Aran Sei

அழகர் கள்ளழகராக மாறியது எதனால்? – சூர்யா சேவியர்

தங்கள் உருவாக்கிய கடவுள்களை எதிர்த்து, உழைக்கும் மக்களின் கலகக்குரலில் எழுந்ததே கள்ளழகர். தங்களின் வழிபாட்டு முறைகள் அவமதிக்கப்படும் பொழுதும், வழிபாட்டு உரிமைகள் நிராகரிக்கப்படும் பொழுதும், தங்களின் வழிபாட்டுக்குரிய தெய்வங்கள் புறக்கணிக்கப்படும் பொழுதும், எதிர்த்துப் போராடிய வரலாறு இங்கு ஏராளம். அதில் ஒன்று கள்ளழகர்.

வேதங்களின் நாடா இந்தியா? வரலாற்றைத் திரிக்கும் இந்துத்துவாவினர் – சூர்யா சேவியர்

வைணவர்களின் பாண்டிநாட்டு திருப்பதிகளில் ஒன்று திருமாலிருஞ்சோலை.இங்கு எழுந்தருளி இருப்பவர் சுந்தரராஜ பெருமாள். மதுரையிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமாலிருஞ்சோலையிலிருந்து (அழகர் கோவில்) ஒவ்வொரு ஆண்டும் சுந்தரராஜப்பெருமாள், வைகை ஆற்றில் எழுந்தருளி, மண்டூக முனிவரின் சாபத்தைப் போக்கி திரும்புவதாக ஐதீகம். இதுவே சித்திரைத் திருவிழாவாக நடக்கிறது.

உடைமை வர்க்கத்தின் பெருந்தெய்வமான சுந்தரராஜப்பெருமாள் தன்னுடைய ஐதீகக்கோலத்துடன் அழகர் கோவிலிலிருந்து புறப்பட்டு மதுரை வருவதில்லை.ஒரு கையில் வளரித்தடி, மற்றொருகையில் சாட்டைக்கம்பு, தலையில் கொண்டை, காதில் கல்வைத்த கடுக்கண், அரைக்கால் அளவும், இடுப்புக்கு மேலேயும் கருப்பு நிற ஆடை என கள்ளர் கோலத்தில்தான் அவர் மதுரை வருகிறார்.

முருகன் சுப்ரமணியன் ஆன கதை – சூர்யா சேவியர்

அதே நேரத்தில் கள்ளர் கோலத்துடன் மதுரைக்குள் நுழைவ தில்லை. தல்லாகுளம் வந்தவுடன், கள்ளர் கோலத்தைக் கலைத்துவிட்டு, பெருந்தெய்வ வேடமணிந்து வைகை ஆற்றுக்குச் செல்கிறார். அதேபோல் தல்லாகுளம் வரை வந்து, மீண்டும் கள்ளர் வேடமணிந்து அழகர்கோவிலுக்குத் திரும்புகிறார்.

வைதீக சமயமரபில் பெருந்தெய்வமொன்று, கீழ்சாதியொன்றின் பழக்கவழக்கத்தின்படி வேடமணிந்து கீழிறங்கிப் பவனிவருவது வேறெங்கும் இல்லாத, சாஸ்திரங்கள் அனுமதிக்காத ஒரு முக்கிய நிகழ்வாகும்.ஏன்?எப்படி?

கஜினி முகம்மதும் சோமநாதபுர படையெடுப்பும் – சூர்யா சேவியர்

மதுரைக்கும், அழகர்கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதி, கள்ளர் இனமக்கள் அதிகமாக வாழ்ந்த மேலூர் கள்ளர் நாட்டுப் பகுதியாகும்.தங்கள் பகுதியில், தங்களுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத, வழிபடாத, முன்பின் பார்க்காத பொன்னால் செய்யப்பட்ட விக்கிரகங்கள் தூக்கிச் செல்லப்பட்டபோது, அதை மறிக்கவும், தங்கத்தைக் கொள்ளையடிக்கவும் செய்தனர் மேலூர் நாட்டுக்கள்ளர்கள்.

மதுரையை ஆண்ட நாயக்கர்களால், கள்ளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. வேறு வழியின்றி கள்ளர் இனமக்களோடு ஒரு சமரச ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி உழைக்கும் மக்களின் சாமி போல வேடமணிந்துதான் கள்ளர் நாடு முழுமையும் பெருமாள் வர வேண்டும். இல்லையேல் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றனர். அதன்படியே முடிவானது.

