Aran Sei

சிங்காரவேலர்: தொழிலாளர் வர்க்க மாவீரன் – பேரறிஞர் அண்ணா

பொதுவுடமைவாதி, சென்னையில் நாத்திக மாநாடு நடத்திய சுயமரியாதைக்காரரான சிங்காரவேலரை தம்வயப்படுத்த பாஜகவினர் சிங்காரவேலரை தன்வயப்படுத்த அவரது பிறந்தநாளிலும், நினைவுநாளிலும் அவருக்கு மரியாதை செலுத்துவதை சடங்காக செய்கின்றனர்.

சிங்காரவேலரின் சிந்தனை என்னவாக இருந்தது? பாஜக, சங் பரிவார அமைப்புகளுக்கு சிங்காரவேலர் நட்பு சக்தியாக இருக்க முடியுமா? என்பதை உணர்ந்து தெளிய அவரை கற்பதுதான் எளிய வழி.

அதன் பொருட்டு சிங்காரவேலர் குறித்து பேரறிஞர் அண்ணா எழுதி மீன்பிடிப்போர் சங்கத்தின் திருவல்லிக்கேணி கிளை சார்பாக ஜூலை 1949ல் நூலாக வெளியிடப்பட்டது. அந்த கட்டுரையை, வாசகர்களுக்கு அரண்செய் மீள்பிரசுரம்  செய்கிறது

சிந்தனைச் சிற்பி தோழர் ம. சிங்காரவேலர் இறந்து விட்டார்; இலட்சியமே மூச்சாகக் கொண்டிருந்த வீரர் மறைந்துவிட்டார். இந்தியா உப கண்டத்தின் முதல் பொது உடைமைவாதி காலமானார், மூன்றாவது சர்வ தேச அபேதவாத அங்கத்தினர் மூவர்; இந்தியாவில் அவர்களில் ஒருவர் இவர். அப்படி ஒருவர் இருந்தாரா என்று கேட்கும். “கதர் ஜிப்பாக்களும்,” “காரல் மார்க்ஸ் படிப்போரும் ஏராளம்.” சோவியத்திலே பொது உடைமை ஆட்சி ஸ்திரமாவதற்கு முன்னாலேயே, இங்கு சென்னையிலே, கடலோரத்தில், மயிலையில் ஒரு புரட்சி வீரர் உலவிக்கொண்டிருந்தார். உலகிலே காணப்படும் கொடுமைகளைக் கண்டு, மனதிலே கோபம் அலை அலையாகக் கிளம்பி, அதனால் தூண்டப்பட்டு, யாரும் அதுவரையில் கேட்டறியாத கொள்கையை, பொது உடைமைத் தத்துவத்தைப் புரட்சிக் கனலுடன் கலந்து அளித்து வந்தவரே, தோழர் ம. சிங்காரவேலர் என்பதை, அவர்கள் அறியார்கள் தேசியத் தொழிலாளர் இயக்கங்களிலே அவர் பிரபலராக இருந்த சிலபல வருஷங்களிலே கூட, அவருக்கு உரிய ஸ்தானம் அவருக்கு அளிக்கப்படவில்லை, அவருடைய அறிவும் ஆற்றலும் அளவிடப்படவில்லை வெட்டுக்கிளி களும், பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில், புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் – மறக்கும்படிச் செய்யப்பட்டனர்.

அவருடைய திறமை, அறிவு, ஆற்றல், தியாக புத்தி ஆகியவைகளை அளவாகக் கொண்டு, மதிப்பிட வேண்டுமானால், தோழர் ம. சிங்காரவேலருக்கு லெனின், டிராட்ஸ்கி, சக்லத்வாலா போன்றவர்களின் வரிசையிலே இடந்தர வேண்டும் ஆனால் கந்த புராணம், காந்தி புராணம் படிக்கும் இருவகையினரையும் போற்றிப் புகழ்ந்த மக்கள், இந்த ஒப் பற்ற புரட்சி வீரனை. சாமான்யமாகக் கருதினர். நாளாவட்டத்திலே. சில இலட்சியவாதிகளுக்குத் தவிர, மற்றவர்களுக்கு அவருடைய பெயரும் மறந்து விட்டது என்று கூறிவிடலாம். தோழர் ம. சிங்காரவேலரே, ஏகாதிபத்தியத்தால் தாக்கப்பட்ட முதல் வீரர் ஆனால் முப்புரி இல்லாத காரணத்தால் மங்கினார். அவருடைய பெருமைப் பாக்கள், படத் திறப்பு விழாக்கள், இல்லை! இராது அவர் ம. சிங்காரவேலுச் செட்டியார், பரதவர் குலம், (மீன் பிடிப்போர்) நெய்தல் நிலகாயகன்: சிங்காரவேல் சர்மாவாக இருந்திருந்தால் அவருடைய சிலையை மாஸ்கோவிலே நிறுவ வேண்டும் என்று மயிலை கூறும்.

