Aran Sei

வேல் யாத்திரை முருகனும் கொல்லப்பட்ட முருகேசன்களும்

வெற்றி வேல்..வீர வேல்

சக்தி வேல்…வீர வேல்

ஞான வேல்…வெற்றி வேல்

 

இவை ஏதோ, முருகனுக்கு விரதமிருந்து பக்தி பரவசத்தோடு பழனிக்குச் செல்லும் மக்களின் குரல்கள் அல்ல. அந்த பக்தர்களிடமிருந்து இந்தத் தொனியில் ஆராவாரம் வராது. காலையில் எழுந்து வீட்டிலிருக்கும் முருகன் படத்திற்கு முன் நின்று வணங்கிவிட்டு வேலைக்குச் செல்லும் அவசரத்தில், ஏதேனும் அரசியல்வாதிகள் முச்சந்தியில் நின்று கத்திக்கொண்டிருக்கும் போது நீங்கள் இந்த முழக்கங்களைக் கேட்டிருக்கலாம். அது கலப்படமில்லாத அப்பட்டமான அரசியல் குரல். முருகனைப் பகடைக்காயாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் தாமரையை மலர வைத்திட துடிக்கும் குரல்.

கலவரம் தூண்டுவதுதான் இந்த யாத்திரையின் நோக்கம் என்று எதிர்க்கட்சிகள் கண்டனக் குரல் எழுப்பின. தமிழக அரசு கொரோனாவைக் காரணம் காட்டி யாத்திரையைத் தடை செய்தது. ஆனால், தடையை மீறி வேல் யாத்திரையும் சடங்குக்குக் கைதுகளும் நடந்த வண்ணம் இருக்கின்றன. கைது-யாத்திரை, யாத்திரை-கைது என்று ஆடப்படும் இந்த அரசியல் கண்ணாமூச்சி விளையாட்டில் தமிழக மக்களின் கண்களில் காவி ரிப்பனைக் கட்டி விடுவார்களோ என்ற பதற்றம் பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது.

வேல் யாத்திரை பயணமொன்றில் பேசிய தமிழக பாஜகவின் தலைவர் முருகன் “தமிழ்பண்பாட்டைக் காப்பது, கடவுள் முருகன் உள்ளிட்ட கடவுளர்கள் மீதான விமர்சனங்களை முறியடிக்கவே இந்த யாத்திரை ‘இது அவசியம் மட்டுமல்ல, அத்தியாவசியம்’ என்று பஞ்ச் டயலாக் அடித்தார். நடு, நடுவே மானே, தேனா பொன்மானே என்பதைப் போல திருக்குறளைத் தப்புந்தவறுமாக மோடி பாணியில் சொல்லிக் காண்பித்தார். மோடியாவது குஜராத்காரர், தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்தாலும், திருக்குறளே தெரியாத முருகன்ஜி தமிழ்பண்பாட்டைக் காக்கப் புறப்பட்டிருக்கிறாரே என்று நமக்கு சிரிப்பு வரலாம். ஆனால், அவர் சிரிப்பு அரசியல்வாதியில்லை. சீரியஸ் அரசியல்வாதி. அப்படியென்றால், இந்த பஞ்ச் டயலாக்குகள் முருகன் சார்ந்த பட்டியல்சாதிகளிலிருக்கும் முருகன்களுக்கு ஏதேனும் உதவி செய்யுமா?

உதவாது என்பதுதான் வரலாற்றுப் பாடம். வரலாறு தெரிந்த மணிகள் அமாவசைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது, முருகன்ஜிக்குப் பணம், பதவி கிடைக்கும், தொண்டர்களுக்கும் மக்களுக்கும் அல்வா உறுதி என்பதுதான்.

சரி, இந்த வேல்யாத்திரை முருகன்களுக்கு உதவுமா என்ற நப்பாசையில் காத்திருப்பவர்களுக்குச் சிலவற்றை நினைவுகூர விரும்புகிறேன்.

முருகன்கள் என்று சொன்னதும் என்னுடைய நினைவுக்கு வருபவர்கள் மேலவளவு முருகேசன், செகுடந்தாளி முருகேசன், கண்ணகி முருகேசன். இவர்கள் அனைவரும் சாதிக்கெதிராக ஏதாவதொரு செயல்களைச் செய்தார்கள் என்பதற்காகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். படுகொலைகளின் வடு, காயம், கோபம் எல்லாம் தமிழக பாஜகவின் தலைவராக வீற்றிருக்கும் முருகனுக்கு இருக்கும் என்று நினைக்கிறார்களா? இருக்காது என்பதற்கு ஓர் உதாரணத்தைத் தருகிறேன்.

