Aran Sei

செம்பரம்பாக்கம் ஏரி : பீதியைக் கிளப்பும் ஊடகங்கள்

முழுப் பொய்யை விட அரை உண்மை மிகவும் ஆபத்தானது என்று தமிழில் சொலவடை ஒன்று இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டால் சென்னைக்கு பெரு வெள்ள ஆபத்து என்று 2015 பேரிடரை நினைவுபடுத்தி பீதியை கிளப்புகின்றன பல ஊடகங்கள்! அவசர கதி சமூக ஊடக ஆர்வலர்களும், தனிமனிதர்களும் இந்த பீதியை ஊதி பெருக்குகின்றனர்.

சென்னைக்கு குடிநீர் அளிக்கும் நான்கு ஏரிகளும் ஓரளவு நிரம்பி விட்டன. ஆனால் வடகிழக்கு பருவக் காற்றால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் பெய்த மழையால் அவை நிரம்பவில்லை. சில வாரங்களுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் புயல் வீசியதால் பெரு மழை பெய்து அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின. தெலுங்கு கங்கை -கிருஷ்ணா குடிநீர்- ஒப்பந்தப்படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய 4 TMC குடிநீர் தொடர்ந்து கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து திறந்து விடப்பட்டு பூண்டி நீர்தேக்கத்திற்கு வருகிறது.

இங்கு சேமிக்கப்பட்டது போக மிகுதியாக உள்ள நீர் செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரி, சோழவரம் ஏரிக்கு கால்வாய்கள் மூலம் அனுப்பப்பட்டு இந்த ஏரிகள் போதுமான அளவு நிரம்பி உள்ளன என்பதுதான் உண்மை. வடகிழக்கு பருவ மழை இப்பொழுதுதான் தொடங்கி உள்ளது. பொதுப்பணித்துறை அறிவிப்பு படி அதன் கட்டுப்பாட்டில் உள்ள ஆயிரம் ஏரிகளில் வெறும் 67 ஏரிகள் மட்டும்தான் நிரம்பி உள்ளன.

2015 சென்னை பேரிடருக்கு, அடையாறு பெருவெள்ளத்திற்கு, பல காரணங்கள் இருக்கின்றன. அதில் ஒரு சிறிய பங்குதான் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்பட்டு அடையாற்றில் கலந்த உபரி நீர்!

நீர் மேலாண்மை இன்மை, கழிவுநீர்-வடிகால் மேலாண்மை இன்மை, கார்ப்பரேட் பெருமுதலாளித்துவ திட்டமிடல் குளறுபடிகள், அதிகார திமிர் இன்னும் பலவும் இணைந்ததுதான் 2015 சென்னை பேரிடர்!

இதை படிப்பினையாகக் கொண்டு இந்த ஐந்து ஆண்டுகளில் அடையாறு கரைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பெருமளவு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டு விட்டன. நீர் தேங்காமல் படிப்படியாக வடியும் வகையில் வடிகால்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. அதனால் பெருமழை பெய்தாலும் 2015 மீண்டும் திரும்ப வர வாய்ப்பு மிக மிக குறைவு!

பொதுவாக மகிழ்ச்சிகளை விட துயரங்கள் அதுவும் பெருந்துயரங்கள்தான் மக்களின் ஆழ்மனங்களில் தேங்கி கிடக்கும். 2015 பேரிடர் சென்னை மக்கள் வாழ்நாள் உழைத்து சிறுக சிறுக சேமித்த செல்வங்கள் முழுவதையும் நாசம் செய்தது மறக்க முடியாதுதான்!

