Aran Sei

டிகோடிங் ரஜினிகாந்த்: அரசியல் ஹீரோவா? வில்லனா? – மகிழ்நன் பாம

1992-லிருந்து தொடர்ந்து அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த ஆடி வந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது. அவர் பாஜகவுக்கு நெருக்கமானவர் என்று தொடர்ந்து விமர்சனங்கள் வந்தபடியே இருந்தாலும், என்ன கொள்கை என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை? என்னதான் அவரது கொள்கை, அவர் அறிவிக்கும் வரை காத்திருந்துதான் புரிந்துகொள்ள வேண்டுமா?

ஜனவரியில் கட்சி தொடங்குவதற்கான அறிவிப்பை டிசம்பர் 31-ல் அறிவிப்போம் என்று பத்திரிகையாளர்களைச் சந்தித்து தன் திருவாய் மலர்ந்த ரஜினிகாந்த், ரா.அர்ஜூனமூர்த்தியைத் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், ‘மேடைப் பேச்சாளர்’ தமிழருவி மணியனை மேற்பார்வையாளராகவும் அறிவித்திருக்கிறார்.

இவர்களை வைத்து மட்டுமே கூட ரஜினியின் திசைவழியைக் கண்டுபிடித்துவிட முடியும். ஒன்றும் பெரிய ரகசியமில்லை.

மணியன் தன்னைக் காந்தியவாதி என்று அறிவித்துக்கொண்டே, எவ்வித தருக்க நியாயமும் இல்லாமல் பாஜக கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தவர். வருங்காலத்தில் அவருடைய தமிழ்ப் புலமை, நாவன்மை, வாசிப்பு ஆகியவற்றை வைத்துக்கொண்டு, பாஜகவின் கொள்கை காந்திய சோசலிசம்தான். ஆகவே….என்று நீட்டி முழங்கி தன்னுடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தவும் செய்வார். அதில் வியக்க ஒன்றுமில்லை.

ரா.அர்ஜூனமூர்த்தியைப் பொறுத்தமட்டில், பாஜக தன்னுடைய அரசியல் நோக்கத்திற்காக நடத்தும் வேல் யாத்திரையில் பங்கெடுத்துச் சிறை சென்றவர், பாஜகவின் ’அறிவுசார் பிரிவின்’ மாநில தலைவராக இருந்தவர். அவர் கிடைத்தது பெரும் பேறு என்று ரஜினிகாந்த் கூறுகிறார். அப்படியென்றால், அவர் காவி அரசியல் பேசுகிறார் என்று முடிவு செய்துவிடலாமா?

“அவசரப்படாதீர்கள்” என்கிறார் ரஜினி. “என் மீது காவி பெயிண்ட் அடிக்காதீர்கள்” என்று அவரே கேட்டுக்கொண்டுள்ளபடியால், இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும் வரையாவது காவி பெயிண்ட் டப்பாவில் ப்ரஸ்ஸை முக்கியபடியே காத்திருக்கவும்.

சரி எப்படி அவரைப் புரிந்துகொள்வது, அரசியல் தொடர்பாக அவர் கடந்த காலத்தில் பேசியவற்றை வைத்துதான் நாம் மதிப்பிட வேண்டும். நாம் அதை முயற்சித்து பார்க்கலாம்.

ரஜினிகாந்த் தன்னுடைய அரசியலை ஆன்மீக அரசியல் என்கிறார். அவர் சொல்கிற ஆன்மீகம் என்பது என்ன?

ரஜினிகாந்த் தன்னுடைய ஆன்மீகம் தொடர்பான கண்ணோட்டத்துக்கு ராமகிருஷ்ணா மிஷனையே அடிக்கடி மேற்கோள் காட்டி வந்திருக்கிறார். சங் பரிவார் அமைப்பின் ஆதரவாளர்கள் பலரும் அதை மேற்கோள் காண்பிப்பதையும், தங்களுடைய ஆன்மீக தலமாகக் குறிப்பிடுவதையும் இந்த நேரத்தில் நினைவுப்படுத்திக்கொள்வது அவசியமானது.

