Aran Sei

பீமா கோரேகான் : புனைவு வரலாறாகும் ஆபத்து – ஆனந்த் டெல்டும்டே

பீமா கோரேகான் வன்முறை தொடர்பான வழக்கில் சிறையில் வாடும் சிந்தனையாளர் ஆனந்த் டெல்டும்டே அவர்கள் ’தி வயர்’ இணையதளத்தில் எழுதிய கட்டுரை

200 ஆண்டுகளுக்கு முன்பு கோரேகான் கிராமத்தின் பீமா நதிக்கரையில் ஆங்கிலேயர்களுக்கும், மாராட்டாக்களுக்கும் இடையே இறுதி யுத்தம் நடந்தது.  அந்த யுத்தம் இந்தியாவின் மீதான பிரிட்டிஷ் பேரரசின் பிடியை உறுதி செய்ததால் இறந்தவர்களின் நினைவாக யுத்த களத்தில் ஒரு நினைவுத்தூணை பிரிட்டிஷார் நிறுவினர். அதிலுள்ள 49 பெயர்களில், நாக் என்ற பின்னொட்டை வைத்து 22 பேர் மகர்கள் என்று அடையாளம் காணப்பட்டனர். 1893ம் ஆண்டு நிறுத்தப்பட்ட மகர் படையணியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த முதல் மகர் படையணியின் தலைவர்கள் கோபால் பாபா வலாங்கர், சிவராம் ஜன்பா காம்ப்ளே மற்றும் அம்பேத்கரின் தந்தையான ராம்ஜி அம்பேத்கர் ஆகியோர் மகர் வீரர்களின் துணிச்சலுக்கான சான்றாக கருதப்பட்ட பீமா கோரேகான் போரைத்தான் மேற்கோள் காட்டினர். 1857 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த சிப்பாய் கிளர்ச்சியின் விளைவாக மகர்களை படையில் சேர்த்துக் கொள்வதை நிறுத்திவிட்டு, ’போர் மரபினரை’ படையில் சேர்த்துக் கொள்ளும் உத்தியை நடைமுறைப்படுத்த பிரிட்டிஷ் அரசு தொடங்கியது.

பாபாசாகேப் அம்பேத்கர் பீமா கோரேகான் போரை பேஷ்வாக்களின் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக மகர்கள்  நிகழ்த்தியப் போராக சித்தரித்து ஒரு  தொன்மத்தை கட்டமைத்தார். இயக்கங்களைக் கட்டமைப்பதற்கு தொன்மங்களின் தேவை இருந்ததால், அப்போது அவர் அவசியமென கருதியிருக்கலாம். ஆனால், ஒரு நூற்றாண்டு கடந்தும் அது ஒரு வரலாற்று புனைவாக மாறி தலித்துகளை அடையாள புதைச்சேற்றில் தள்ளும் போது, அது கவலைக்குரியதாக மாறி நிற்கிறது. நிறைய தலித் அமைப்புகள் ஒன்றிணைந்து, அந்த போரின் 200வது நினைவுநாளில் ஒரு கூட்டமைப்பை உருவாக்கி புதிய பேஷ்வாத்தனமான இந்துத்வ பார்ப்பனிய ஆட்சியின் எழுச்சிக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிட்டனர். அவர்களின் நெடும்பயணம், டிசம்பர் 31ல் புனேயின் சனிவார்வாடாவில் எல்கார் மாநாடாக எழுந்து நின்றது. இந்துத்வ சக்திகளுக்கு எதிராக போராட உறுதியேற்பது கண்டிப்பாக பாராட்டுக்குரிய விசயம்தான். ஆனால், அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் உத்தி அடையாளங்களை இல்லாதொழிப்பதற்கு மாறாக, அதை மீண்டும் நிலைநிறுத்துகிற அளவுக்கு மிகப்பெரிய அளவில் எதிர்விளைவுகளையே ஏற்படுத்துகிறது.

“அதிமுக அரசுக்குத் தலித் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” – திருமாவளவன்

வரலாற்றை பொறுத்தவரை, விசுவாசம் மற்றும் நேர்மைக்காகவும், குறைந்த கூலி உள்ளிட்ட காரணங்களுக்காக கிழக்கியந்திய கம்பெனியானது,  அவர்களுடைய விகிதத்திற்கு அதிகமாகவே தலித்துகளை தங்களுடைய  படையில் சேர்த்துக் கொண்டது. வங்காளத்தில் நாமசூத்திரர்களும், மெட்ராசில் பறையர்களும், மகாராஷ்டிராவில் மகர்களும் விகிதத்திற்கு அதிகமாக இருப்பதை ஒருவரால் எளிதாக ஆவணங்களிலிருந்து கண்டுகொள்ள முடியும். ஆகையால், இந்தியாவில் நிறுவப்பட்ட பிரிட்டிஷ் பேரரசில் தலித்துகள் குறிப்பிடத்தக்க பங்கை கோருவது பொருத்தமற்றதாக இருக்காது. ஆனால், இராணுவ பங்களிப்புக்கு சாதி ஒழிப்பு முத்திரை குத்துவது வரலாற்றுப்பூர்வமாக இருக்காது.

