டன. இதில் காங்கிரசுக்கும் பா.ஜகவிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லாதிருந்தது. கூடுதலாக இந்தியாவை ஒரு பெரும்பான்மை மதவாத ஆளுகையாக மாற்றி அமைக்கும் திட்டமுள்ள பா.ஜ.க  2014 முதல் தொடர்ந்து ஆட்சியைக் கைப்பற்றித் தக்கவைத்துக் கொண்டு தன் ‘அஜெண்டா’வை தீவிரமாக நிறைவேற்றத் தொடங்கிய இந்தக் காலகட்டத்தில்தான் இன்று மைதிலி மறைந்துள்ளார்.

தொழிற்சங்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்றத் தொடங்கிய மைதிலி பாப்பா உமாநாத்துடன் இணைந்து இந்திய அளவில் 1981 இல் ஜனநாயக மாதர் சங்கம் என்கிற பெண்கள் அமைப்பை உருவாக்கியபின் (All India Democratic Women’s Association – AIDWA) இந்திய அளவில் அதன் துணைத் தலைவராக இருந்து இறுதிச் சில ஆண்டுகளில் நோயுற்று அவரது மரணம் இப்போது நிகழ்ந்துள்ளது..

மோடியின் ஏழு(ஏழரை) ஆண்டுகள்: இந்தியா ஏன் ஒரு ஜோ பைடனைத் தேட வேண்டும்?

இரண்டு

மைதிலி அவர்கள் தமிழகத்தை மையமாகக் கொண்டு தொழிற்சங்க பணிகளை மேற்கொண்ட காலத்தில் நான் மாநிலக் கல்லூரியில் முது அறிவியல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு இடதுசாரிப் பின்னணியில் வளர்ந்தவன் என்கிற வகையில் அப்போது மைதிலி தொடங்கி இருந்த The Radical Review எனும் ஆங்கிலக் காலாண்டு இதழை வாங்கி மேலோட்டமாகப் படிப்பது வழக்கம். இன்னும் கூட சிதிலமடைந்த அதன் மூன்று இதழ்கள் என்னிடம் உண்டு. அதன் ஆசிரியர் குழுவில் இருந்த மற்றவர்கள் இந்து என் ராம் மற்றும் காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம். முதலாளியப் பொருளாதாரத்தை முழுமையாக ஏற்றுக் கொண்ட சிதம்பரம் சில காலம் இப்படியான ஒரு இதழில் மைதிலியுடன் இணைந்து செயல்பட்டது வியப்புத்தான். ஜூன் 13, 2021 அன்று மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்பட்ட மைதிலி குறித்த நினைவு அரங்கில் சிதம்பரம் மனதார அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். அமெரிக்காவில் தான் படித்த அதே காலத்தில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த மைதிலியுடன் நட்பு கொண்டிருந்தது குறித்த நினைவுகளை மிக்க துயருடன் பகிர்ந்து கொள்ளவும் செய்தார். எனினும் அவர் பேசிய சிறிது நேரத்தில் பலமுறை தான் மைதிலியின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்துகளுடன் உடன்பட்டவன் இல்லை என்பதையும் திரும்பத் திரும்ப வலியுறுத்தியது குறிப்பிடத் தக்கது. என். ராமும் கூட தொடர்ந்து அந்த இதழ் உருவாக்கத்தில் பங்களிக்கவில்லை என்பதை அறிகிறோம். சில ஆண்டுகளில் அக்காலாண்டிதழ் நின்றுபோனது.