ஆனால், தன்னுடைய  சினிமாப் பயணத்தில் மது உள்ளிட்ட பல்வேறு வகை கேளிக்கைகளில் திளைத்தவர், ஒரு கட்டத்தில் தனக்கு ஞானம் கிட்டியதால் உண்மையை உணர்ந்ததாகவும், ரஜினிகாந்த் பேட்டிகளில் குறிப்பிட்டிருக்கிறார்.

1981ஆம் ஆண்டு சாவி இதழுக்கு ரஜினிகாந்த் அளித்த பேட்டியில்

”உலகத்துல மூணு பேர்தான் சந்தோசமா இருக்காங்க தெரியுமா? ஒன்னு சன்யாசி, இன்னொருத்தன் பைத்தியக்காரன், மூணாவது குழந்தை. என்னால் சன்யாசியா  இருக்க முடியாது. முடியவில்லை. கொஞ்ச நாள் பைத்தியக்காரனா இருந்து பாத்துட்டேன் தாங்கல. ஸோ…குழந்தையா  இருக்கேன். வெறுமே விளையாடிட்டு இருக்கேன். கடைசி வரைக்கும் இப்படித்தான் இருப்பேன்”

1984-ம் ஆண்டு ஒரு செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில்

”நான் முற்றும் துறந்த முனிவனோ சாமியாரோ கிடையாது. நல்ல சராசரி மனிதர்களில் ஒருவன். எனக்கும் ஆசாபாசங்கள் அனைத்தும் உண்டு, என் வாழ்க்கையில் இருந்து சொல்வதென்றால் நான் மனசாட்சிக்குக் கட்டுப்பட்ட சாமியாரே தவிர உண்மையிலேயே சாமியார் அல்ல” என ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

குழந்தை, சாதாரண மனிதன் என்று தன்னுடைய வரம்பைச் சுருக்கிக்கொண்ட ரஜினிகாந்த், எல்லோருக்கும் நல்ல பிள்ளையாக இருப்பது, அதிகாரத்தில் இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது எனத் தன்னுடைய “கேரியரு”க்கு எவ்விதச் சேதாரமும் ஆகாமல் பார்த்துக் கொள்வதில் குறியாக இருந்தார்.

1989-ம் ஆண்டு வண்ணத்திரை இதழுக்கு அளித்த பேட்டியில் ”கலைஞருக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்வது கடமை  மற்றொரு புறம் ஆர்.எம்.வியின் படங்களில் நடிப்பது என்னுடைய தொழில்” எனத் தமிழ்நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளிடம் நெருக்கம் பாராட்டி வருவதற்கு எந்த அரசியல் நோக்கமுமில்லை என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு Social Service மாதிரி என்னால் முடிந்ததைச் செய்வேன், அதற்குக் கண்டிப்பாக அரசியல் முகம் இருக்காது” என்றும் கூறியுள்ளார்.

இப்படி தன்னுடைய முகத்திற்கு எவ்வித அரசியல் சாயமும் விழுந்து விடக்கூடாது என்று கரிசனத்தோடு இருந்த ரஜினிகாந்த், தன்னுடைய ஆன்மீகத்தைக் குறித்து பேசும் போது,

“ஆன்மீகம்தான் வன்முறையைக் கட்டுப்படுத்தும். ஆன்மீகம் என்பது மதங்களுக்கு அப்பாற்பட்டது. மதங்கள் மனிதர்களைக் குழப்புகின்றன. ஆகவே என்னை ஆன்மீகவாதி என்றே குறிப்பிடுகிறேன். ராகவேந்திர சுவாமிதான் எங்கள் குடும்ப குரு. எந்தக் கடவுளுக்கும் நான் முக்கியத்துவம் தருவதில்லை. ராமகிருஷ்ண மிசன் அளித்த அடித்தளம்தான் என்னுடைய பக்குவநிலைக்குக் காரணம்” என்றெல்லாம் சொல்லும் ரஜினிகாந்த், தன்னுடைய அலுவலகப் பெண் ஒருவருக்கு மனுதர்ம சாஸ்திரத்தைப் பரிசளித்தார் என்று இணையத்தில் விமர்சனம் எழுந்தது.