ம. சிங்காரவேலர் மறைந்தார் என்ற போதிலும் எதிர்பாராத திடுக்கிடக்கூடிய விதத்திலே நேரிட்ட மரணமல்ல. மரணத்தின் போது அவர் தம் முடைய உழைப்பு வீண் போயிற்றோ என்ற சந்தேகம் கொண்டு சஞ்சலமடைந்திருக்கவும் மாட்டார். ஏனெனில் 11-2-46-ல் அவர் இறக்கும் பொழுது அவருக்கு வயது 84. அவருடைய இரண்டு அடிப்படை இலட்சியங்களாகிய சுயமரியாதை, சமதர்மம் என்பவை, ஒங்கி வளர்ந்திருப்பதைக் கண்ட பிறகே அவரின் கண்கள் மூடின. சுயமரியாதையும், சமதர்மமும் வேறு வேறு கட்சிகளாக இருப்பானேன், அது முறையல்வவே, படை பலமே சிதறுமே என்ற கவலை மட்டும் அவருக்கு இருந்தது என்று கூறலாம். அதுவன்றி, அவருடைய பெயர் மங்கியது பற்றி நாம் மனம் வருந்துகிறோமேயன்றி அவர் அது பற்றி எண்ணியிருப்பார் என்றோ, ஏங்கி இருப்பார் என்றோ எண்ணவில்லை அந்த அஞ்சா நெஞ்சனுக்கு ’பூர்ஷுவா’ உலகில் மதிப்புக் கிடைக்காது; கிடைக்கவில்லை கிடையாததே அவருடைய மாத்துக் குறையவே இல்லை என்பதற்குச் சிறந்த அடையாளமுங்கூட

இந்திய உபகண்டம், ஏகாதிபத்திய இரும்புப் பிடியிலே சிக்கியது கண்டு, எழுச்சி பெற்று எதிர்த்த முன்னணி வீரர் வீரர்களில் ம. சிங்காரவேலர், முதல் வீரர்

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரிடையாகக் கிளம்பிய சிப்பாய்க் கலகம் 1857-ல் நடந்தது. சிறுவன் சிங்காரவேலனுக்கு, அந்த கலகம் காலத்துச் சம்பவங்களையே, வீட்டாரும், ஊராரும். கூறியிருப்பார்கள், பொழுது போக்குக்கோ, மிரட்டவோ, எக்காரணத்துக்காகவோ கம்பனிக்காரனைச் சிப்பாய்கள் எதிர்த்தனர். எதிர்த்தவர்களை வெள்ளக்காரர்கள் சுட்டனர் என்று அவ்வயதிலே அவர் கேள்விப்பட்டிருப்பார். நமது காலத்தைப் போல, கவர்னர் ஜெனரலின் கனிவு – கோகலேயின் தெளிவு – முதல் சீர்திருத்தத்தின் அழகு என்பன போன்றவைகளை அல்ல, அவர் சிறு வராக இருக்கும் போது கேட்டது. நாம், அடிமைத் தனத்திலே நாடு அதிகமாக ஊறிப்போன காலத்திலே பிறந்தோம்; அவர் ஆங்கிலேய ஆட்சியை ஆயுத பலத்தால் தாக்கிய சிப்பாய்க் கலகம் சிறுவர் களுக்கான சிறு கதையாகப் பேசப்பட்ட காலத்திலே பிறந்தவர். 1862-ல், சிப்பாய்க் கலகம் அடங்கி ஐந்து ஆண்டுகள் ஆன பிறகு அவர் பிறந்தார் புயல் அடித்து ஓய்ந்தது. ஆனால் சாய்ந்து போன மரங்களிலே சில, பாதையிலே கிடந்தன! அப்படிப்பட்ட சமயத்திலே பிறந்தவர், சிங்காரவேலர்.  இறுதிவரையில்  அவரை பொறுத்தவரையில் 1857 தான். அவரைப் ஏகாதிபத்யம், முதலாளித்துவம், வர்ணாஸ்ரமம். மௌடீகம் இவைகளைத் தாக்கும் பேச்சுத்தான் அவருக்கு மேடையிலே மட்டுமல்ல, வீட்டில் ! பேச்சிலே மட்டுமல்ல பார்வையிலே அப்படித்தான்.