1757ல் பிளாசி போரில் தொடங்கி கிழக்கிந்திய கம்பெனி பல்வேறு போர்களில் வென்றிருக்கிறது. எல்லாமே பேஷ்வாக்களுக்கு எதிரானதில்லை. பெரும்பாலானவை இந்துக்களுக்கு எதிரானது கூட இல்லை. அந்த போர்கள் எல்லாம் இரண்டு ஆளும் சக்திகளுக்கு இடையே நடந்த போர்கள் மட்டுமே, அதில் ஈடுபடுத்தப்பட்ட வீரர்கள் தங்கள்  எஜமானர்களுக்கு செய்யும் கடமையென கருதியே போரிட்டார்கள்.

அந்த செயல்பாட்டை சாதிக்கெதிராகவோ, மதத்திற்கெதிராகவோ புரிந்து கொள்வதென்பது  அடிப்படையில் தவறு என்பது மட்டுமல்ல, சாதி பற்றிய வரலாற்று புரிதலிலும் தவறாக வழிநடத்திவிடும் அபாயமிருக்கிறது. தலித்துகள் மத்தியில் குறிப்பிடத்தக்க அளவில் கல்வி பரவிய 19ம் நூற்றாண்டில் இறுதிவரை  சாதி என்பது மக்களின் எதார்த்த உலகமாகவே இருந்தது. அவர்கள் சாதியை இயற்கை ஒழுங்காக கருதி, ஒடுக்குமுறைகளை தங்களது விதியென ஏற்றுக் கொண்டனர். அவ்வகையில், சாதிக்கெதிரான எதிர்ப்புணர்வுக்கு சாத்தியமேயில்லை எனும் போது, யுத்தம் என்பதை பற்றி சிந்திப்பதற்கு இடமேயில்லை.

வீரத்தீரமான இவ்வகை தொன்மங்களுக்கு முரணாக, பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிரான இராணுவ வழியிலான எதிர்ப்புணர்வுக்கு எந்த ஆதாரமும் இல்லை

போருக்கான இராணுவத்தை தயார் செய்வதில் தூய்மையான சமுதாய பின்னணி ஒரு கருத்தாக செயல்படவில்லை.  ஒப்பீட்டளவில் பிரிட்டிஷ் இராணுவத்தில் தலித்துகள் அதிக விகிதத்தில் இருந்தார்கள் என்றாலும், இஸ்லாமிய மற்றும் மராத்தாக்களின் இராணுவத்தில் அவர்கள் இடம்பெறவேயில்லை என்று கூறிவிட முடியாது. சாதிகளை பொறுத்தமட்டில் எல்லா சாதியினரும், எல்லா இராணுவத்திலும் இடம்பெற்றிருந்தனர். கோரேகான் யுத்தத்தில்  பேஷ்வாக்களின் இராணுவத்தில் இருந்த மூன்று காலாட்படைகளில் ஒன்று அராபியர்களுடையது, அவர்களுடைய படையணி மூர்க்கமாக போரிட்டு, அதிகமான இழப்புகளை சந்தித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

அவர்களது நோக்கம் என்னவாக இருந்திருக்கும்? பார்ப்பன பேஷ்வாக்களின் ஆட்சியை ஒழித்து கட்ட வேண்டும் என்பது அவர்களது நோக்கமாக இருந்திருக்குமா? உண்மை என்னவென்றால், இராணுவ வீரர்கள் என்ற முறையில் தங்களது எஜமானர்களுக்காக போரிட்டார்கள், அதுவேதான் தலித்துகளுக்கும் பொருந்தும். இதற்கு அப்பால் அவர்களுக்கு நோக்கம் கற்பிப்பது தவறானதாகும்.

’ராம்விலாஸ் பாஸ்வான் என்னும் தலித் ராமன்’ -ஆனந்த் டெல்டும்டே

1818 ஜனவரி 1ம் தேதி நடைபெற்ற கோரேகான போருக்கு முன்னர் நடந்த ஆங்கிலோ-மராத்தா போர்களிலேயே பேஷ்வாக்கள் பலவீனமானவர்கள் ஆக்கப்பட்டார்கள். உண்மையில், புனேவுக்கு  தப்பி ஓடிவிட்ட பேஷ்வா பாஜிராவ்-II  வெளியிலிருந்து தாக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். பேஷ்வாவின் இராணுவத்தில் 20,000 குதிரைப்படை வீரர்களும், 8,000 காலாட்படை வீரர்களும் இருந்தார். அவர்களிலிருந்து இரண்டாயிரம் ஆண்கள் மூன்று காலாட்படை குழுவாக பிரிக்கப்பட்டனர். அதில் ஒவ்வொரு படையிலும் 600 அராபியர்கள், கோசைன்களும் மற்றும் இராணுவ வீரர்கள் இருந்தனர், அவர்கள் தாக்குதலில் முன் நின்றனர். பேஷ்வா படைவீரர்களில் திறமையானவர்கள் என்று கருதப்பட்டவர்களே  அராபியர்களே, தாக்குதல் தொடுத்தவர்களில் பெரும்பகுதியினர் ஆவர்.