ஆனால், செம்பரம்பாக்கம் ஏரி 2015-ம் ஆண்டு மட்டும்தான் உபரி நீரை வெளியேற்றியதாக நினைக்கக் கூடாது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஏரி மன்னர்கள் ஆட்சி, ஆங்கிலேயர் ஆட்சி, 1950-க்கு பின்பான குடியாட்சிகளில் விரிவுப்படுத்தி, சீரமைத்து புனரமைக்கப்பட்டது. 15,000 ஏக்கர் நன்செய் நிலங்களுக்கும், இன்னும் பல ஆயிரம் புன்செய் நிலங்களுக்கும் இதனால் பாசன வசதி செய்யப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியம் காவிரி டெல்டா என்றால் சென்னையின் நெற்களஞ்சியம் செம்பரம்பாக்கம் ஏரி என்றால் மிகை கூற்றல்ல! வரலாற்று உண்மை!!

ஒரே ஒரு ஆண்டு (2015) பேரிடருக்கு வில்லனாக (ஆட்சியாளர்களின் தவறுதான் இதில் முக்கியமானது) செம்பரம்பாக்கம் ஏரியை மாற்றி விடுவதும், ஓர் ஆயிரம் ஆண்டுகளாக மக்களுக்கு உணவளித்து, குடிநீரை தந்த ஏரியை கிரிமினில் குற்றவாளி போல் கற்பனை செய்து கொண்டு பயப்படுவதும், பீதியை கிளப்புவதும் எந்த விதத்தில் சரியானது.

’நீரின்றி அமையாது உலகு’ இது வெற்று வாய்ச் சவடால் சொல் அல்ல. அணு குண்டுகளையும், கொரோனா வைரஸ் கிருமிகளையும், அதற்கு தடுப்பு மருந்துகளையும் கண்டு பிடிக்கும் மனித குலம் நீரை உற்பத்தி செய்ய இயலாது. அதனால்தான் நீரையும், அதை சேமிக்கும் தொழில் நுட்பங்களையும் பழந்தமிழர்கள் அறிவியல்பூர்வமாக புரிந்துகொண்டு செயல்பட்டார்கள், இந்த நுண்ணிய கட்டமைப்புகள் வரலாற்றுச் சாட்சிகளாக செம்பரம்பாக்கம் ஏரி போன்ற ஏரிகள்-நீர்நிலைகளின் வலைப் பின்னல் அமைப்பு கட்டியம் கூறுகின்றன. இதற்கு அடிப்படையான காரணம் இயற்கையோடு இணைந்த பழந்தமிழர் வாழ்வியல் முறை. அதில், ஐந்திணை கோட்பாட்டு புரிதல்கள் இருந்தன.

இன்றைய கார்ப்பரேட் உலகம் இயற்கையை இலாபவெறிக்காக முற்றிலும் அழிக்கத் துவங்கி விட்டது. அதனால் தான், டில்லி, மும்பை, பெங்களூர், சென்னை உள்ளிட்ட டிஜிட்டல் பெருநகரங்கள் அனைத்தும் கான்கிரிட் வனங்களாக மாறி  சிறு மழைக்குகூட வெள்ளக்காடாக மாறி பெரும் துயரை அங்கு வாழும் மக்களுக்கு ஏற்படுத்துகின்றன.

அண்டார்டிகா, அமெரிக்கா கண்டங்களின் புவியியலை, இயற்கைச் சூழலை கற்பிக்கும் நமது பள்ளி-கல்லூரி பாடங்கள் தாங்கள் வாழும் நிலப்பரப்பின் புவியியலை கற்பிக்கவில்லை!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் உள்ள குழந்தைகளுக்கு தேம்ஸ், அமேசான், கங்கை நதிகளைப் பற்றிய பாடங்கள் உண்டு. அவர்களின் அன்றாட வாழ்வியலோடு இணைந்த செம்பரம்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி, அடையாறு, ஆரணியாறு, பாலாறு, கொற்றலை ஆறு போன்றவைகளின் வரலாற்றை, உயிர்சூழலை, நீராதாரத்தை கற்பிக்கும் பாடங்கள் பாட நூல்களில் உள்ளனவா? எந்தப் பாட திட்டத்திலும் உள்ளதா? இல்லை… இதுதான் இன்றைய பரிதாபகரமான தமிழக கல்வி முறை.!