மிதவாத மணிகள் மயிலையில் பல ! தேசியக்  கனவான்களும் உண்டு. சிமான்கள் உண்டு ! சிங்காரவேலர் வழுக்கியிருக்தால் இதிலே எதில் வேண்டுமானாலும் தங்கிவிட்டிருக்கலாம். சட்டம் படித்தார். வக்கீல் ஆனார். ஆனால் எதற்கு? அன்னிய ஆட்சிக்காரன் சட்டம் தொகுப்பது, அதை நாம் படித்து வாதாடுவது என்பது அடிமைத்தனத்தின் சின்னம், என்று கூறி, அந்த வக்கீல் அங்கியை செருப்பிட்டுக் கொழுத்தினார்! கோர்ட்டை ஏற மறுத்து, மக்கள் மன்றத்திலே, வழக்கை எடுத்துரைதார் திறமையுடன். அவருக்கு ஜெர்மன், பிரஞ்சு, ரஷ்ய மொழிகளும் தெரியும்

இந்தியாவிலேயே விஞ்ஞான அறிவுக்கலை சம்பந்தமாகவும், பொதுவுடைமை சம்பந்தமாகவும் அதிகம் படித்தப் புரிந்துகொண்டு, அந்த அறிவைக்கொண்டு மற்றவர்களுக்கும் அவை புரியும்படியாகச் செய்த பெருமைக்குரிய இடத்தில் முன் வரிசையில் அவருக்கே முதலிடம் அளித்தாக வேண்டும் .

ஓயாத படிப்பு! உள்ளத்திலே வேதனை தரும் சகல பிரச்சனைகளுக்கும் காரண காரியம் தேடுவதிலேயே மிக கவலை எடுத்துக் கொண்டு உழைத்தார். நுனிப்புல் மேய்வது அவருக்குப் பிடிக்காது. பிரச்சனகளைப் பூசி மெழுகினால் ஆத்திரப் படுவார்! வீண் ஆரவாரத்தால் மக்களை மயக்கும் இயக்கங்களைக் கண்டிப்பார். கடலோரத்திலே. கடைசியில் தானொருவனே உலாவுவதானாலும் கொள்கையின் தோழமை ஒன்று இருந்தால் போதும் என்று கருதினார் ஏறக்குறைய, கடைசிக் காலத்தில் அவர் தனி மனிதர் போலவே நின்றார் அந்த முதியவர், எவ்வளவு உரமான, புரட்சிகரமான கருத்துகளைத் தாங்கிக்கொண்டு இருந்தார் என்பதை எண்ணும் போதே ஆச்சரியம் உண்டாகும்.

”பேய் பூதம் பிசாசு உண்டா?” என்று கேட்டு வேண்டியது தான். பேய் பூதம் பிசாசு என்ற சொல் எப்போது உபயோகத்திலே கொண்டுவரப்பட்டது என்பதிலிருந்து தொடங்கி, இன்று, பிறன்  உழைப்பைக்கொண்டு வாழ்பவனே உண்மையான பேய், எனகிற வரையிலே கூறிவிடுவார் சந்தேகங்களைத் தெளியவைக்கும் முறையிலே அவருடைய மனம், ஒரு சிறந்த அகராதியாக இருந்தது. அப்படிப்பட்டவரின் மறைவு. சர்வ சாதரணச் செய்தியாகிவிட்டது. இந்த நாட்டிலே எண்ணற்ற பத்திரிகைகள் இருக்கின்றன. அவற்றிலெல்லாம் இலட்சியவாதிகள் பேனாப் பிடித்துக்கொண்டு இருக்கின்றனராம்!