லட்சத்தீவை ஆட்டிப் படைக்கும் இந்த பிரஃபுல் படேல் யார்? – பேராசிரியர் அ.மார்க்ஸ்

மைதிலியின் எழுத்துக்கள் EPW இதழிலும் பெயர் குறிப்பிட்டும், குறிப்பிடாமலும் வந்துள்ளன எனவும், Mainstream முதலான இடதுசாரி இதழ்களிலும் அவர் எழுதியுள்ளார் என்பதையும் அறிகிறோம். அவை தொகுக்கப்பட்டு வெளியிடப்படுதல் அவசியம். ஒரு காலத்தில் இப்படி மைதிலி போன்ற மேற்குடிகளைச் சேர்ந்த அறிவாளி வர்க்கத்தினர் எவ்வாறு மார்க்சியச் சிந்தனைகளில் மனமாற ஈடுபாடு கொண்டிருந்தனர் என்பதையும், ஒரு வாழ்வை எப்படி அவற்றைச் செயலாக்கும் நம்பிக்கையுடன் அர்ப்பணித்தனர் என்பதையும் அறிந்துகொள்ள அவை பெரிதும் உதவும். இறுதிவரை ஒரே கட்சியில் முழுமையாக அர்ப்பணித்துச் செயல்பட்டவர் என்கிற வகையில் மார்க்சிஸ்ட் கட்சிகளின் தலையில் அமைந்த ஆட்சிகள் மற்றும் தனது கட்சி மற்றும் வெகுஜன அமைப்புகளின்  செயல்பாடுகள் ஆகியன குறித்த விமர்சனங்கள் ஏதும் அவருக்கு இருந்திருந்தாலும் அவற்றை அவர் எங்கும் பதிவு செய்ததாகத் தெரியவில்லை. இறுதிவரை மார்க்சிஸ்ட் கட்சியில் நம்பிக்கையுடனும், உறுதியுடனும், விசுவாசமாகவும் வெளிப்பட்டவர் அவர்.

சுதந்திரத்திற்குப் பிந்திய இந்திய வரலாற்றில் பெரும் களங்கமாக அமைந்த வெண்மணி உறுதியாக மைதிலி போன்றவர்களுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்தி இருக்கும். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பதை வெறும் வர்க்கப் போராட்டமாக மட்டுமே பார்த்துவிட முடியாது என்பதுதான் அது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளிகள் முதலானோரை ஒரு படித்தான அடையாளங்களுக்குள் முடக்கிவிட முடியாது என்பதன் மீது வெண்மணிதான் உரிய கவனத்தை ஈர்த்தது. சாதி, தீண்டாமை என்பன வர்க்க அடையாளங்களைத் தாண்டி சில தனித்துவங்களைக் கொண்டுள்ளதை அது அழுத்தமாகச் சுட்டிக் காட்டியது. அதை நாம் எவ்வாறு எடுத்துக் கொண்டோம், எந்த வகையில் விவசாயத் தொழிலாளிகள் அமைப்புருவாக்கம் மற்றும் கோரிக்கைகள் ஆகியவற்றில் அவற்றைக் கவனத்தில் கொண்டோம் என்பது முக்கியம்.

மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்கு நாம் சாட்சியாக நிற்கிறோம்: அருந்ததி ராய்

தீண்டாமை என்பது விவசாயத் தொழிலாளிகள் மீதான ஒடுக்குமுறைகளில் கூடுதல் பங்கு வகித்தது, இந்தியச் சமூகங்களில் நில உடைமையாளர்கள் ஆயினும், விவசாயத் தொழிலாளிகள் ஆயினும் அவர்களை வெறும் வர்க்க ரீதியில் மட்டும் பார்த்துவிட முடியாது, சாதி மற்றும் தீண்டாமை என்பன இந்த நிலவுடைமையாளர்கள் X விவசாயத் தொழிலாளிகள் என்கிற உறவில் எத்தகைய பங்கு வகிக்கின்றன என்பது குறித்து வெண்மணியை ஒட்டிய ஆய்வுகள் தீவிரமான மறுபரிசீலனைகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

வெண்மணியை ஒட்டி சாதி மற்றும் தீண்டாமை ஆகியன விவசாயிகள் மற்றும் விவசாய இயக்கங்கள் குறித்த ஆய்வுகளில் இடதுசாரிக்கட்சிகள் மற்றும் இடதுசாரி அறிவுஜீவிகள் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது உண்மைதான். ஆனால் அவை அந்தத் திசையில் ஆழமாகச் சென்றனவா என்பது ஆய்வுக்குரியது. மைதிலி அவர்களின் The Radical Review இதழில் தலித்கள் மத்தியிலான படிநிலை ஏற்றத் தாழ்வுகள் (Hierarchy in Dalits) குறித்து அன்று சில ஆய்வுகள் வெளிவந்தது நினைவுக்கு வருகிறது. அந்த ஆய்வுகளின் அடிப்படையில் இந்த சாதி, தீண்டாமைப் பிரச்சினைகளை ஒட்டி இந்திய விவசாயிகள் இயக்கச் செயல்பாடுகளில் எத்தகைய மாற்றங்களையும் மறு பரிசீலனைகளையும்  முன்வைத்தன என்பதும், அந்த அடிப்படையில் தமது போராட்ட வடிவங்களிலும். இயக்கச் செயற்பாடுகளிலும் உரிய மாற்றங்களை இடதுசாரி விவசாய இயக்கங்கள்  மேற்கொண்டனவா என்கிற கேள்வியும் இன்று முக்கியமாகின்றன.