பேரிடரின் பொழுது பெருவெள்ளம் இயற்கையால் நிகழ்ந்தது, செம்பரம்பாக்கம் ஏரி உபரிநீரால் வந்தது என்று அனைவரும் நினைப்பதற்கு இந்த வாழ்வியலோடு பொருந்தாத கல்வி முறையும் ஒரு காரணியாக இருக்கிறது.

மேலும் இயற்கையின் ஒர் அங்கம்தான் மனித குலம். புவிக்கோளம் உயிர்கோளமாக இருக்க முதன்மை காரணி நீர்தான்! அதிலும் சென்னையின் பெரும் தாகத்தை தீர்ப்பது இந்த ஏரிகள்தான்! ஆண்டில் இரண்டு, மூன்று மாதங்கள் பெய்யும் வட கிழக்கு பருவ மழைதான்!


நமது முன்னோர்கள் வற்றாத ஆறுகள் ஏதும் பாயாத தொண்டை மண்டல நிலவியல் வடிமைப்பை ஆராய்ந்தனர். பெரும் பகுதிகள் கடினப் பாறைகளால் ஆனவை. இந்தப் பாறைகளில் தண்ணீர் எளிதாக இறங்கிச் சென்று சேராது. மெல்ல சவ்வு படலமாக ஊடுறும் ஒரு நீண்ட செயல் .

இப்போது நாம் குறிப்பாக சென்னை மக்களுக்காக உறிஞ்சும் நிலத்தடி நீர் பல ஆயிரம் ஆண்டு காலத்தில் உள்ளிறங்கி பாறைகளின் இடுக்குகளில் தேங்கியது. மழை நீரால், ஆறுகளில் ஓடும் நீரால் மட்டுமே நிலத்தடி நீர் பெரும் அளவில் தமிழ்நாட்டில் சேமிக்கப்படுவதில்லை.

மழை நீர் 26% அளவிற்கு பூமிக்குள் சென்றால்தான் நிலத்தடி நீர் ஊறும். இந்த உண்மையை அனுபவ பூர்வமாக உணர்ந்ததால் நம் முன்னோர்கள் நீரை தேக்கி வைக்கும் சிறப்பான ஏரிகள் அமைப்பை இரண்டாயிரம் ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கினார்கள்.

மனித உழைப்பின், நமது முன்னோர்களின் மாண்புறு படைப்புகளில் மகத்தான போற்றப்பட வேண்டியது அவர்கள் உருவாக்கிய ஏரிகளும்-ஆறுகளும்-தாங்கல்களும்-கால்வாய்களும்-குளங்களும் இணைந்த நன்னீர் அமைப்பு முறைமையாகும்

சிறு மழைக்கே கூப்பாடு போடுவது, பீதி கிளப்புவது இந்த ஏரிகள் அமைப்பை சிதைக்க வழி வகுத்துவிடும்! ஊடகங்களும், சமூக ஊடக ஆர்வலர்கள் சிலரும் பீதி கிளப்புவதை நிறுத்த வேண்டும்!

செம்பரம்பாக்கம் ஏரி ஆபத்தானதாக என்றும் இருந்தது இல்லை. இனிமேலும் இருக்கப்போவதும் இல்லை. ஏனெனில் செம்பரம்பாக்கம் ஏரி கரை 1977 ஆண்டின் பெரு வெள்ளத்திற்கு பின்பு பலப்படுத்தப்பட்டது. பின்பு தொடர்ந்து ஆட்சியாளர்களால் பலப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 99.9% ஆபத்து கிடையாது. மற்ற பூண்டி, புழல் குடிநீர் ஏரிகளும் பாதுகாப்பாக தான் உள்ளன. பாதுகாப்பு இல்லாமல் உள்ளது மற்ற ஏரிகள்தான்!

ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம், மண்ணிவாக்கம் இன்னும் சென்னை புறநகர் இடங்களில் மழை நீர்த் தேக்கம் என்பது மனிதர்கள் தவறு . ஏரிகளின் மடுக்கள், பள்ளமான விவசாய பகுதிகளில் புதிய நகர்களை உருவாக்கியது பிழையான திட்ட நடைமுறை. இதை அனுமதித்த ஆட்சியாளர்கள், அதிகாரிகளும் இதைத் தீர்க்க இன்னும் ஆழமாக தீர்க்கமாக நீண்ட திட்டங்களை ஆய்வுகள் மூலம் கொண்டு வர வேண்டும். புதிய வடிகால்களை, சிறு சிறு நீர்நிலைகளை ஆங்காங்கே கொண்டுவர திட்டமிட வேண்டும்!

அடையாறு வெள்ளமும், செம்பரம்பாக்கம் ஏரியும்

இன்றைய நிலவரப்படி அரசு புள்ளிவிவரங்களின் படி 17 .11.2020  அன்று சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு, தற்போதைய நீர் அளவு பின் வருவன : பூண்டி – 3.231 TMC (1.446 ), சோழவரம். – 1.081 TMC (0.155), புழல் – 3.300 TMC (2.403), செம்பரம்பாக்கம். – 3.645 TMC (2.889)
ஆக,மொத்தம் கொள்ளளவு குடிநீர் 11.257 TMC ஆகும்.

இருப்பு நீர் அளவு 4 ஏரிகளிலும் 6.893 TMC குடிநீர் மட்டுமே உள்ளது (அடைப்பு குறியில் இன்றைய நிலவரம்) . அனைத்து ஏரிகளும் இன்னமும் முழு கொள்ளளவினை எட்டவேவில்லை.

வரும் 2021 ஆண்டில் சென்னை மாநகரம் நீர் பஞ்சம் இன்றி இருக்க இன்னமும் 4.75 TMC நீர் தேவையாக உள்ளது. இதை தெளிவாக செம்பரம்பாக்கம் பொதுபணித்துறை பெறியாளர் அசோகன் அவர்கள் விளக்கி தற்பொழுது செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் திறக்கப்படாது. இன்னும் மழை பெய்தால்தான் உபரி நீர் திறப்பது பற்றி மக்களுக்கு முன் கூட்டியே அறிவிப்பு செய்து நடை முறைப்படுத்தப்படும் என்கிறார்.

அடையாறு என்பதும் அடை மழை பெய்தால் உருவாகி ஓடும் ஆறாகும். கிழக்கு தொடர்ச்சி மலையின் கடைசி சிறு குன்றுகள், ஓடைகள், குளங்கள், ஊராட்சி நிர்வாகத்திடம் உள்ள பல நூறு ஏரிகள் அனைத்தும் இணைந்து உருவாக்குவதுதான் அடையாறு! செம்பரம்பாக்கம் ஏரி உபரி நீர் அடையாற்றில் சிறு பகுதிதான்! அங்காங்கே அடையாற்றின் சிறு தடுப்பணைகள் கட்டினால் நிலத்தடி நீர் ஊரும்! இல்லையெனில் கடலில் சென்று சேரும்! அதுவும் கூட கடல் வளம் பெருக காரணமாகும்.

எனவே, ஆளும் கட்சி, எதிர் கட்சி மோதல்களை பருவ மழையிடம் போடாமல் நியாயமான விமர்சனங்களை மட்டும் வைத்து அரசியல் செய்ய வேண்டுவோம்!

நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை

என்பது நமது மூதுரை.

அதனால் பீதியை கிளப்பாமல் அனைவருக்குமான மழை
இன்னும் பெய்ய இயற்கை அருள் புரியட்டும்!

மழையை கொண்டாடுவோம்!!

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்