Aran Sei

பேரழிவை உண்டாக்கும் ரிசர்வ் வங்கியின் திட்டம் – ரகுராம் ராஜன் எச்சரிக்கை

பொருளாதார வல்லுநர்கள் ரகுராம் ராஜன் மற்றும் விரல் ஆச்சார்யா, பெரிய கார்ப்பரேட் குழுமங்களை வங்கித் துறையில் நுழைய அனுமதிக்கும் இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய திட்டத்தை கடுமையான விமர்சித்திருக்கின்றனர். இந்த நடவடிக்கை, பேரழிவை உண்டாக்கும் எனவும், சில வணிக நிறுவனங்களின் பொருளாதார, அரசியல் அதிகாரத்தை தீவிரமாக்கும் எனவும் கூறியுள்ளனர்.

இன்று அவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில், முன்னாள் ரிசர்வ் வங்கி ஊழியர்களான ரகுராம் ராஜனும், விரல் ஆச்சார்யாவும், இந்த திட்டம் முன் வைக்கப்படும் சமயத்தை கேள்விக்குள்ளாக்குகின்றனர். அரசு வங்கிகளை நரேந்திர மோடியின் அரசு தனியார்மயமாக்கும் போது, அதற்கு தேவைப்படும் ஒப்பந்ததாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இந்த திட்டம் முன் வைக்கப்படுவதாக கூறுகின்றனர்.

“ரிசர்வ் வங்கி பணிக்குழுவின் இந்த திட்டம் ஏகப்பட்ட எச்சரிக்கைகளை சுமந்து வருகிறது என்றாலும், ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது : ஏன் இதை ‘இப்போது’ செய்ய வேண்டும்? தொழில்துறை நிறுவனங்களை வங்கித்துறையில் அனுமதிப்பதன் கேடுகளை பற்றி நாம் அறிந்ததை எல்லாம் மீறும், மாற்றும் ஒன்றை இப்போது கற்றிருக்கிறோமா? இல்லையே. உண்மையில், இதற்கு நேர் எதிராக, வங்கித்துறையில் கார்ப்பரேட்கள் எந்தளவு ஈடுபடலாம் என நாம் சோதித்து தெரிந்து கொண்டதை எல்லாம் நடைமுறையாக்குவது, முன்னேப்போதும் விட இப்போது தான் அவசியமாக இருக்கிறது” என கூறுகிறார்கள்.

“வணிக நிறுவனங்களை வங்கித்துறையில் அனுமதிக்காததற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, வணிக நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவைப்படும், அவர்களுக்கென வங்கி இருந்தால், அதை எளிதாக வாங்கிவிடலாம். இணைந்திருக்கும் இரு அமைப்புகளுக்குள் கடன் கொடுக்கப்படுவது, வரலாற்றில் எல்லா இடங்களிலும் அழிவை மட்டுமே உண்டாக்கியிருக்கிறது – கடன் வாங்குபவர் தான் வங்கியின் உரிமையாளர் என்றால் வங்கிக்கு அதன்வழி என்ன நன்மை வரும்?” என்று ரகுராம் ராஜனும், விரல் ஆச்சார்யாவும் கேள்வி எழுப்புகிறார்கள்.

நவம்பர் 20 ஆம் தேதி, வங்கி உரிமையாளர் விதிமுறைகளை எல்லாம் மதிப்பாய்வு செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது ரிசர்வ் வங்கியின் உள் பணிக்குழு. இருந்தாலும், வணிக நிறுவனங்களை வங்கித்துறையில் அனுமதிக்க வேண்டும் எனும் ரிசர்வ் வங்கியின் பரிந்துரை பலமான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. வெளிநாட்டு மதிப்பீடு நிறுவனமான எஸ்&பி க்ளோபல் இதை ஒரு ’ஆபத்தான திட்டம்’ என்று சொல்லியிருக்கிறது.
கடன்பட்டிருக்கும் கார்ப்பரேட்கள், அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட நிறுவனங்கள் இதனால் பெரிய லாபத்தை பெறும். அவர்களுக்கு புது வங்கி உரிமங்கள் வாங்குவது எளிதாகும். இது இந்தியாவை ஏதேச்சதிகார குழுக்களின் பிடியில் தள்ளும்.

“மேற்பார்வை செய்தால் நேர்மையானவர்கள் யார், சந்தேகத்திற்குரியவர்கள் யார் என கண்டுபிடிக்க முடியும் அல்லவா? என்றால், முடியும். ஆனால் எந்த அரசியல் சார்புகளும் இல்லாத, முற்றிலும் சுயாதீனமான ஒரு நிர்வாகிகள் குழு அமைக்கப்பட வேண்டும். இது எப்போதுமே சாத்தியமா என்பது விவாதத்திற்குரியது. அதையும் தாண்டி, வங்கி உரிமங்கள் வழங்கப்பட்டால், சுயமாக கடன் கொடுத்துக் கொள்ளும் வாய்ப்புகளை வைத்து உரிமம் தவறாகவே பயன்படுத்தப்படும். உரிமம் வாங்கும் போது நேர்மையானவர்களாக இருந்துவிட்டு, பிறகு மோசடி செய்தவர்களை இந்தியா பார்த்திருக்கிறது” என அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தாங்கள் கலந்து ஆலோசித்த பெரும்பாலான நிபுணர்கள், வல்லுநர்கள், பெரிய கார்ப்பரேட்கள், வணிக நிறுவனங்கள் வங்கித்துறையில் அனுமதிக்கப்படக் கூடாது என்றே தெரிவித்தார்கள் என பணிக்குழுவே குறிப்பிடுவதை ராஜனும், ஆச்சார்யாவும் சுட்டிக் காட்டுக்கின்றனர். இருந்தாலும், பணிக்குழுவின் இறுதி பரிந்துரை இதற்கு நேர் எதிராகவே இருக்கிறது.

“மிக முக்கியமான கேள்வி, ஐ.எல்.எஃப்.எஸ் மற்றும் யெஸ் வங்கியின் தோல்விகளில் இருந்து பாடங்கள் கற்க இப்போது நாம் முயற்சித்துக் கொண்டிருக்கும் இந்த வேலையில் இது ஏன் என்பதே? ஒன்று, அரசாங்கம் வங்கித்துறையை தனியார்மயமாக்கும் போது ஒப்பந்ததாரர்களுக்கான சாத்தியத்தை அதிகரிக்க விரும்புகிறது. இரண்டாவது, கட்டண வங்கி உரிமம் வைத்திருக்கும் ஏதோ ஒரு நிறுவனம் வங்கியாக மாற விரும்புகிறது. இப்படி நிறுவனங்கள் வங்கியாக மாறுவதற்கு கொடுக்கப்படும் காலம் மூன்று முதல் ஐந்து வருடங்கள் என குறைக்கப்பட வேண்டும் எனும் பணிக்குழுவின் பரிந்துரையை தான் புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது. எல்லா பரிந்துரைகளையும் சேர்த்து படித்தால் புரியலாம்” என்கிறது பொருளாதார நிபுணர்கள் ரகுராம் ராஜன் மற்றும் விரல் ஆச்சார்யாவின் கூட்டறிக்கை.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்