சம்பவம் 1: 30-6-1997 மதியம் 3:15 வாக்கில் ஒரு பேருந்து மேலூரிலிருந்து வந்து கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில், தேர்தல் சமயத்தில் எரிக்கப்பட்ட குடிசைகளுக்கு நிவாரணம் வேண்டி முருகேசன் தன்னுடைய சகாக்களோடு கலெக்டர் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்துவிட்டுத் திரும்பி வந்து கொண்டிருந்தார்.  பேருந்து மேலூர் நத்தம் சாலையில், சென்னாகரம்பட்டி சந்திப்பில் 50 பேர்கொண்ட கொலைவெறிக் கும்பலால் தடுத்து நிறுத்தப்பட்டது. சாதிவெறியை அரங்கேற்ற அந்த கிரிமினல் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இடத்தின் பெயர் என்ன தெரியுமா? அக்ரஹார பாலம். பெயரைக் கேட்டாலே ஏதோ விபரீதம் இருக்குமெனத் தோன்றுகிறதா?

நிறுத்தப்பட்ட பேருந்தில் ஏறிய அந்தக் கும்பல் சாதிரீதியாக வசைபாடிக்கொண்டே முருகேசனையும், அவருடன் சென்றவர்களையும் கொடூரமான ஆயுதங்களோடு விரட்டி, விரட்டி வெட்டியது. முருகேசன், செல்லத்துரை, சேவாமூர்த்தி, ராஜா, பூபதி, மூக்கன் உள்ளிட்ட ஆறு பேர் படுகொலை செய்யப்பட்டனர். முருகேசனின் தலையைத் துண்டித்து, நீயெல்லாம் தலைவரா? என்று கேட்டபடி கால்பந்து போல தட்டியே அருகில் இருந்த கிணற்றில் வீசியெறிந்தது. பொ.ரத்தினம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகளின் அயராத முயற்சியின் காரணமாக, நீதிமன்றம் குற்றவாளிகளைத் தண்டித்தது. ஆனால், அந்தக் குற்றவாளிகளை 2019ம் ஆண்டு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விடுதலை செய்தது அதிமுக அரசாங்கம். அதாவது, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும் பாஜக அரசாங்கம்.

2020ல் தமிழக பாஜகவின் தலைமையேற்ற ’தலித்’ முருகன் என்னுடைய சகோதரர்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த குற்றவாளிகளின் விடுதலையை ரத்து செய்ய வேண்டும் என்றா வேல் யாத்திரைக்கு அறைகூவல் விடுத்தார். கருப்பர் கூட்டம் யூ ட்யூப் சேனல்காரர்கள் முருகனை இழிவுபடுத்திவிட்டார்கள் என்பதுதான் அவருடைய ஒரே கவலை. அந்தக் குறிப்பிட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுச் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டபின்பும் இவ்வளவு ஆங்காரம் வரும் முருகனுக்கு மேலவளவு முருகேசன் கொலை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக ஏன் கோபம் வரவில்லை? ஒருவேளை, மேலவளவு முருகேசன் பட்டியல்சாதியாய் இருந்தாலும், தன் சாதியில்லை என்ற அலட்சியம்தான் காரணமா?

அப்படியென்றால், அடுத்தவரைப் பார்ப்போம் செங்குடந்தாளி முருகேசன்

சம்பவம் 2: 17 நவம்பர் 1998ம் ஆண்டு அவினாசியில் உள்ள தன்னுடைய மாமனார் வீட்டிற்கு தீபாவளிக்குச் சென்றுவிட்டு செகுடந்தாளிக்கு ஆறுமாத கர்ப்பிணியான தன்னுடைய மனைவியோடு பேருந்தில் ஏறினார் முருகேசன். முறைப்படி பணம் கொடுத்து டிக்கெட்டும் வாங்கியவர், காலியாகக் கிடக்கும் சீட்டில் அமர்ந்தார். அருகில் அமர்ந்திருந்த கவுண்டர் சாதியைச் சார்ந்த நபர், “சக்கிலிய நாயே, நீயெல்லாம் என் பக்கத்துல உக்காரலாமா?” என்றபடி அவரை வசைபாடினார். முருகேசனும் பதிலுக்கு, “நீங்க கொடுத்த அதே அளவு காசு கொடுத்துதான் டிக்கெட் எடுத்திருக்கேன்” என்று பதில் கூறினார். இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்ற, முருகேசன் விட்டுக் கொடுக்கவில்லை. முருகேசனின் சுயமரியாதை உணர்வைத் தாங்க முடியாத சாதிவெறி பிடித்த அந்த நபர், பேருந்தை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்றார்.