அவர் வீரர், தீரர், என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள். கிளர்ச்சிகள் அவருக்கு நிலாச் சோறு. சிறைவாசம் அவருக்குச் சகஜம். அவர் எதிர்ப்புக்கோ , எகாதிபத்தியத்தின் தாக்குதலுக்கோ அஞ்சினவருமல்ல, கும்பலோடு சேர்ந்து சிறைக்கூண்டு போனவருமல்ல. தேசியத்தின் பேரால் முதல் முதல் கைது செய்யப்பட்ட பெருமை லோகமான்ய திலகருக்கு என்பார்கள். ஆனால்,வ்பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் திலகரை தீண்டுவதற்கு முன்பே ம.சிங்காரவேலுவைத் தாக்கிவிட்டது. தேசிய ஆரவாரத்தினால் இந்த உண்மை மறைந்து பட்டது. கான்பூரில் பொதுவுடைமைக்காரர்கள் என்ற குற்றத்துக்காக, பிரிட்டிஷ் ஏகாதிபத்யம். தோழர் சிங்காரவேலுவையும், மௌலானா அசரத் மோகானியையும்தான் முதன் முதல் கைது செய்தது.

தொழிலாளர்கள் என்று ஒரு பிரிவினர் உள்ளனர் என்ற உண்மையையே, நாடு அறியும் படி முதலில் எடுத்துக் கூறிய பெருமையும், ம,சிங்காரவேலு உடையதாகும். இங்கிலாந்திலே தொழிலாளர் கிளர்ச்சி ஆரம்பமான போதே. இங்கு இவர். அத்தகைய கிளர்ச்சியைத் துவக்கினார்.

கூனன்போல் காணப்பட்ட இந்தியாவின் நிலையைக் கண்ட சிங்காரவேலு, முதுகெலும்பு வளைந்ததால், கூனி நடக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்பதைக் கண்டு பிடித்து. நாட்டுக்கு முதுகெலும்பு தொழிலாளரே என்பதை அறிந்து. அந்தத் தொழிலாளரின் விழிப்புக்காக வேலை செய்யத் தொடங்கினார். தொழிலாளர்கள், மதத்தின் பேராலும் அரசியலின் பேராலும். மௌடீகத்தாலும் அடக்கப்பட்டு வரும் கொடுமையைக் கண்டு கொதித்தார்.

அவருடைய அபார திறமை ‘ தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தின் போது நன்கு விளங்கிற்று. அது சமயம் அவர் பத்து ஆண்டு தண்டனை தரப்பட்டார்

ரயில்வே வேலை நிறுத்தம் நான்கு நாட்கள் வெற்றிகரமாக நடந்ததைக் கண்டு, ரயில்வே தலைமை அதிகாரி, ரயில்வே தொழிலாளர்களுடன் சமாதானத்திற்கு வருவதைத் தடுத்தவர்களும், தானும் தனது சகாக்களும் கடுந்தண்டனை பெற்றதி விருந்து தப்பி அப்பில் மூலம் முயன்ற காலத்தில், அதற்கு எதிராக இருந்தவர்களும், பெசண்டு அம்மையாரும் அவர் தம் சிஷ்ய கோடிகளும் தாம் என்பதைத் தோழர் சிங்காரவேலர் நன்கு உணர்ந்தார். ரயில்வே வேலை நிறுத்தத்தில், இந்நாட்டுப் ’பத்திரிகை ஜாதி’ செய்த பொய்ப் பிரச்சாரம் அன்றைய ஒரு வட்சம் தொழிலாளர் வாயில் மண் போட்டது என்பதற்கும், பின் தலை எடுக்க வேண்டிய கோடானு கோடி தொழிலாளரின் கண் விழிப்புக்குத் தடைக் கல்லாக இருந்தது என்பதையும் கண்ட பின்பே, அவர் இருந்தது மன மாறுதல் அடைந்தார். தொழிலாளர் சமூகம்  உண்மையாக நியாயம் பெறவேண்டுமானால், முதலாளிகளான வெள்ள முதலாளி, கருப்பு முதலாளி ஆகிய இவர்களின் பிடியினின்று விடுதலையாகுமுன், முதலாளிகட்கும். தொழிலாளிகட்கும் உண்மையில் துரோகிகளாக உள்ள போலித் தொழிலாளர் தலைவர்களும் அவர்கள் பத்திரிகைகளும் தொலைய வேண்டுமென்று எண்ணினார். அவர் தொழிலாளர் இயக்கத்திலிருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு வந்ததற்கு  காரணம் இதுவேயாகும்.

