Aran Sei

சோழர் காலத்து மக்களாட்சி – நினைவுபடுத்திய நரேந்திர மோடிக்கு நன்றி

ன்றைய ஜனநாயக மரபுகள், ‘மாக்னா கார்ட்டாவை’ (1215 ஆம் ஆண்டு, இங்கிலாந்தில், அரசருக்கும், மக்களுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம்) முந்தியது என்று, உத்திரமேரூர் கிராம சபை அரசியல் அமைப்பை மேற்கோள்காட்டி, புதிய நாடாளுமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதை நான் கேள்விபட்டபோது ஒரு தமிழனாக எனக்கு எரிச்சல்தான் ஏற்பட்டது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் செயல்பட்டு, கனத்த வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களில் ஆழமாக புதைக்கப்பட்டு விட்ட இந்த கிராம அவைகளில், அவரை கவர்ந்தது எதுவாக இருக்கும்? நான் உற்சாகப்படும் அளவு பிரதமர் அதிகமாக அந்தத் தலைப்பில் பேசவில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மக்களாட்சி நிறுவனங்கள் இந்தியாவில் செழித்து வளர்ந்து இருந்தன என்பது குறித்தும், தேர்ந்தெடுக்கப்படும் நிலையிலேயே பிரதிநிதிகள், வாக்காளர்களால் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்பது குறித்தும், அவர் சற்றே நாட்டு மக்களின் நினைவைத் தூண்டி விட்டதாகத் தெரிகிறது.

கடவுளின் பெயரால் நடைபெறும் ஆட்சிக்கு தயாராகிறதா இந்தியா? – ராஜ்ஸ்ரீ சந்திரா

புதிய நாடாளுமன்ற கட்டிடம் ‘இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்திற்கு’ ஒரு சிறந்த சான்றாக இருக்கும் என்ற தனது எதிர்பார்ப்பிற்கு முட்டுக் கொடுக்க, உத்திரமேரூர் பெயரை இழுத்திருந்தால், அந்த அவசர செயல் பொருத்தமற்றது என்பதைவிட, போதுமானதல்ல என்றுதான் கூற வேண்டும்.

சென்னைக்கு அருகில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள எளிமையாக, இன்னும் இவ்வுலகில் இருக்கும் அந்த கிராமத்தில் நிலவி வந்த மக்களாட்சி முறைக்கும், நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்துவ மக்களாட்சி என்று இன்று கூறப்படும் மக்களாட்சி முறைக்கும் எந்த பொருத்தமும் இல்லை.

மக்களாட்சி முறைக்கு இந்தியா தாய் என்பது உண்மை. ஆனால் மக்களாட்சி என்பது அவ்வப்போது தேர்தல்களை நடத்துவது மட்டுமல்ல. இன்று கொண்டாடப்படும் அந்த உத்திரமேரூரில், எடுத்துக்காட்டாக கூற வேண்டுமெனில், கி.மு. 922 ல், அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட 30 வார்டுகளையும், அதே எண்ணிக்கையில் வாரியங்கள் எனப்படும், துணைக் குழுக்களையும் கொண்டிருந்தது.

உத்திரமேரூர் சட்ட அவை பிரநிதிகளின் தன்மை/தகுதிகள்

இன்றைய தேர்தல் முறையிலிருந்து மிகப் பெரிய வேறுபாடாக அன்றைய தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், ஊதியமில்லாமல் மரியாதைக்காக பணியாற்றினர், உழைக்கும் மக்களாக இருந்தனர், தங்கள் ஓய்வு நேரத்தின் ஒரு பகுதியை நிர்வாகத்திற்காகக் செலவிடுபவர்களாக இருந்தனர். ‘சொந்த வீடு இருப்பதும், சொந்தமாக சிறிது நிலம் வைத்திருப்பதும்’ மன்றத்தில் அமருவதற்கான தகுதியாக இருந்தது. 35 வயதிலிருந்து 70 வயது வரை உள்ளவர்கள் போட்டியிடலாம் என்றும், ஒருமுறை பணியாற்றியவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஒதுங்கி இருக்க வேண்டும் என்றும் வகுக்கப்பட்டிருந்தது. அதிகமாக வரிவசூலிப்பது வெறுக்கப்பட்டதுடன், குறிப்பிட்ட அளவுக்கு அதிகமான செலவுகளுக்கு, மகாசபையின் அனுமதி பெறவேண்டும் என்று இருந்தது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு

ஒவ்வொரு அவையும் தனித்தனியே, தேர்ந்தெடுக்கப்படும் நடைமுறை, தேர்தல், தேர்ந்தெடுத்தவரை திரும்பி அழைத்தல், அல்லது வேட்பாளர்களை நிராகரிப்பது ஆகியவற்றை வரையறுக்கும், சொந்த அரசியலமைப்பைக் கொண்டிருந்தன. கிராமங்கள் முழுவதற்குமான சீரற்ற வேகத்தில் அவை வளர்க்கப்பட்டு இருந்தாலும், அவை மிக எளிமையானவையாகவும், பகுதி பகுதியாகவும் தோன்றின. இந்த அவைகளின் தீர்மானங்கள், அரசரின் கட்டளைக்குரிய மரியாதையை மற்றும் புனிதத்தன்மையைப் பெற்றிருந்தன‌. அரச நிர்வாகமே கூட, மிக அரிய சந்தர்ப்பங்களில் மட்டுமே அதன் விவகாரங்களில் தலையிட்டது. இந்நிலை, பிற்கால சோழர்கள் காலம் வரை நீடித்தது.

ஆர்வமூட்டும் வகையில், கிராம நிர்வாகத்தின் கீழ், தங்க மதிப்பீட்டுக் குழுவின் உதவியுடன் கூடிய, தங்கக் குழு ஒன்று இருந்தது. ஒருவேளை, அப்போது அருகில் உள்ள கோவில்களுக்கு தங்கமாக நன்கொடை அளிப்பது அதிகமாக இருந்ததால், அதனை பராமரிக்க இவை இருந்திருக்கலாம்‌. நில உடைமையாளர்களின் நலனை விட, வணிக நலன்கள் அதிகமாக இருந்த இடங்களில், நகரத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர அவை, ஆதிக்கம் பெற்ற அவையாக இருந்தது. ஆனால் அவை, கிராம அவைகளுடன் அமைதியாகவே, இணையாக பணியாற்றின. இதன் விளைவாக, அதில் வரையறுக்கப்பட்ட வாக்குரிமை மற்றும் வர்க்க மோதல்கள் இருந்தபோதும், பல வரலாற்றாசிரியர்களும் துவக்க கால இந்திய வரலாற்றின் பக்கங்களுக்கு, இந்த அவைகள், நிரந்தர நினைவுச் சின்னங்களாக இருப்பதாக அறுதியிட்டு கூறுகின்றனர்.

பரந்து விரிந்த புதிய நாடாளுமன்ற கட்டிடம், நமது பண்டைய மக்களாட்சி முறையின் மதிப்புகளையும், வளமான உள்ளுணர்வுகளையும் மீட்டெடுக்குமா? மிகவும் சந்தேகம்தான். இன்றைய பிரதிநிதித்துவ மக்களாட்சி முறை, உத்திரமேரூரில் இருந்ததன், நலிந்த வடிவம்தான். 1951-52 ல் நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில், வரையறுக்கப்பட்ட வாக்குரிமை என்றில்லாமல், அனைவருக்கும் வாக்குரிமை என்பது மட்டுமே இன்றைய தேர்தல் அமைப்பு முறையில் இருக்கும் ஒரே ஒரு முன்னேற்றமான கூறு.