சாதி, தீண்டாமை அடிப்படையிலான படி நிலை ஏற்றத்தாழ்வுகள் தலித்கள் மத்தியிலும் கூட உள்ளது குறித்து மைதிலியின் Radical Review இதழில் ஒரு கட்டுரை வெளிவந்தது நினைவுக்கு வருகிறது. உணவுப் பழக்க வழக்கங்களிலும் கூட அது வெளிப்படுகிறது என்பதை எல்லாம் கூட அது சுட்டிக் காட்டியது. எல்லாம் உண்மைதான். கீழத் தஞ்சை முதலான பகுதிகளில் இருந்த விவசாயத் தொழிலாளிகளின் மத்தியில் இப்படியான உள் வேறுபாடுகளும், அதன் அடிப்படையிலான ஏற்றத் தாழ்வுகளும் உண்டு. இன்று அவை மிகவும் வெளிப்படையாக மேலுக்கு வந்து தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்டவர்கள் என அடையாளப் படுத்தப்பட்டோர் குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக இன்று நிற்பதைப் பார்க்கிறோம். எல்லாமே ஆய்வுக்குரியவைதான். ஆனால் விவசாயத்தொழிலாளிகள் குறித்த பிரச்சினையில் மேற்தட்டு நில உடமையாளர்களுக்கும் கூலித் தொழிலாளிகளுக்கும் உள்ள சுரண்டல் உறவு குறித்துப் பேசுகிற ஒரு தொழிற்சங்க ஆய்வு  சுரண்டப்படும் தொழிலாளிகள் மத்தியிலும் இப்படியான ஏற்றத் தாழ்வுகள் முதலானவைக்கு முக்கியத்துவம் அளித்து சுட்டிக்காட்டுவது வெண்மணிக்குப் பிந்திய அன்றைய சூழலில் தேவைதானா எனும் கேள்வியும் நமக்கு எழுகிறது.

ஆளும் மாநிலங்களில் தேயும் பாஜக; தேர்தல்கள் சொல்லும் உண்மை – சரத் பிரதான்

ஒன்றைச் சொல்ல முடிகிறது. காங்கிரசின் வீழ்ச்சியில் கம்யூனிஸ்டுகள் மேலுக்கு வரலாம் என்கிற எதிர்பார்ப்பு அன்று பொய்யாகிவிட்டது. அந்த இட்த்தை திராவிடக் கட்சிகள் பிடித்துக் கொண்டன. இதைப் புரிந்து கொள்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் கம்யூனிஸ்டுகளுக்குப் பல சிக்கல்கள் இருந்தன என்பது தெளிவாக விளங்குகிறது. மைதிலி போன்ற அறிவுஜீவிகள் அதை வெளிப்படுத்தின. ‘வர்க்கப் போராட்டம்’’ என்பதன் இடத்தில் ‘சாதி எதிர்பு‘ என்பது முக்கியத்துவம் பெற்றதையும் ‘முதலாளிய எதிர்ப்பு’ என்பதன் இடத்தை இலகுவாக ‘பார்ப்பன எதிர்ப்பு’ கைப்பற்றிக் கொண்டதையும்  கம்யூனிஸ்டுகளால் எளிதில் விளங்கிக் கொள்ள முடியவில்லை. அன்றைய இடதுசாரி அறிவுஜீவிகள் வெளிப்படுத்திய பதற்றத்தின் ஊடாக நாம் இதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இதன் பொருள் கம்யூனிஸ்டுகளும் முதலாளிய எதிர்ப்பைக் கைவிட்டு பார்ப்பனிய எதிர்ப்பை மட்டுமே பேசி இருக்க வேண்டும் என்பதல்ல. பார்ப்பனிய எதிர்ப்பைப் பேசிய தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றியபின் அதைக் கைவிட்டது மட்டுமின்று முதலாளிகளின் கைப்பாவையாக இயங்கிய வர்க்கப் போராட்டங்களைக் கொடூரமாக ஒடுக்கியதையும் நேரில் கண்டவர்கள் தான் மைதிலி போன்ற தொழிற்சங்கச் செயல்பாட்டாளர்கள். இந்தக் குழப்பத்தை நாம் அக் காலகட்ட மைதிலியின் எழுத்துக்களில் காண முடிகிறது.