தோழர் சிங்காரவேலர் சிறந்த ஒத்துழை யாதார். நல்ல வரும்படி வந்த காலத்திலும், காந்தியத்தில் நம்பிக்கை வேலையை விட்ட, ஒரு சில சென்னை வக்கீல்களில் சிங்காரவேலர் முதன்மையானவர். காங்கிரசின் பேரால் வக்கீல் வேலையை விட்டு, பின்பு மீண்டும் கோர்ட்டுக்குப் போன வக்கில்களில் சிங்காரவேலர் சேர்ந்தவரல்ல. சிறந்த ஒத்துழையாதாராகவே இருந்தார். சென்னையில் பொதுமக்களின் பேரால் நடந்த பெரிய கிளர்ச்சிகள் நான்குஎன்று சொல்லலாம்.  சூளை மில் வேலை நிறுத்தம், பிரின்ஸ் சப்-வேல்ஸ் பகிஷ்காரம், சைமன் பகிஷ்காரம், கானாட்டுக் கோமகன் பகிஷ்காரம் என்பனவற்றில்முதல் மூன்றிலும் தோழர் சிங்காரவேலர் முதல் மூன்றிலும் பூரண பங்கெடுத்துக்கொண்டார். இதே காலத்தில் அமெரிக்காவில். சாக்கோ, வான் சிட்டி என்று இரண்டு பொது உடைமைத் தோழர்கள், பொது உடைமை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு எலக்ட்ரிக் மூலம் கொல்லப்பட்டார்கள்.. இச்செயலைக் கண்டிக்கச், சென்னை பீப்பில்ஸ் பார்க்கில் தோழர் சிங்காரவேலர் ஓர் பிரம்மாண்டமான கூட்டத்தைக் கூட்டினார். மாகாண சர்க்கார் பயந்து போலீஸ் படை முழுவதையும் அனுப்பி அந்த கூட்டத்தைப் பயமுறுத்தியது. அன்றைய கூட்டத் திற்குத் தலைமை வகிக்க ஒத்துக்கொண்டவரும், பிரசங்கம் செய்யச் சம்மதித்தவர்களும் போலீஸ் ஆர்ப்பாட்டத்தைக் கண்டு அஞ்சி அந்தப் பக்கமே வரவில்லை .

மனம் அலுத்த சிங்காரவேலர் தனியாகப் பீப்பில்ஸ் பார்க் பக்கம் வந்தார்.தன் நண்பர்கள் யாரும் வரவில்லையே என்பதற்காகப் பயந்து விடவில்லை. கூட்டமோ இவ்வளவு தட்புடலாகக் கூடாது என்று எண்ணி வந்த சிங்காரவேல் அங்கு கண்டதென்ன? பிரம்மாண்டமான கூட் டத்தையும், அதன் மத்தியில் ஒருவர் சமதர்மப் பாடல் பாடுவதையும், இரண்டு மூன்று இளைஞர்கள் மேடை மீது இருப்பதையும் கண்டார் தான் எதிர்பாராத சம்பவம் நடப்பதைக் கண்டு ஓர் சிறிய புன்னகையுடன் மேடையருகில் வந்து பார்த்தார். மேடை மீது இருந்தவர்கள் தனக்குப் புதிதாய் இருந்தாலும், அன்று தான் எடுத்துக் கொண்ட வேலைக்கு தனக்கு உதவியாக இருப்பதைக் கண்டு, ஆச்சரியப்பட்டார். கூட்டமே நடக்காது என்று எண்ணியவர் சென்னப் பொது மக்கள் இவ்வளவு போலீஸ் மிரட்டலையும் அலட்சியப்படுத்திக் கொடுமையாகக் கொல்லப்பட்ட இரண்டு – அமெரிக்கத் தொழிலாளர்களிடம் அனுதாபம் காட்டி, அவர்கள் கொள்கையை ஆதரிப்பதற்கு அறிகுறியாக இக்கூட்டம் கூடும்படி செய்த சென்னை பொதுமக்களைப் பாராட்டினார். இக் கூட்டத்தில் தான்  காலஞ் சென்ற சிங்காரவேலரின் கவனம் சுயமரியாதை இயக்கத்தின் பக்கம் திருப்பப்பட்டது. பட்டுக்கோட்டைத் தோழர் அழகர் சாமி சொன்னார்.

