Aran Sei

டிராக்டர் பேரணி Vs ரத யாத்திரை: விவசாயிகளை விமர்சிக்க பாஜகவுக்கு உரிமை உள்ளதா?

பாஜக தலைவர் எல்.கே.அத்வானி நடத்திய ரதயாத்திரைகள் மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு, டெல்லியில் விவசாயிகள் பேரணியில் நடந்த சில குழப்பங்களுக்காக அவர்களை விமர்சிக்க உரிமையில்லை.

போராடிய விவசாயிகளிலிருந்து சிலர், காவல்துறையின் தடையை மீறி ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் பிரதமர் கொடியேற்றும் செங்கோட்டையில் நுழைந்து, கொடியேற்றியது உண்மை தான். ஆனால் தேசியக்கொடி இறக்கப்படவில்லை என்பதும் சிறிது தூரம் தள்ளி கூடுதலாகத் தான் மற்றொரு கொடி ஏற்றப்பட்டதும் இப்போது தெளிவாகி விட்டது.

ஆனால் ரத யாத்திரையில் நடந்தது என்ன? ராமர் கோவில் கட்டப்போவதாகச் சொல்லி யாத்திரை சென்றவர்கள், நேராகச் சென்று பாபர் மசூதியை இடித்தார்கள். இரண்டில் தேசத்திற்கு பேரிழப்பு எது? இரண்டு நிகழ்வுகளிலும் ஏற்பட்ட உயிர்ப்பலியை ஒப்பிட்டால் இந்தக் கேள்விக்கு நமக்கு எளிதாக விடை கிடைக்கும்.

சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் – ஹிந்து சேனா அமைப்பு பின்னணியில் இருந்ததாக தகவல்

டிசம்பர் 6, 1992 ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தினத்தன்று அயோத்தியில் 1,50,000 மக்கள் இருந்தார்கள். மசூதி இடிக்கப்பட்ட பிறகு, பாதுகாப்பு படைக்கும் விஷ்வ இந்து பரிசத்தின் கரசேவகர்களுக்கும் நடந்த மோதலில் 20 பேர் கொல்லப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து நடைபெற்ற மதக்கலவரங்களில் 2000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட மூத்த பாஜக தலைவர்கள் மசூதி இடிக்கப்பட்ட அந்த ’வரலாற்று தருணத்தை’ நேரில் பார்த்துக்கொண்டிருந்தார்கள். உமா பாரதி “இன்னும் ஒரே அடி தான், மசூதி உடைந்துவிடும்” என்று முழக்கமிட்டு கர சேவகர்களைத் துரிதப்படுத்தியதற்காக அறியப்பட்டவர். அத்வானி அதன் பின் துணை பிரதமர் ஆனார், மற்ற இருவரும் 1998-1999ல் ஆட்சிக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் அமைச்சர்களானார்கள்.

அதுவே ஜனவரி 26, 2021ல் டெல்லியில் பேரணி சென்ற விவசாயிகள் எண்ணிக்கை 1.5  முதல் 2 லட்சம் பேர். ஏறத்தாழ 5000 டிராக்டர்களில் அவர்கள் சென்றார்கள். மிகச்சரியான எண்ணிக்கை இன்னமும் தெரியவில்லை. அதில் ஒரே ஒருவர் மட்டும் உயிரிழந்தார். காவல்துறை சுட்டதால் அவர் இறந்தார் என்று விவசாயிகள் ஆரம்பத்தில் குற்றம் சாட்டினாலும், டிராக்டரை திடீரெனத் திருப்ப முயன்றபோது தடுப்பரணில் மோதி அவர் உயிரிழந்தது தெரிய வந்திருக்கிறது. விவசாயிகள் கல் எறிந்தது மற்றும் லத்தியால் திருப்பி அடித்ததில் ஏறத்தாழ 300 காவல்துறையினர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே இழப்பு என்று பார்த்தால் பேரணியில் ஏற்பட்டது மிகவும் குறைவு.

ரத யாத்திரைக்கும் டிராக்டர் பேரணிக்குமான வேறுபாடுகள் என்னவென்று பார்ப்போம்.

செப்டம்பர் 2020 ஆம் ஆண்டு, அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கெதிராக டெல்லி எல்லையில் 65 நாட்களாக விவசாயிகள் போராடி வருகிறார்கள். வேளாண் சட்டங்கள் குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) இல்லாமல் செய்து விடும் என்பதும், விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் விழுங்கிவிடும் என்பதும் அவர்களது வாதம். இந்த போராட்டத்தை அவர்கள் பிழைப்பதற்கான இறுதி வாய்ப்பாக பார்க்கிறார்கள். அரசு அவர்கள் மீது பாராமுகமாக இருந்து வரும் நிலையில், இதுவரை போராட்டக்களத்தில் தற்கொலை, கடுங்குளிர் மற்றும் மருத்துவ உதவியின்மை காரணமாக 70 விவசாயிகள் உயிரிழந்திருக்கிறார்கள்.