கம்பெனியின் படையணியை பொறுத்தமட்டில் 834 ஆண்கள் இருந்தனர், அவர்களில் 500 பேர் மும்பை உள்ளூர் இராணுவ ரெஜிமெண்டின் இரண்டாவது படையை சார்ந்தவர்கள்.
அறுதியிட்டு சொல்லும்படியாக தரவுகள் இல்லையென்றாலும், எல்லோரும் மகர்கள் என்று சொல்வதிற்கில்லை. இழப்புகளை வைத்து மதிப்பீட்டால், போரில் இறந்தவர்களில் பெரும்பான்மையினர் (49ல் 27) மகர்கள் இல்லை. ஜெனரல் ஜோசப் ஸ்மித் தலைமையிலான பெரிய படையணி வந்துவிடக்கூடும் என்ற அச்சத்தால் பேஷ்வாக்களின் இராணுவம் இறுதியாக பின்வாங்கியது. இந்த தரவுகளை முன்வைத்து புரிந்து கொள்ள முயலும் போது, அது பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிராக மகர்களின் பழிவாங்கும் திட்டம் என்று புரிந்து கொள்வது தவறாக முடியும்.

பேஷ்வாக்களின் தோல்விக்கு பிறகு, மகர்களுக்கு ஆசுவாசம் பட்டுக்கொள்ள ஏதேனும் கிடைத்ததாக எந்த விபரங்களும் இல்லை. உண்மையை சொல்லப்போனால், சாதிய ஒடுக்குமுறை தடையின்றி தொடர்ந்தது. முன்னரே குறிப்பிட்டதை போல, நன்றியுணர்ச்சியில்லாத பிரிட்டிஷார் மகர்களின் கடந்த கால வீரமிக்க பங்களிப்புகளை அங்கீகரிக்க மறுத்ததோடு, அவர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதையும் நிறுத்திக் கொண்டனர். முதல் உலகப் போரின் அச்சுறுத்தல் வரும் வரை, தங்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற மகர்களின் குரலுக்கு பிரிட்டிஷார் செவிமடுக்கவில்லை.

காலனிய பிரிட்டிஷ் ஆட்சி தலித்துகளுக்கு எண்ணற்ற பலன்களை கொண்டு வந்தது மட்டுமில்லை, தலித் இயக்கத்தின் தோற்றத்திற்கும் அது உதவியது என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால், அவை ஏதும் காலனியத்தின் திட்டத்தில் கிடையாது என்பதையும், காலனிய நிகழ்ச்சிப்போக்குக்கு உட்பட்டது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், தலித்துகள் இந்த உண்மையிலிருந்து தங்கள் பார்வையை திருப்பி கொள்கிறார்கள் என்பது கெடுவாய்ப்பானது

அதேபோல, பேஷ்வாக்கள் மராத்தா கூட்டமைப்பை சார்ந்தவர்கள் என்பதால் அவர்கள் தேசபக்தி கொண்ட சக்திகள் என்றும், அவர்களை தோற்கடித்த பிரிட்டிஷார் ஏகாதிபத்தியவாதிகள் என்றும் புரிந்து கொள்வதும் தவறானதாகும். இல்லாத நாட்டின் கண்ணாடியை அணிந்து அதன்வழியே வரலாற்று தரவுகளை பரிசீலிப்பதும் கண்டனத்திற்குரியதே ஆகும். இந்திய தேசம் என்றொரு கருத்துரு இருந்ததில்லை, என்றாலும், எதார்த்தத்தில் அது நமக்கு பிடிகொடாமல் தப்பித்துக் கொண்டே இருக்கிறது .  துணைகண்டத்தின் மக்களிடையே ஒரு அரசியல் ஒற்றுமையை  கட்டியெழுப்பி உருவாக்கப்பட்ட இந்தியா என்பதே ஆங்கிலேயர் வழங்கிய பரிசுதான் என்பது முரண்பாடுதான். ஆனால், அதை தேசமென்ற பொருளில் தங்களுடைய சுயநலனுக்காக கட்டமைக்கும் சுயநல பேர்வழிகள், அந்த கருத்தை பேஷ்வாக்களை போலவே  துஷ்பிரயோகம் செய்யும் தேசவிரோதிகள் என்றே கூறலாம்..

தலித்துகள் இந்துத்வ கும்பலால் உருவாக்கப்பட்ட புதிய பேஷ்வாயியத்தை எதிர்த்து போராட வேண்டும். அதற்கு, தீக்கோழி மணலில் புதைத்துக் கொள்வதை போல, கற்பித வரலாற்றில் மனம் புதைத்து, கடந்த காலத்தில் பெருமைகளை தேடிக் கொண்டிராமல் உண்மைகளை பார்க்க விழித்துக் கொள்ள வேண்டும்.

 

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்