சமகால அரசியல்

ஆனால், பிரதிநிதித்துவம் பற்றிய அனைத்து பேச்சுகளும், இன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என்று பெயரளவில் மட்டுமே இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், அரசியல் கட்சிதான் ஒருவருக்கு தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பைத் தருகிறது. அதனால், அவர் கட்சிக்குக் கடமைப்பட்டவர். கட்சிக் கொறடாதான் எதற்கு வாக்களிக்க வேண்டும என்று  கட்டளையிடுகிறார். மக்களுடனான ஆலோசனை இல்லை என்பதே, இன்றைய ‘பிரதிநிதித்துவ’ மக்களாட்சி, ‘பிதிநிதித்துவமற்றதாக’ இருக்கிறது என்பதற்கு சிறந்த சான்றாகும். 1,100 ஆண்டுகளுக்கு முன் உத்தரமேரூரில் இருந்தது போல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் முறையாக செயல்படத் தவறினால் அவரைத் திரும்பி அழைத்துக் கொள்வதைப் பற்றி இன்று கனவு கூட காணமுடியாது.

“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்

இதற்கு, குறிப்பிட்டத் தொகுதியில் அல்லது மாநில அளவில் அல்லது தேசிய அளவிலும் கூட தேர்தலைப் போல ஒரு அணிதிரட்டல் தேவைப்படும் என்பது ஒரு சாக்காகக் கூறப்படுகிறது. ஆனால் இது பல நாடுகளில் அடிக்கடி பல நேரங்களில் நடைமுறை சாத்தியம் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் பெரிய வணிக நிறுவனங்களின் நிதிக் கட்டுப்பாட்டில் உள்ளன. இதனால் தங்களுக்கு பிடித்த பந்தய குதிரை(வேட்பாளர்) வென்றவுடன், தங்கள் முதலீட்டை இரட்டிப்பாகவோ மும்மடங்காகவோ உயர்த்திக் கொள்ளலாம். இது அந்தக் காலத்தில் பண முதலைகளாக இருந்த செட்டியார்கள் சமூகத்தினால் சிந்தித்துப் பார்க்க முடியாதது. மோசமான தேர்தல் வாக்குறுதிகள், செயல்திறன், ஊழல் ஆகியவை உத்திரமேரூர் அவை உறுப்பினர்களால் நிச்சயமாக வெறுக்கப் பட்டவை என்பது அந்த கால கல்வெட்டுக்களை நம்புபவர்களுக்குத் தெரியும்.  இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையின் தப்பிக்க முடியாத ஒன்றாகி விட்ட, தங்களது பதவியே தங்களை தண்டனையிலிருந்து பாதுகாப்புத் தரும் என நம்புபவர்களால் தூண்டிவிடப்படும் வன்முறையும், அது போன்றுதான் இருக்க முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மக்களே எசமானர்கள்  என்ற நிலையிலிருந்து வெகு தூரம் விலகி, அது தலைகீழாக்கப்பட்டு, இன்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவர்களது பொறுப்பைக் குறித்து சிறிய அளவில் கேள்வி கேட்டாலே, செருக்குடன் அணுகும் போக்குத்தான் இந்த அமைப்பில் உள்ளது.

அன்று, உள்ளூர் (கிராம) அதிகாரிகளுக்கு வரி வசூலிக்கவும்,  ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள்  ஆகிய உள்ளூர் வளங்களை பராமரிக்கவும் அதிகாரம் இருந்தது. இதனுடன் ஒப்பிட்டால், வெற்று குண்டுகளாகவே இருக்கும் இன்றைய பஞ்சாயத்துகள், பெயரில் மட்டுமே ‘மூன்றாம் அடுக்கு அரசாங்கங்கள்’ என்று கூறப்படுகின்றன.

இப்போதைய வாதம், அன்றிருந்ததை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதல்ல. நிச்சயமாக, 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்றாற்போல், நவீனமானதாக, பொருத்தமானதாக மாற்றித் தரப்பட வேண்டும். ஆனால், கெடுவாய்ப்பாக நமது மக்களாட்சி எல்லா வகையிலும் ஒத்திசைவற்றதாகிவிட்டது. அது ஆதி காலத்திற்குப் பின்னோக்கிச் செல்கிறது.

அன்பு பிரதமர் அவர்களே, நாம் ஒரு காலத்தில் மக்களாட்சியைப் பெற்றிருந்தோம் என்று நினைவுபடுத்தியமைக்கு நன்றி!

(www.thewire.in இணையதளத்தில் ராகவன் சீனிவாசன் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்