Aran Sei

வாஹீத்-உர்- ரெஹ்மான் வழக்கு – காஷ்மீரில் என்ஐஏவின் செயல்பாட்டிற்கு ஒரு உதாரணம்

டந்த 9 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றம், சென்ற ஆண்டு ஜூலை மாதம் என்ஐஏவால் கைது செய்யப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDP) இளைஞரணி தலைவர் வாஹீத்-உர்- ரெஹ்மான் பாராவுக்கு ஜாமீன் வழங்கியது. என்ஐஏ பதிவு செய்துள்ள அசல் குற்றப்பத்திரிகையில், பாரா, குற்றச் செயலில் ஈடுபட்டதற்கான துளி அளவு ஆதாரமும் இல்லை  என நீதிமன்றம் கூறியுள்ளது.

இருப்பினும், ஜாமீன் பெற்ற பாராவை, காஷ்மீர் எதிர் புலனாய்வு குழு (CIK) கைது செய்துள்ளதாகவும், இது “வீம்புத்தனமான நீதிமன்ற அவமதிப்பு” என்றும் காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சி தலைவருமான மெஹ்பூபா முஃப்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இந்த விவகாரத்தில், ஜம்மு காஷ்மீர் ஆளுநர் தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

“முழுமையான நீதிமன்ற நடைமுறைப்படி என்ஐஏ நீதிமன்றம், வாஹீத்திற்கு பிணை வழங்கி உள்ளதையும் மீறி, அவர் சிஐகே-வால் ஜம்முவில் கைது செய்யப்பட்டுள்ளார். எந்த சட்டத்தின் கீழ், எந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்? ” என்று தனது டிவிட்டர் பதிவில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

2020 நவம்பர்- டிசம்பரில் நடக்கவிருந்த மாவட்ட வளர்ச்சி மன்றத் தேர்தலுக்காக வேட்பாளராக போட்டியிட, பாரா தனது பெயரை பதிவு செய்த சில நாட்களில், நவம்பர் 25 ஆம் தேதி, கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி, என்ஐஏவால் கைது செய்யப்பட்டார். இரண்டு நாட்களுக்குப் பின் அவர் 15 நாட்கள் என்ஐஏ காவலில் வைக்கப்பட்டார். காவலில் இருந்த போதும் பாரா, புல்வாமா-1 மாவட்ட வளர்ச்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.

ஜம்மு, என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் பாராவுக்கு பிணை வழங்கும் போது, என்ஐஏ வழக்கில், முறையே ஜூலை, அக்டோபர் மாதங்களில், பதிவு செய்யப்பட்ட அசல் குற்றப்பத்திரிகையிலும், பின்னர் பதிவு செய்த துணை குற்றப்பத்திரிகையிலும், பிடிபி தலைவர் பற்றிய குறிப்புகளே இல்லை என்று கண்டறிந்துள்ளது. பிப்ரவரி 20ல் ஒரு அறிக்கையில் பாராவையும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்ட போதும் அது “பாராவின் ஈடுபாடு குறித்த தகவல் “துளியளவும்” கூட இல்லை என்று கண்டறிந்துள்ளது.

“விசாரணை அமைப்பின் ‘இத்தகைய செயலாற்றல் தன்மை’ தற்போதைய வழக்கில் அவரை ‘குற்றம் சாட்டப்பட்டவர்கள்’ வரிசையில் வைக்க விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது. மற்ற இரு நபர்களுக்கு எதிரான அசல் மற்றும் துணை குற்றப்பத்திரிகைகளை பதிவு செய்த பின்னரே, விசாரணைக் குழு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழுந்து, தற்போதைய விண்ணப்பதாரர் பாராவை நவம்பர் 25 ம் தேதி இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று, 2020, பிப்ரவரியில் நவீத் முஷ்டாக்கை கைது செய்த போது பதிவு செய்த அதே அறிக்கையை பதிவு செய்துள்ளது,” என நீதிமன்ற உத்தரவு தெரிவிக்கிறது‌.

மேலும், குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ள பாராவின் பெயர், குற்றம் சாட்டப்பட்டவர்களின்  பெயர் பட்டியலில் இல்லை என்றும், ஆனால் இந்த வழக்குத் தொடர்பான விசாரணைகள் நிலுவையில் உள்ளன என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