ஆனால், அந்தப் பெண்ணுக்குப் பெரியாரின் புத்தகத்தைப் பரிசளித்தார் என்று இணையத்தில் அவரது ஆதரவாளர்கள் சிலர் பதிவிட்டனர். பெண் விரோதக் கருத்துகளைப் பேசும் மனுதர்மத்தையும், பெண் விடுதலையை வலியுறுத்திய பெரியாரின் நூலையும் ஒருசேர பரிசளித்த பக்குவம் கொண்ட ரஜினிகாந்திற்குத் தடாலடியாகக் காவி பெயின்ட் அடிக்கும் அவசரத்தைக் கொஞ்சம் ஒத்திப் போடுங்கள்.

அடுத்த தளத்திற்குச் சென்றிருக்கிற அவருடைய பக்குவம் குறித்தும் தெரிந்துகொள்ளலாம்.

சங் பரிவார அமைப்பைச் சார்ந்தவர்கள், மண்டல் கமிசன் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்ட காலத்தில், ரதயாத்திரை என்ற பெயரில் நாடு முழுக்க வன்முறையை விதைத்து, அயோத்தியாவில் அண்ணல் அம்பேட்கரின் நினைவு நாளில் ராமர் கோவிலை இடித்தத்தைக் குறித்துக் கேட்டால் பதில் சொல்ல மறுக்கிறார். ”அவ்வாறான விசயங்களுக்குக் கருத்து சொல்ல விரும்பவில்லை” (இந்தியா டுடே 2018) என்கிறார்.

வன்முறையைக் கட்டுப்படுத்தும் என்று ரஜினிகாந்த் நம்புவதாகச் சொல்லும் ஆன்மீகத்திற்கு விரோதமாக ஒரு இந்துத்வ அரசியலை முன்வைக்கும் கும்பல் அயோத்தியா, குஜராத், கோயம்புத்தூர், மும்பை எனப் பல்வேறு ஊர்களில் கலவரத்தை விதைத்து வருகிறது. மாட்டிறைச்சி உண்டார்கள் என்று எளிய மக்களைக் கொலை செய்கிறது. மதம் மீறி திருமணம் முடித்தால் அதுவே ’லவ் ஜிஹாத்’ என்று அரசியல் சாசன விழுமியங்களுக்கு எதிராகச் சட்டம் இயற்றுகிறது.

இதுகுறித்தெல்லாம் கருத்தே சொல்லாமல், தமிழ்நாட்டில் சிஸ்டம் சரியில்லை என்கிறார்.  சிஸ்டம் சரியில்லை என்கிற இந்த பஜனை முதல் முறையாக வரவில்லை.

1991-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்முறையாக முதல்வராகப் பதவியேற்று, கும்பகோணம் விபத்து நடந்த பின்னர், 1993-ம் ஆண்டு ஆனந்தவிகடன் (12.9.93) இதழுக்கு அளித்த பேட்டியிலும் சிஸ்டம்  சரியில்லை என்று கூறியிருக்கிறார். ஒருவேளை ஜெயலிலதா ஆட்சி மீதான கடுப்பாக இருக்குமோ என்று அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை. அந்தப் பேட்டி அவரது எண்ணம், இலக்கு குறித்து துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறது

அந்தப் பேட்டியில் அவர் முக்கியமாகக் குறிப்பிட்டது ஆறு அம்சங்கள்

  • மத்தியில் முழுமையான மெஜாரிட்டி ஆட்சி வர வேண்டும்
  • நாட்டுக்கு ஒரு சர்வாதிகாரி வேண்டும், அவரிடம் அதிகாரம் போக வேண்டும்
  • நாட்டில் எமர்ஜென்சி கொண்டு வரப்பட வேண்டும்
  • எல்லாத்துக்கு ஏற்றபடி அரசியல் சட்டங்களை மாத்தணும்
  • இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி மாதிரியான தலைவர்கள் வரணும்
  • நிலத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்கணும்

கடைசியாக இருக்கிற விசயம் வாசிக்கிறவர்களுக்கு மயக்கத்தை தரலாம். ஆனால், அதைச் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், கொரோனா நெருக்கடி, ஜி.எஸ்.டி விவகாரம் என நாட்டில் வேலையிழப்பு, பொருளாதார நெருக்கடி என முற்றிக்கொண்டிருக்கும் பாரதிய மஜ்தூர் சங்கம் கம்யூனிஸ்டைப் போலக் கண்டித்து அறிக்கை விடுவதுடன் ஒப்பிட வேண்டும்.