நாவினால் சுட்ட வடு ஆறாதே, சாதிவெறி பிடித்த அந்த நபருக்குச் சக்கிலியரின் உரிமைக் குரல் கொத்தித் தின்றது. ஊரைக் கூட்டிக்கொண்டு முருகேசனின் மீது வன்முறையை ஏவினார். காயம்பட்ட முருகேசன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முருகேசனின் போராட்டத்தில் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட இயக்கங்கள் ஆதரவாக வந்தன. தீண்டாமை செயலை நிகழ்த்திய நபர்களைக் கைது செய்யும் கோரிக்கை வலுப்பெற்றது.

சக்கிலிப்பய பக்கத்துல உக்காந்தது மட்டுமல்லாம, கச்சேரிக்கு இழுப்பானா? அவ்ளோ திமிரா என்று கோபமுற்றவர்கள், முருகேசனைப் பாறாங்கல்லால் அடித்துக் கொன்றார்கள். பேருந்தில் ஏறியதற்காகக் கொலை செய்யப்பட்ட அந்த முருகேசனின் நினைவு நாள்தான் நவம்பர் 17. எல்.முருகன் இன்றும் ஊர், ஊராய் ஊர்வலம் போனபடிதான் இருக்கிறார். இந்த முருகேசனுக்காக வேல் யாத்திரையில் ஏதேனும் ஒரு வார்த்தை பேசுவாரா? மாட்டார்.  வேல் மீது சத்தியம் செய்தாலும், சுயமரியாதை உணர்வே தீண்டாத பாஜக முருகனுக்கு,  இந்த முருகன்களுக்காகக் குரல் கொடுக்கவே தோன்றாது. இருக்கும் இடம் அப்படி. உனக்கு ஏன் சுயமரியாதை உணர்வில்லை என்று வேலும் தண்டிக்கவில்லை. ஏனென்று, ‘கடவுள்’ முருகனிடம் நாம் தனியாக முறையிட்டுக் கொள்ளலாம்.

இவை ஒருபுறமிருக்க, முருகனுக்கு, பாஜகவின் முருகன் வகையறாக்களுக்குமே ஆகாதே. அவர்கள் நம்பும் கதையின் படி, தன்னுடைய சாதியை மீறிக் குறத்தியைக் காதலித்து மணமுடித்தான் என்பதுதான் கதை. அந்த கதையைச் சரியான பொருளில் உள்வாங்கியிருந்தால், சாதி மீறிக் காதலித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்ட கண்ணகி-முருகேசனின் படுகொலை தொடர்பாக அறச்சீற்றம் இருந்திருக்கும். அந்த அறச்சீற்றம், ’பாமக போன்ற சாதிவெறியைப் பரப்பும் கட்சிகளோடு பாஜக கூட்டணி அமைக்கக் கூடாது. அப்படி அமைத்தால், அந்த பாஜகவின் தலைவர் பதவியே வேண்டாம்’ என்ற முடிவெடுக்க வைத்திருக்கும்.
ஆனால், அப்படியேதும் நடக்காது.
ஏனென்றால், வேல்யாத்திரையின் மூலம் கொரோனா காலத்திலும் தடுப்பூசி கிடைக்குமா இல்லையா என்ற கவலையில் இருக்கும் மக்களுக்கு மதவெறி என்னும் விஷ ஊசியைச் செலுத்துவதுதான் இவர்களின் நோக்கம். அந்தத் தீய நோக்கம் கொண்ட இவர்களை, அக்கிரகார முட்டுச்சந்திலேயே நிறுத்தி, திருப்பி அனுப்புவதுதான் படுகொலை செய்யப்பட்ட முருகன்களுக்குத் தமிழர்கள் செய்ய வேண்டிய கடமையாகும்.

ஜெயலலிதா பாணியில் கேட்க வேண்டுமென்றால்,

செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?

என்றுதான் கேட்க வேண்டும்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்