’ஆர்எஸ்எஸ்காரர்களை போராட்டத்திற்குள் அனுப்பி, மத்திய அரசு வன்முறையை தூண்டுகிறது’ – விவசாயிகள் குற்றச்சாட்டு

அதுவே ரத யாத்திரைக்கு எந்தவித பொருளாதார நோக்கங்களும் இல்லை. அது வேலையின்மை, பணவீக்கம் அல்லது வாழ்வதற்கான போராட்டம் கூட அல்ல. வி.பி சிங் அரசாங்கம் மண்டல் கமிசனை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு அரசு வேலைகளில் 27% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதால், சிதறிய இந்து வாக்கு வங்கியை மீண்டும் பலப்படுத்த, பாஜக தலைவர்கள் குஜராத்தின் சோம்நாத்திலிருந்து உத்திரபிரதேசத்தின் அயோத்தி வரை ரத யாத்திரையை நடத்தினர்.

இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட உயர்சாதியினரை பிற்படுத்தப்பட்டவர்களுக்கு எதிராக திருப்புவது முடியாத வேலை என்பதால், இந்துக்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பும் வேலைகளில் இறங்கினர். ரத யாத்திரை செல்லும் வழி முழுக்க இந்து-முஸ்லீம் கலவரத்தை உண்டாக்கி இறுதியில் இந்துக்களால் ராமர் பிறந்த இடத்தின் மீது கட்டப்பட்டதாக நம்பப்படும் பாபர் மசூதியை இடிப்பது தான் அதன் நோக்கம். எனவே மதக்கலவரத்தை தூண்டுவதையும் இஸ்லாமியர்களை தாக்குவதையுமே வெளிப்படையான நோக்கமாகக் கொண்டு ரதயாத்திரை நடந்தது.

மதசார்பற்ற போராட்டம்

ஒரு சில நபர்கள், செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடியை ஏற்றியது உண்மை தான். என்றாலும் ஒட்டுமொத்தமாக பார்த்தால் இது மதசார்பற்ற போராட்டமாகத் தான் இருந்தது சீக்கிய மதப் போராட்டமாக நடக்கவில்லை.

தெரிந்தோ தெரியாமலோ சீக்கிய கொடி ஏற்றப்பட்டதாலேயே, இந்த போராட்டத்தின் மதச் சார்பற்ற தன்மையை நாம் புறந்தள்ளிவிட முடியாது.

அடையாள அரசியல் செய்வதற்கு பெயர் போன பாஜக, எந்தவொரு போராட்டத்தையும் இந்துக்களுக்கு எதிரானதாக சித்தரித்து, இறுதியில் போராடுபவர்களை தேசத்திற்கு எதிரானவர்களாக சித்தரிப்பதில் வல்லமை படைத்தது. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ” இந்துக்கள் தேசத்திற்கு எதிரானவர்களாக இருக்க முடியாது” என்று சமீபத்தில் சொன்னதிலிருந்தே இதை நாம் அறியலாம். இதன் அர்த்தம் சிறுபான்மையினர் அனைவரும் தேசத்திற்கு எதிரானவர்கள் என்பதன்றி வேறல்ல.

சற்று கூர்ந்து நோக்கினால் விவசாயிகள் போராடுவது வேளாண் சட்டங்களுக்கெதிராக கூட இல்லை, உண்மையில் அது சட்டங்களை வலுக்கட்டாயமாக மக்கள் மீது திணிக்கும் அரசின் சர்வாதிகார போக்குக்கு எதிரான போராட்டமாக இருப்பதை உணரலாம்.

இத்தனை நாட்களும் சுதந்திரமாக தங்களது உலகத்தில் வாழ்ந்த விவசாயிகள், இந்த சட்டங்களால் தான் வீதிக்கு வந்திருக்கிறார்கள். ஆனால் அது அரசின் மூளைக்கு எட்டவில்லை.

விவசாயிகளின் போராட்டமும், டிராக்டர் பேரணியும் மத நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட பாஜகவின் ரத யாத்திரை போலல்லாமல், உரிமைக்கானதாக இருக்கிறது. மத நோக்கங்கள் மக்களை பிளவுபடுத்தும், உரிமைக்குரல் ஒன்றுசேர்க்கும். இந்துத்துவத்திலேயே ஊறித்திளைத்து பிற மதங்களுக்கெதிரான அடையாள அரசியல் மூலம் ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு, விவசாயிகள் மற்றும் தொழிலாளிகளின் பிரச்சினை புரியாததில் வியப்பில்லை. மார்ச் 2020ஆம் ஆண்டு, பொதுமுடக்கத்தால் ஆயிரக்கணக்கான கி.மீ நடந்த தொழிலாளர்களை கண்டுகொள்ளாததிலிருந்தே அது தெளிவாகத் தெரிகிறது.

இது எவ்வளவு சிரமமான போராட்டம் என்பது விவசாயிகளுக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவர்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த ஜனநாயகத்தின் போலித்தன்மை மற்றும் அரசின் கொள்கைகளை தோலுரித்து வருகிறது என்பது உண்மை.

 

கட்டுரையாளர் ரவி ஜோஷி, மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் அதிகாரி

(www.thewire.in இணையதளத்தில் ரவி ஜோஷி எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்