“நான் முன்னரே  குறிப்பிட்டுள்ளது போல, மேற்குறிப்பிட்ட பாராவிற்கு எதிரான ஆதாரம் ஏற்கனவே விசாரணை முகமையிடம் உள்ளது. அவர் குற்றம் சாட்டப்பட்டுள்ள தேவிந்தர் சிங்குடன் பேசிய தொலைபேசி அழைப்புகளின் பொருத்தமான நாட்களின் பதிவும் கூட அசல்  குற்றச்சாட்டுப் பத்திரிகையின் மீதான விசாரணையின் போதே முகமையிடம் இருந்துள்ளது. ஆனால் விசாரணை முகமை,வாஹீத் பாராவை “குற்றவாளியாக”  சேர்க்க போதுமான ஆதாரங்கள் இல்லை என கண்டறிந்துள்ளது. அதனால், அவர்கள் வேண்டுமென்றே அவர் பெயரை இந்த வழக்கில் பிற குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலில் சேர்க்கவில்லை. அதனால் குற்றப்பத்திரிகையிலும் அவர் பெயரைக் குறிப்பிடவில்லை. ஆனால் அவர்கள் மீதான விசாரணை நிலுவையில் உள்ளது. ஆகவே, தற்போதைய விண்ணப்பதாரர்/குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பாக விசாரணை முகமை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கடுமையான சந்தேகம் எழுந்துள்ளது,” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும் நீதிமன்றம், “2020, பிப்ரவரியில்,  குற்றம்சாட்டப்பட்டுள்ள நவீத் முஸ்டாக் அளித்துள்ள அறிக்கையின்படி, பாரா நவம்பர் 25 ம் தேதி கைது செய்துள்ளார்” என்பதை குறிப்பிட்டுக் காட்டி உள்ளது.

“மேல் விசாரணையின் போது, விசாரணை முகமை வாஹீத்தை இந்த வழக்கின் துவக்கக் கால விசாரணையின் போதே, பழைய ஆதாரங்களின் படி கைது செய்திருக்கலாமே? என நான் கடுமையாக சந்தேகிக்கிறேன்,” என என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுனீத் குப்தா கூறி உள்ளார்.

குற்றவியல் நடைமுறை சட்டம் 173 வது பிரிவை மேற்கோள் காட்டிய நீதிபதி, அவர்கள் இந்த வழக்கில் கூடுதலாக குற்றவாளியைக் (பாராவை) கைது செய்வதற்காக, முந்தைய குற்றப்பத்திரிகையின் விசாரணையின் போது சேகரிக்கப்பட்ட பழைய ஆதாரங்களை, விசாரணை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார்.

“பயங்கரவாத அமைப்பை ஆதரிக்கும் குற்றத்தைச் செய்ததாக” பாராவை தொடர்புபடுத்த முடியாது. குற்றம் சாட்டப்பட்ட நவீத் முஷ்டாக்கின் கூற்றுகளை எடுத்துக் கொண்டால், வாஹீத் கொடுத்த பத்து லட்ச ரூபாய் நிதியில் ஏகே- 47 துப்பாக்கிகளை வாங்கியது பாராவின் முடிவு அல்ல. அந்தப் பணத்தை ஆயுதங்களும், வெடிமருந்துகளும் வாங்க முடிவு செய்தது, நவீத் முஷ்டாக்கின் முடிவுதான். எனவே, தற்போதைய மனுதாரரை (பாராவை) பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்த குற்றச் செயலுடன் தொடர்புபடுத்த முடியாது,” என நீதிமன்ற உத்தரவு கூறுகிறது. நவீத்தின் கூற்றை அடிப்படையாகக் கொண்டு பாராவை கைது செய்துள்ள இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான அவரது (நவீத்)  கூற்றை ஏற்றுக் கொண்டுள்ளது குறித்தும்  நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.

முதல் பார்வையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள நவீத் முஷ்டாக்கின் கூற்றின் சட்டபூர்வ மதிப்பைப் பார்த்தால், அந்தக் கூற்று சான்றுகள்/ ஆதாரங்கள் சட்டம் பிரிவு 25ன் கீழ்வரும் முக்கியமான ஒன்றாகும். இது போன்ற கூற்றுகள் ஒப்புதல் வாக்குமூலத்தைப் போன்றது. இதனை குற்றவியல் சட்டம் பிரிவு 164 ன் கீழ் மட்டுமே பதிவு செய்ய முடியும். மேலும் நீதிபதியால் அது பதிவு செய்யப்பட வேண்டும். நான் ஏற்கனவே கூறியது போல ஆதாரங்கள்  சட்டப் பிரிவு 25ன் கீழ் மட்டுமே ஏற்றுக் கொள்ள முடியும்,” என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

2020, ஜனவரியில் ஜம்மு காஷ்மீர் காவல்துறை துணை கண்காணிப்பாளர்(காவல்துறை)  தேவிந்தர் சிங்கை, தெற்கு காஷ்மீரில் சில தீவிரவாதிகளுடன் ஒரு காரில் வைத்து கைது செய்ததுதான் வழக்கு. பின்னர் இந்த வழக்கை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துக் கொண்டு, 2020 ஜூலை 6 ஆம் தேதி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தேவிந்தர் சிங், தீவிரவாத அமைப்பின் தளபதி நவீத் முஷ்டாக் உட்பட ஆறு பேருக்கு எதிராக குற்றம் பத்திரிகையை தாக்கல் செய்தது. 2020, அக்டோபர் 23 ல் துணை குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

(www.thewire.in இணையதளத்தில் உமர் மக்பூல் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்