Aran Sei

தமிழகத்தின் நிதி நிலை கடுமையாக மோசமடைந்துள்ளது – 15வது நிதி கமிஷன் அறிக்கை

credit : wikipedia

2012ஆம் ஆண்டு தொடங்கி, தமிழகத்தின் நிதிநிலை தொடர்ந்து மோசமடைந்து வந்துள்ளதாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 15வது நிதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், “நிதி உபரி” மாநிலம் என்பதிலிருந்து “நிதி பற்றாக்குறை” மாநிலமாக மாறியுள்ளது என்று, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் மொத்த உற்பத்தியில் கடனின் விகிதம், 2012 ஆம் ஆண்டு 17.2 சதவீதமாக இருந்தது, 2018ஆம் ஆண்டு 22.6 சதவீதமாக உயர்ந்துள்ளதாக, நிதி கமிஷன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டம்: தமிழகத்தில் நடந்த ரூ.110 கோடி ஊழல்

அந்த அறிக்கையின் படி, தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறைக்கு விகிதம், சமீப ஆண்டுகளில், 50 சதவீதத்தை நெருங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசால் வாங்கப்படும் கடனில் பெரும் தொகை, முதலீட்டு செலவிற்கு பயன்படுத்தாமல், வருவாய் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு பயன்படுத்தப்படுவதாக நிதி கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் முதலீட்டு செலவுகள் (சாலைகள் அமைப்புது போன்ற உட்கட்டமைப்பு பணிகள்), மொத்த மாநில உற்பத்தியுடன் ஒப்பிடும் போது, அதன் விகிதம்  தொடர்ந்து சரிந்து வந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முக்கிய வருவாய் ஆதராங்களான மதிப்புக் கூட்டு வரி, முத்திரைத்தாள் வரி, பதிவுத்துறை வரி மற்றும் கலால் வரி வசூல், 2014 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் குறைந்த அளவே வளர்ச்சியடைந்துள்ளதாக நிதி கமிஷன் தெரிவித்துள்ளது.

தமிழக ஆளுநர் உரை – ” அதிமுகவின் இரட்டை வேடம்; காவு கொடுக்கப்படும் மாநில உரிமைகள் “

ஆகவே, தமிழக அரசு, கடன் பெறும் தொகையை, நிதி பற்றாக்குறையை சமாளிக்க பயன்படுத்துவதை தவிர்த்து, முதலீட்டு செலவுகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள நிதி கமிஷன், வருவாயை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.

தமிழகத்தில் மீன்வளத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில், வருவாய் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கூறியுள்ள நிதி கமிஷன், 1,076 கி.மீ நிளத்திற்கு கடற்கரையை வைத்துள்ள தமிழகம், அதை விட குறைந்த அளவு கடற்கரையை வைத்துள்ள ஆந்திராவை விட, மீன்வளத்துறையின் மூலம் குறைவாகவே வருவாய் ஈட்டுவதாக தெரிவித்துள்ளது.

நிதி நிலை மோசமடைந்து வந்தாலும், வறுமை ஒழிப்பு, சுகாதாரம், நீடித்த வளர்ச்சி, சிறந்த கல்வி ஆகியவற்றை வழங்குவதில் தமிழகம் சிறந்து விளங்குவதாக, 15வது நிதி கமிஷன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்