Aran Sei

விவசாயிகளின் நிலையை கண்டு மனமுடைந்து சாது தற்கொலை – அரசு அநீதி இழைத்துள்ளதாக கடிதம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் இடத்தில் 65 வயதுடைய சீக்கியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொண்ட பாபா ராம் சிங், ஹரியானா மாநிலத்தின் கர்னல் மாவட்டத்தில் உள்ள ஒரு குருதுவாராவை சேர்ந்த சாது என்று தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டம் நடைபெற்று வரும் டெல்லி எல்லைக்கு புதன்கிழமையன்று வந்துள்ள பாபா ராம் சிங், மாலை 3 மணியளவில் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாக தி இந்து கூறுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பாபா ராம் சிங் அங்கு உயிரிழந்துள்ளார்.

ஏற்கனவே பலமுறை போராட்டம் நடைபெற்று வரும் இடத்திற்கு வந்துள்ள பாபா ராம் சிங், போராடும் விவசாயிகளின் நிலையை கண்டு மனம் உடைந்து இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்துகொண்ட பாபா ராம் சிங், ஒரு கடித்தை விட்டுச் சென்றுள்ளதாகவும் அதை காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாகவும், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற குர்மீத் சிங் என்பவர் தி இந்து -விடம் தெரிவித்துள்ளார்.

அரசு இழைத்துள்ள அநீதிக்கு எதிரான கோபத்தையும் கவலையையும் வெளிப்படுத்த தன் உயிரை தியாகம் செய்துள்ளதாக அந்த கடிதத்தில் பாபா ராம் சிங் எழுதியுள்ளதாக ஸ்குரோல் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சோக நிகழ்வு குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மோடி அரசின் அராஜகம் எல்லை மீறியுள்ளதாக தெரிவித்துள்ளார். அரசு உடனடியாக மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஷிரோமணி அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் தனது டிவிட்டர் பக்கத்தில், சாதுவின் தியாகத்தை வீண் போக விடக்கூடாது என்றும் நிலைமை மேலும் மோசமடைவதற்கு முன்னர் அரசு, மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்