ரிபப்ளிக் தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு வழங்கிய இடைக்கால ஜாமீனை நீட்டிப்பு செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அன்வய் நாயக் என்பவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ரிபப்ளிக் டிவியின் முதன்மைச் செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி நவம்பர் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திலேயே உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவைச் சமர்ப்பித்து, இடைக்கால ஜாமீன் பெற்றார்.
இன்று, அந்த வழக்கில் அர்னாபுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது, இந்தியாவில் நிலுவையில் இருக்கும் பல ஜாமீன் வழக்குகளை நீதி அமைப்புகள் விசாரிக்க வேண்டியதன் அவசியத்தைக் குறித்து நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு விரிவாகப் பேசியுள்ளது.
நீதிபதி கிருஷ்ண ஐயரின் குறிப்புகளை மேற்கோள் காட்டிய நீதிபதிகள் அமர்வு, நம்முடைய குற்றவியல் நீதித்துறையின் அடிப்படை விதியே “பெயில் (ஜாமீன்) தான், ஜெயில் அல்ல” என்பதே என்று தெரிவித்துள்ளது. மாவட்ட நீதிமன்றங்களும் உயர் நீதிமன்றங்களும் இதையே நடைமுறையாக்க வேண்டும் என்று கூறியுள்ள நீதிபதிகள் உச்சநீதிமன்றம் தலையிடும்படி நீதிமன்றங்கள் தங்கள் கடமையை மறக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர்.
மாவட்ட துணை நீதிமன்றங்கள், அதிகார நிலையினால் கீழ் நீதிமன்றங்களாக இருக்கலாம். ஆனால், குடிமக்களின் வாழ்க்கைகளிலும் அவர்களுக்கு வழங்கப்படும் நீதியின் அடிப்படையிலோ அவை கீழானவையாக இருப்பதில்லை. கீழ் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுக்கும் போது, அந்தச் சுமை உயர் நீதிமன்றங்களுக்கு வருகிறது. உயர் நீதிமன்றங்கள் ஜாமீன் மறுக்கும் போது அந்த வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு வருகிறது.
உயர் நீதிமன்றங்களுக்குச் செல்ல வசதியில்லாத பாமர மக்கள், விசாரணை நடத்தப்படாமல் துவண்டு போகிறார்கள். சிறைகளிலும், காவல் நிலையங்களிலும் மனித மாண்பைக் காக்க யாரும் இல்லாததால், அதைச் செய்ய நீதிமன்றங்கள் உயிர்த்து இருக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சுதந்திரம் என்பது சிலருக்கு மட்டுமேயான பரிசு கிடையாது என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
சில தினங்களுக்கு முன்னர், பீமா கோரேகாவுன் வழக்கில் கைதாகியிருக்கும் வரவர ராவின் (80) உறவினர் வேணுகோபால் ராவ், நீதித்துறை அர்னாப் கோஸ்வாமியையும், வரவர ராவையும் நடத்துவதில் இருக்கும் அப்பட்டமான பாரபட்சங்களைக் குறித்து தி வயர் இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
வரவர ராவிற்கு இரண்டு வருடங்களாக ஜாமீன் அளிக்கப்படாமல் இருப்பதையும், அர்னாப் கோஸ்வாமிக்கு ஒரு வார காலத்திற்குள் ஜாமீன் வழங்கப்பட்டது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
பீமா கோராகாவுன் வழக்கில் கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அறிவுஜீவிகள், கடந்த இரண்டு வருடங்களாக முறையான ஜாமீன் மற்றும் விசாரணை இல்லாமல் சிறையில் உள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 83 வயதான ஸ்டான் ஸ்வாமி, பார்கின்சன்ஸ் குறைபாட்டால் (நடுக்கவாதம்) பாதிக்கப்பட்டிருப்பவர். உடல் நடுக்கம் காரணமாக தண்ணீரை உறிஞ்சுக் குடிக்க உறிஞ்சுக் குழல் (Straw) மற்றும் உறிஞ்சுக் குவளை (Sipper bottle) வேண்டும் என்று கோரி அவர் தாக்கல் செய்த மனு மீது ஒரு மாதமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதுவரை அவருக்கு உறிஞ்சுக் குழலோ, உறிஞ்சுக் குவளையோ வழங்கப்படவில்லை.
முன்னதாக, அர்னாப் கோஸ்வாமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை மறுநாளே அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொண்டதைக் கேள்வி எழுப்பி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் துஷ்யந்த் தவே, நீதிமன்றச் செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதையும் மீறி வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், நீதிமன்றம் அர்னாபுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கியது.
நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையை விமர்சித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த நகைச்சுவை கலைஞர் குணால் கம்ரா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.