அது வெறும் சடங்கு. அதற்கு மேல் பாஜக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக எவ்வித போராட்டத்தையும் நடத்த மாட்டார்கள். அதேதான், ரஜினிக்கும்.

ஆகவே, கடைசி பாய்ன்டைத் தூக்கிவிட்டுப் பாருங்கள். மோடி அரசு 370 சட்டத்தை நீக்கியதற்கு ஆதரவு , சிஏஏ சட்டதிருத்தத்திற்கு ஆதரவு, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவு, வேளாண் சட்டங்களுக்குக் கமுக்கமான மௌனம் என ரஜினியின் நடவடிக்கைகள் காலத்திற்குக் காத்திருந்ததைப் போலத் தெரிகின்றன.

கோடிக்கணக்கான விவசாயிகள் தெருவிறங்கி எந்த சிஸ்டத்துக்கு எதிராகப் போராடுகிறார்களோ அந்த சிஸ்டத்திற்கு எதிராக ரஜினிகாந்துக்கு எந்தக் கருத்துமில்லை?

ஹத்ராஸில் பட்டியல்சாதி பெண்ணை வன்புணர்ச்சிக்கு ஆளாக்கிக் கொடூரமாக கொலை செய்தார்களே, அந்தச் சாதிய சிஸ்டத்துக்கு எதிராகவோ அதை ஆதரித்து நின்ற யோகி அரசின் சிஸ்டத்திற்கு எதிராகவோ ரஜினிக்கு எந்தக் கருத்துமில்லை?

அவரைப் பொறுத்தவரை, மோடி தலைமையிலான பாஜகவின் ஆட்சியாகட்டும், பிற மாநிலங்களில் நடக்கும் பாஜக ஆட்சியாகட்டும் இந்திய அளவில் சிஸ்டத்தை மாற்றும் வேலையில் பாஜக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது என்ற எண்ணம் ரஜினிக்கு ஆழமாக இருக்கிறது என்றுதானே கணிக்க வேண்டியிருக்கிறது.

பிறகேன், ரஜினி அரசியலுக்கு வந்து சிஸ்டத்தை மாற்றுவேன் என்கிறார்.

அது என்ன சிஸ்டம்?

அதிகார மட்டத்தில் ஊழலைக் குறைப்பது என்று மட்டும் புரிந்துகொள்ள முடியாது. திராவிடக் கட்சிகளைப் பலவீனப்படுத்தித் தனக்கு ஆன்மீக அடித்தளமிட்ட ராமகிருஷ்ண மிசனின் விருப்புக்குரிய அரசியல் கட்சியான பாஜகவுக்கு வேர்பிடிக்க சில வேலைகளைச் செய்துவிட்டுப் போவதுதான்.

70 வயதில் தன்னுடைய நோயைப் பொருட்படுத்தாமல், உயிரே போனாலும் பரவாயில்லை என்று சூளுரைக்கும் ரஜினியின் தத்துவ அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவரை அரசியல் களத்திற்குக் காவி பெயின்டோடு வரவேற்கலாம். பெயின்ட் அடிக்கும் சூழலில் நாம் நினைவு கொள்ள வேண்டியது ரஜினி 1977-ம் ஆண்டில் பொம்மை இதழுக்குக் கொடுத்த முதல் பேட்டியைத்தான்.

”அளவுக்கு அதிகமாகச் சுயநலம் கொண்டவன் என்பதே வில்லன் என்பதற்குப் பொருத்தமான விளக்கம் என்று நான் கூறுவேன்” என்று ரஜினிகாந்த் கூறுகிறார்.

அவ்வகையில், தமிழக அரசியல் களத்தில் ரஜினி ஹீரோ இல்லை, வில்லன்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்