சமூக மேம்பாடு மற்றும் விடுதலைக்கான திராவிட இயக்கத்தின் முழக்கங்களுக்கும் ஆட்சிக்கு வந்தபின் அதன்  நடைமுறைகளுக்கும் உள்ள வேறுபாடுகளைச் சுட்டிக்காட்டி இடதுசாரிகள் விமர்சித்தது. எனினும் அது பெரிதாக எடுபடவில்லை.

மோடி அவர்களே! பிரதமராக இருக்கும் தார்மீக உரிமையை இழந்துவிட்டீர்கள் – அருந்ததி ராய்

மூன்று

தொழிலாளி வர்க்கத்தின் மீதான அடக்குமுறைகளில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்கும், அதை வீழ்த்தி வந்த தி.மு.க ஆட்சிக்கும் இடையில் பெரிய அளவில் வித்தியாசம் இருக்கவில்லை என்பதை The Radical Review கட்டுரைகள் சுட்டிக் காட்டுகின்றன. 1971 ஆம் ஆண்டில் நடைபெற்ற MRF தொழிலாளர் போராட்டம், ஆனைமலை தோட்டப் பணியாளர்கள் போராட்டம் ஆகிவற்றை ஒடுக்குவதில் காங்கிரசுக்கும், தி.மு.கவிற்கும் வேறுபாடு இல்லாதிருந்ததையும் சுட்டிக் காட்டுவதும் குறிப்பிடத் தக்கது. அவை உண்மைதான்.

நீதிக்கட்சி வழியில் வந்தவராயினும் பெரியார் நீதிக் கட்சிப் பாரம்பரியத்திலிருந்து வேறுபட்டு நிற்பதை மைதிலி முதலானோர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத் தக்கது. எனினும் பெரியார் அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை எனவும், வெறுமனே சாதியை மட்டுமே முதன்மைப் படுத்தினார் எனவும் அவரை விமர்சித்தனர். இப்படி முதலாளியத்தைக் காட்டிலும் பார்ப்பனியத்தைக் குறிவைத்து இயங்கியதாகப் பெரியாரை விமர்சிப்பது என்பது காலம் காலமாக இந்தியச் சூழலில் தனித்துவமாக உள்ள சாதி மற்றும் பார்ப்பனிய மேலாண்மைக்கு எதிரான நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தைக் குறைப்பதாகவே இருந்தது. மைதிலி போன்ற அறிவுஜீவிகள் இன்னும் ஆழமாக இந்தப் பிரச்சினைகளை விவாதித்திருக்க வேண்டும்.

சோவியத் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் வீழ்ச்சி மற்றும் அவை முதலாளியப் போக்கை நோக்கித் திரும்பியது ஆகியன குறித்து உலக அளவில் இட்துசாரிச் சிந்தனையாளர்கள் நிறைய விவாதித்துள்ளனர். ஆனால் கட்சி அடையாளங்களுக்குள் இறுக்கமாகக் கட்டுண்டு இருந்ததன் விளைவாக அவை குறித்து ஆழமான ஆய்வுகள், விவாதங்கள் எதையும் மைதிலி போன்றவர்கள் முன்வைக்க இயலாமற் போனதற்கான காரணங்களாகச் சுட்டிக்காட்டலாம். அது குறித்த விவாதம் மிகவும் வெளிப்படையாக இடதுசாரிகள் மத்தியில் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு இறுக்கமான மௌனம்தான் அபோது நிலவியது.