”செருப்புத் தைக்கும் சமூகத்திலும் மீன் பிடிக்கும் சமுகத்திலும் பிறந்த இரண்டு தொழிலாளர்கள் அமெரிக்க சர்க்காரால் தண்டிக்கப் பட்டார்கள் தொழிலாளர் சமூகம் விழிக்குமுன்பு இத்தகைய சம்பவங்கள் பல நிகழவேண்டும். நமது நாட்டுத் தொழிலாளர் உலகம் கண்விழித்து இத்தாலிய மீன்பிடிக்கும், தொழிலாளியான வான்சிட்டி இறந்ததைப்போல், நமது உண்மைத் தொழிலாளர் தலைவரான சிங்காரவேலர் இந்நாட்டு வான்சிட்டி யாக சர்க்காரால் தண்டிக்கப்பட்டு, அக்கூட்டத்தைக் காண ஆசைப்படுகிறேன்” என்று. இச்சொல் ஒன்றே சிங்காரவேலரைச் சுயமரியாதைக்காரனாக்கியது.

சுயமரியாதை இயக்கம் சமதர்மம், இந்நாட்டு மக்களுக்குத் தக்கபடி எடுத்துச் சொல்லி, மார்க்கீசம் என்பதன் பொருளாதார தத்துவத்தைச் சாதாரணமானவரும் உணரும்படி செய்த பெருமை இந்நாட்டின் இருவரையே சாரும். மற்ற மற்ற மாகாண மக்கள்  பொதுவுடமை தத்துவத்தை உணர்ந்திருப்பதற்கும், இம்மாகாண மக்கள் அதிலும் தொழிலாளர் இயக்கம் பொது உடைமையை உணர்ந்திருப்பதற்கும் இன்னும் ஏரானமான வித்தியாசம் உண்டு. மார்க்கிசத்தைக் கரைத்துக் குடித்து எவரும் எளிதில் உணரும்படி எழுதியும் பேசியும் வந்தவர்கள் பெரியார் இராமசாமி அவர்களும், தோழர் சிங்கார வேலருமேயாகும். தோழர் சிங்காரவேலர் சுயமரியாதை இயக்கம் வளருவதற்குப் பெரிதும் பாடுபட்டார். அவரின் உழைப்பை எந்தச் சுயமரியாதைக்காரனும் மறக்க மாட்டான்.

எல்லா மக்களும் இன்ப வாழ்வு பெற வேண்டுமென்ற சிறந்த இலட்சியமே அவருக்கு இது கிடைக்க விடாமல் தடுப்பது எதுவாக இருப்பினும் அதனைத் தவிடு பொடியாக்க வேண்டுமென்று அவர் துடித்தார்

ஏகாதிபத்தியம், மதவாதம் இரண்டுமே முடக்குவாத நோய்தான் சமுதாயத்துக்கு என்பதை அவர் எவருக்கும் அஞ்சாது கூறினார். அவருடைய தீவிரவாதத்தைக் கண்டு திகில் கொண்டவர்கள் அவரை நாத்திகர் என்று கூறினர் – அவர் அதனை ஏற்றுக் கொண்டார்: சென்னையில் நாத்திகர் மாாட்டையே நடத்தினார்; இந்தியாவிலேயே யாரும் செய்யாத காரியம் அது. மதத்தின் மீதும் கடவுளின் மீதும் பாரத்தைப் போட்டுவிட்டு பழி பாவத்திற்கு அஞ்சாமல், பாமர மக்களைக் கசக்கிப் பிழியும் வர்க்கத்தை நோக்கி, அந்த மாவீரர் கேட்டார்.

