Aran Sei

‘நீதிமன்றத்தை நாங்கள் நம்பவில்லை’ – ‘இங்கிருந்து ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்’ – விவசாயிகள் உறுதி

Image Credits: Al Jazeera

லிமையான அரசை எதிர்த்து, ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்திவரும் விவசாயிகள், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, போராட்டக்களத்தை விட்டு ‘ஒரு அங்குலம் கூட நகர மாட்டோம்’ என்று உறுதியாக கூறியுள்ளனர்.

விவசாய சட்டங்களை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்த பிறகு, டெல்லியின் எல்லையான சிங்குவில் செவ்வாய் கிழமையன்று விவசாய பிரதிநிதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அகில இந்திய கிசான் சபையின் உறுப்பினர் பல்ஜித் சிங் “உச்சநீதிமன்றத்தின் கருத்து குறித்து எங்களுக்கு சொல்வதற்கு எதுவும் இல்லை. அது நீதிமன்றத்திற்கும், அரசுக்கும் இடையிலானது. சட்டங்களை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் தொடரும். தொடக்கம் முதல் இதுவே எங்களின் ஒற்றைக் கோரிக்கையாக உள்ளது” என்று கூறினார்.

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஜக்ரூப் சிங், “சட்டங்களை திரும்ப பெற்றால் பரவாயில்லை. ஆனால் இது ஏதோ போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு செய்யப்பட்ட தந்திரமாக தோன்றுகிறது. நாங்கள் எல்லோரும் கலைந்துசென்றுவிட்டால், இதுபோன்று மீண்டும் ஒன்றுகூடி போராடுவது இயலாத காரியம். ஏனென்றால், லத்தியில் நடத்தப்பட்ட தாக்குதல்களையும், தண்ணீர் பீரங்கிகளையும் கடந்து நாங்கள் இங்கு வந்துள்ளோம்” என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, எங்களுக்கு வழங்கப்பட்ட “சாக்லேட்” என்றும், வீட்டை விட்டு புறப்படும்போது, விவசாய சட்டம் திரும்பபெறப்பட்ட பிறகே வீடு திரும்புவோம், என்ற உறுதியுடன் கிளம்பியதா, குர்மீத் சிங் என்ற விவசாயி கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராடும் விவசாயிகளை இங்கிருந்து அகலச் செய்வது, பிரதமர் நரேந்திர மோடி, சட்டங்கள் திரும்ப பெறப்பட்டன என்று கூறுவதில்தான் உள்ளது என்று மற்றொரு விவசாயி கூறியுள்ளார்.

“அவர்கள் ஜனவரி 26 ஆம் தேதி, நாங்கள் நடத்தவுள்ள பேரணியை (டிராக்டர் பேரணி) யோசித்து பயந்துள்ளனர். அதற்காகவே எங்களை இங்கிருந்து அப்புறப்படுத்த நினைக்கின்றனர்” என்று மன்ஜீத் சிங் என்ற விவசாயி தி இந்து -விடம் கூறியுள்ளார்.

விவசாயிகள் போராட்டத்தில் ‘தீவிரவாதிகள்’ என மத்திய அரசு குற்றச்சாட்டு – பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய தலைமை நீதிபதி உத்தரவு

“உச்சநீதிமன்றம் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. பெண்களையும், குழந்தைகளையும் வீட்டுக்கு அனுப்புங்கள் என்று அரசு கூறிவந்தது. இன்று நீதிமன்றமும் அதைத்தான் கூறியுள்ளது. இதிலிருந்து, அவர்கள் இருவரும் திரைக்குப் பின்னால் பேசிவருவது தெரிகிறது” என்று கூறியுள்ள டல்ஜீத் சிங் என்ற விவசாயி, கமிட்டி அமைக்க வேண்டும் என்ற அரசின் யோசனையை உச்சநீதிமன்றம் உத்தரவாக பிறப்பித்துள்ளதாக கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

65 வயதான முன்னாள் ராணுவ வீரர் ஹர்தேவ் சிங் “20 ஆண்டுகளாக வெளிநாட்டு சக்திகளுக்கு எதிராக சண்டையிட்டேன். இன்று உள்நாட்டு சக்திகளுக்கு எதிராக சண்டையிடுகிறேன். இது சண்டையிடும் வயதா? ஆனால் என்ன செய்ய முடியும்?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விசாயிகள் மத்தியில் பேசிய போராட்டக் குழு உறுப்பினர்கள் “நாம் வெற்றியின் வாசலை நெருங்கிவிட்டோம். நம்பிக்கையை இழக்க வேண்டாம்” என்று கூறியுள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்