Aran Sei

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

Image Credit : thewire.in

போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் குறித்து, விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவு ஏமாற்றத்தை அளித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில், விவசாய பொருளாதார நிபுணர் அசோக் குலாத்தி, பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் புபிந்தர் சிங் மான், தெற்காசிய சர்வதேச உணவு கொள்கை அமைப்பின் இயக்குனர் பிரமோத் குமார் ஜோஷி, ஷேத்கரி ஷன்கத்தன் அமைப்பைச் சேர்ந்த அனில் கான்வாத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள, கிராந்திகாரி கிசான் சங்கத்தின் தலைவர் தர்ஷன் பால் “உச்சநீதிமன்றம் எங்கள் உணர்வுகளுடன் எப்படி விளையாடுகிறது என்று பாருங்கள்… குழுவில் இடம்பெற்றுள்ளதாக நாங்கள் கேள்விப்பட்ட அனைவரும், தாங்கள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்கள் என்று அறிவித்துக்கொண்டவர்கள். ஆகவே, இந்த மோசடியான நடவடிக்கை எதற்கு?” என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“பஞ்சாபை சேர்ந்த பூபேந்திர சிங் மான் யார் என்று எனக்கு தெரியும். அவர் ஏற்கனவே விவசாயத்துறை அமைச்சரைச் சந்தித்து, வேளாண்சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டார். ஷேத்காரி ஷன்கதன் அமைப்பைச் சேர்ந்த அனில் கன்வாத் அவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசமாட்டார். அஷோக் குலாத்தி, அனைவரும் அரசின் ஆதரவாளர் என்பது அறிந்ததே” என்று தர்ஷன் பால் கூறியுள்ளார்.

தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படி, இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது விவசாயிகள் சார்பாக எந்த வழக்கறிஞரும் ஆஜராகவில்லை என்று கூறியுள்ள தர்ஷன் பால் “அந்தக் கமிட்டியின் முன் நாங்கள் ஆஜராக மாட்டோம். எங்கள் கோரிக்கையில் மாற்றமில்லை, போராட்டம் தொடரும்” என்று கூறியதாக தி இந்து கூறுகிறது.

உச்சநீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு, ரோத்தக்கில், செய்தியாளர்களை சந்தித்த சுவராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ் “உச்சநீதிமன்றம் மூன்று சட்டங்களையும் செயல்படுத்துவதற்கு குறிப்பிட்ட காலத்திற்கு தடை விதித்துள்ளது. ஆனால், இது எங்கள் கோரிக்கையில்லை. இந்தச் சட்டங்கள் முழுமையாக திரும்ப பெறவேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆகவே எங்கள் போராட்டம் தொடரும்” என்று கூறியதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்