உலகில் உயிர்கள் படுந்துயரத்திற்கு யார் ஜவாப்தாரி ? பசுவைப் புலி பிடித்துத் தின்னவும். தேரையை பாம்பு பிடித்து தின்னவும் யார் கட்டளையிட்டார் ?  நோய், வறுமை, பஞ்சம் புயல் வெள்ளம் முதலிய இயற்கைச் சம்பவங்களால் மாந்தருக்கு எவ்வளவு இம்சை?

கடவுளை தயாபரன், சர்வ ரட்சகன், ஆபத் பாந்தவன், அன்பன் என்ற மாத்திரத்தில் இந்தக் கொடுமைகளை மறக்க முடியுமா? சமணர்களைக் கழுவில் ஏற்றினது கடவுள் பெயரால் அன்றோ ? கோடான கோடி பிசாசு பிடித்தவர்களென்று பெண் மக்களை அடித்துக் கொன்றது கடவுள் பெயரால் அன்றோ?  கிருஸ்தவரும், முஸ்லீமும் கோடி கோடியாக 500 வருட காலம் கொடும் போரில் மாண்டது சாமி பெயரால் அன்றோ? சாமி பெயரால் எத்தனை கோயில்கள் கட்டிடங்கள் இடிந்தன, எத்தனை நாடுகள், நகரங்கள் நாசமாயின?

இவ்விதமாக எதிரி திணரும்படியான கேள்வி களைப் பச்சை பச்சையாகக் கேட்பார் ம.சிங்காரவேலர். அவரும் மனப்பண்பிலும், மதியூகத்திலும் அவருடைய இணையாக இருந்த பெரியாரும் ஒன்று கூடி, சுயமரியாதை இயக்கத்தை நடத்திய போது நாடே  அதிர்ந்தது. சர்க்காரும் கடுங்கிற்று என்று கூறலாம். காசியில் சிக்கிக்கிடந்த மக்களை அவர்கள் கைபிடித்து மாஸ்கோவுக்கு அழைத்தனர்.

நான் கடைசியாகக் கண்டேன்

நான் கடைசியாக மேலே குறிப்பிட்ட அவருடைய அருங்குணத்தை விளக்கக்கூடிய ஒரு  சம்பவமாகவே இருந்தது. இரண்டு முதியவரும், பெரியார் இராமசாமியும், தோழர் சிங்காரவேலரும் ஒரே மேடையிலே உட்காரந்திருந்தனர். 20…6…43 செயிண்ட் மேரி மண்டபத்தில், அன்று அங்கு தீண்டாமை ஒழிப்பு நாள்!

தளர்ந்த உடல், தள்ளா டும் நடை, நரைத்த தலை, இக்கோலத்திலே இருந்தார் ம.சிங்காரவேலு. தீண்டாமை ஒழிப்பு தினம் என்று கேள்விப்பட்டதும் அவர் “தள்ளாமை”யயும் மறந்து, அங்கு வந்திருந்தார். பாட்டாளி மக்களின் சுயமரியாதைக்காகவும் சுகவாழ்வுக்காகவும் போராடிய அந்தப் புரட்சி வீரரை அன்று நான் கடைசி முறையாகக் கண்டேன். அவர் மறைந்தார் என்ற செய்தியைக் கேட்டேன் திடுக்கிடவில்லை, ஆனால் திகைத்தேன். இனி அத்தகைய ஓர் மாவீரன் கிடைப்பாரா என்று. மறைந்த மாவீரருக்கு நமது மரியாதையைச் செலுத்துவோமாக. அவர் வகுத்த வர்க்கம் பழுதுபடாதபடி பாதுகாத்து. அவருடைய இலட்சியமாகிய மக்கள் ஆட்சி மலர்வதற்காக, நாமும் உழைப்போமாக என்று மாவீரரை மதிப்போரெல்லாம் உறுதிகொள்வார்களாக.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்