“தென்னாடுடைய சிவனும் நந்தனை எரித்த நெருப்பும்” – சூர்யா சேவியர்

சக்ராயுதம் கழட்டப்பட்டு, உழைக்கும் மக்களின் ஆயுதமான வளரியைக் கையில் ஏந்திக்கொண்டபின் தான் வைணவக்கடவுள் வைகை நோக்கி வர முடிந்தது. இதுதான் இன்றளவும் நடக்கிறது. இதில் வேடிக்கை என்ன தெரியுமா?

ஆகமங்களின் படியும், பிரம்ம புராணத்தின் படியும் ஒரு தெய்வத்திற்கு வேறொரு தெய்வத்தின் மந்திரத்தை உச்சரித்தாலே தீட்டு. அந்தத் தீட்டை நீக்க சம்ரோஷன சடங்கு செய்யப்பட வேண்டும். ஆனால் இங்கு உருவமே மாற்றப்பட்டு விட்டது. அதுவும் கீழ்சாதி உருவம்.

வைகையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோவிலுக்குச் செல்வார். அங்கு அவரை கோவிலுக்கு உள்ளே உடனே கொண்டு செல்லாமல் விளக்குமாற்றால் அடிப்பார்கள் பார்ப்பனர்கள். ஒரு கடவுளையே விளக்குமாற்றால் அடிக்கக் காரணம் யாதெனில், அவர் கீழ்சாதி கள்ளர் வேடம் போட்டதால் தீட்டைக் கழிக்கிறார்களாம்.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

அதிகாரமும், ஆட்சி பீடமும், தங்கள் பண்பாட்டை, சமயமரபை, அழிக்க முயலும்போது உழைக்கும் மக்கள் போராடுகின்றனர். பார்ப்பனியம் அதற்காகத் தனது கொள்கையில் சமரசமும் செய்து கொள்ளும். ஆனால் தீட்டு தீட்டுதான் என்பதிலும் உறுதியாய் இருக்கும். கள்ளர் இனமக்களின் போர்க்குரலின் அடையாளமே கள்ளழகர்.

அழகர் கோவிலிருந்து வரும் பெருமாள் லுங்கி கட்டி, துலுக்கச்சி நாச்சியார் வீட்டில் ஓரிரவு தங்குகிறார். யார் துலுக்கச்சி நாச்சியார்? துலுக்கச்சி நாச்சியாருக்குப் பார்ப்பனியம் சில கதைகள் சொல்லும். ஆனால் துலுக்கச்சி நாச்சியாருக்கு தனி வரலாறு உண்டு. நான் எழுதி விரைவில் வெளிவர இருக்கும் “காவிரி நீரோவியம்” என்ற புத்தகத்தில் வரலாற்று ஆதாரத்துடன் விரிவாகத் தருகிறேன்.

கோவில்களை பார்ப்பனர்களிடம் ஒப்படைக்க கோரும் சதி – சூர்யா சேவியர்

இதில் முக்கியமான விசயம் ஒன்று உண்டு. மீனாட்சி கல்யாணத்திற்காக அவர் வருகிறார் என்பது நாயக்கர்கள் காலத்தில் செய்யப்பட்ட இடைச் செருகல் தான்.மீனாட்சி திருமணம் தனிக்கதை. மண்டூக முனிவரின் சாபம் போக்குவது தனிக்கதை. சைவ-வைணவ மோதலைச் சமரசம் செய்ய நாயக்கர்கள் காலத்தில் இரண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டது.

மீனாட்சி (பார்வதி) யை மடியில் வைத்தே, சிவனுக்குத் திருமணம் செய்து கொடுக்கிறார் பெருமாள். இந்தச் சிலை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ளது. பிறகு எப்படி அழகர் (பெருமாள்) கோவித்துக் கொண்டு செல்ல முடியும்?

தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

இதைவிட அடுத்த முக்கியமான விசயம் இதுதான், அழகர் கோவில் பெருமாள் கோவில் அல்ல. ஆதியில் புத்தர் கோவிலே. பேராசிரியர் தொ.பரமசிவன் எழுதி, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அழகர் கோவில் வரலாறு என்ற ஆய்வு நூலைப் படியுங்கள். இன்றைய பெருமாள் வேறு யாருமல்ல. புத்தரே. புத்த விஹார்கள் இடிக்கப்பட்டும், மாற்றப்பட்டும் நிலை கொண்டுள்ள இடங்களே இன்றைய பெருமாள் கோவில்கள்.

(கட்டுரையாளர் சூர்யா சேவியர் ஒரு எழுத்தாளர் மற்றும் செயல்பாட்டாளர். தமிழ்நாடு அரசின் ‘சொல்லின் செல்வர்’ விருது பெற்றவர்.)

இளையராஜாவின் அம்பேத்கர் – மோடி ஒப்பீடு சரியா?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்