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

சோஷலிச எதார்த்தவாதம் என்கிற இலக்கியக் கோட்பாடு எப்படி இலக்கிய மற்றும் கோட்பாட்டு வளர்ச்சிகளுக்கும், நவீன சிந்தனை வளர்ச்சிகள் மற்றும் இலக்கியப் போக்குகளுக்கும் எதிரானதாக அமைந்தது என்பது குறித்த ஒரு வெளிப்படையான விவாதங்களும் இங்கே இட்துசாரிகளின் மத்தியில் உருவாகவில்லை. சி.பி.ஐ கட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கும் என்.சி.பி.எச் நிறுவனம் அப்போது சென்னையில் இந்த சோஷலிச எதார்த்தவாதம் குறித்த ஒரு விவாதக் கருத்தரங்கை நடத்தியது. அதில் தொ.மு.சி ரகுநாதன் முதலானோர் சோஷலிச எதார்த்தவாத்த்தை முற்றாக விமர்சித்துக் கட்டுரை ஒன்றை முன்வைத்தனர். சிறப்பு அழைப்பளராகக் கலந்துகொண்ட பேராசிரியர் சிவத்தம்பி அவர்களும் அதே கருத்தையே முன்வைத்தார். அந்தக் கட்டுரைகள் தட்டச்சு செய்யப்பட்டு ஒரு நூலாக அந்தக் கருத்தரங்கிற்கு அழைக்கப்பட்டோருக்கு வழங்கப்பட்டது. என் சி பி.எச் நிறுவனம் ஏனோ இன்றுவரை அதை வெளியிடவில்லை. டாக்டர் சிவத்தம்பி அவர்களின் பிரதி இப்போதும் என்னிடம் உள்ளது.

இறுதிவரை ஒரே இடதுசாரிக் கட்சியில் இருந்து களப் போராளியாக இயங்கியவர் என்கிற வகையில் நமது அன்பிற்கும் மதிப்பிற்கும் வியப்பிற்கும் உரியவர் மைதிலி சிவராமன் அவர்கள். எனினும் அவரைப் போன்ற படிப்பாளிகள், செயல்பாட்டாளர்கள், தொழிலாளிவர்க்க உரிமைகளுக்காக முழு வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள் இப்படியான இறுக்கமான கட்டுப்பாடுகளைச் சுமந்ததன் விளைவாக அவர்களின் அறிவுத் திறனை ஆய்வுத் துறையில் முழுமையாகப் பயன்படுத்த இயலாமற் போனதோ என்கிற எண்ணம் நமக்கு ஏற்படுகிறது.

மோடியின் தவறுகள் – கட்டுப்பாடு இல்லாத ஒரு பெருந்தொற்று : தி கார்டியன் தலையங்கம்

ஒரு வாழ்நாளை களப் போராளியாக இருந்து வாழ்ந்து தொழிலாளிகள், பெண்கள் முதலானோரின் உரிமைகளுக்காகப் பல மட்டங்களில் போராடியவர் என்கிற வகையில் மைதிலி சிவராமன் அவர்களின் பங்களிப்புகள் போற்றுதற்குரியன. என்றும் நினைவுகூரத் தக்கன. சி.பி.எம் கட்சி சார்பாக அவரது மறைவை ஒட்டி நடந்த இணைய வழிக் கருத்தரங்கில் நான் கூறியதை மீண்டும் இங்கு வலியுறுத்துகிறேன். அவரது கட்டுரைகள் மற்றும் அவரது Radical Review இதழ்க் கட்டுரைகள் ஆகியன தொகுக்கப்பட்டு வெளியிடப்படுதல் அவசியம். ஒரு காலகட்டத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு காலக் கண்ணாடியாக அது அமையும்.

மைதிலி அவர்களின் பிரிவால் துயருறும் அவரது அன்புக் கணவர் கருணாகரன் மற்றும் மகள் கல்பனா ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் அன்பையும் உரித்தாக்குகிறேன்.

(கட்டுரையாளர் அ.மார்க்ஸ் ஓய்வுபெற்ற பேராசிரியர், எழுத்தாளர் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்